வெள்ளி, 28 டிசம்பர், 2007

சிவனும் சிவனடியாரும்

சுந்தரமூர்த்தி அர்த்த சாம பூசையை முடித்து விட்டு, கருவறையினை மூடும் பொழுது சிவலிங்கம் ஆடுவது போலிருந்தது. தூக்க கலக்கத்தில் இருக்கும் பொழுது, எப்பொழுதும் அவர் கண்களுக்கு அப்படி தான் தெரியும்.
"சுந்தரமூர்த்தி!!"
'வீட்டுக்கு நேரமாகுது. இப்ப போய் ஏதோ ஏதோ தோனுது..' என்று பூட்டுவதை துரிதமாக்கினார்.
"உனக்கு த்ரேதா யுகத்தில் கொடுத்த வாக்கு படி, உனக்கு காட்சி கொடுக்க வந்திருக்கேன். அவசரமாக எங்கே செல்கிறாய் சுந்தரமூர்த்தி?"
சுந்தரமூர்த்தி சிறிது நேரம் கண்ணை கசக்கி கொண்டு சிவனே என்று பார்த்துக் கொண்டிருந்தார். கதவு வழியாக கங்கை நீர் வந்து சுந்தரமூர்த்தியின் காலை நனைத்தது. எல்லாம் உண்மை தானோ என்று பதறி கதவை வேகமாக திறந்து சாஷ்டாங்கமாக சிவனாரின் காலில் விழுந்தார் சுந்தரமூர்த்தி.
பயபக்தியுடன் எழுந்து," அனைவரும் நல்லா இருக்காங்களா?" என்று விசாரித்தார் சுந்தரமூர்த்தி.
"அனைவரும் என்றால்?" என்று கேட்டு சிரித்தார் பெருமான்.
சிறிது நேரம் யோசித்து விட்டு, "தாங்கள், லோக மாதாவான அம்பாள், சிவக்குமாரர்கள், சிவ கணங்கள்" என்று இழுத்தார்.
"அனைவரும் நலம். உன் நலம் எப்படி?"
"ஈசுவரனான தங்கள் புண்ணியத்தில் நாங்கள் அனைவரும் நலம். ஆனால்..."என்று தொடராமல் நிறுத்தி விட்டார் சுந்தரமூர்த்தி.
"ஆனால்?"
"எப்பொழுதையும் விட தற்போது மக்களின் துன்பம் அதிகரித்து விட்டது. தாங்கள் மனம் வைத்தால் அவையனைத்தையும் தீர்த்து விடலாம்."
"ஆனால் அவையெல்லாம் அவர்களின் சென்ற பிறவி வினையின் தொடர்ச்சி. நான் குறுக்கிட முடியாது.உனக்கு ஏதாவது வேண்டும் என்றால் கேள்."
"தாங்களும் சாதாரண மனிதர் போல் பேசலாமா?"
"அது..சொன்னால் உனக்கு புரியாதே! நீ என் இடத்திற்கு வந்து பார்த்தால் தான் என் நிலைமை உனக்கு புரியும். வேண்டுமானால் இன்று நீயும் என்னுடன் சிவலோகம் வா. இல்லையென்றால் நீயும் நாத்திகனாகி விடப் போகிறாய்."
"எனது வீட்டில் தேடுவார்களே!"
சிவனார் சிறிது நேரம் யோசித்து விட்டு, "சரி, நான் உன் வீட்டிற்கு செல்கிறேன். நீ சிவலோகம் செல். விடியும் முன் நாம் இருவரும் மீண்டும் மாறி விடலாம்" என்றார்.

சிவன் வேடத்தில் சுந்தரமூர்த்தி சிவலோகத்திற்கு சென்றார். சிவலோகம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அறுபதாயிரம் வருடங்களுக்கு பிறகு பிறக்கப் போகிறவர்களுக்கு தலை எழுத்தினை எழுதிக் கொண்டிருந்தனர். நான்கு முகம் கொண்ட பிரம்மா எழுத்து பணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். சிவனைப் பார்த்தவுடன் மரியாதை நிமித்தமாக எழுந்து புன்னகை புரிந்தார். சுந்தரமூர்த்தியும் பதிலுக்கு சிரித்து வைத்தார். சுந்தரமூர்த்தி பக்கமாக நாராயணன் வேகமாக வந்தார்.
"நீங்கள் வரம் கொடுத்த அசுரனை நான் பதினேழாவது அவதாரத்தில் சிவ பக்தனாக வந்து அழிக்கனும் என அனைவரும் பிரியப்படுகின்றனர். தங்களிடம் நான்முகன் இது பற்றி பேசினாரா?"
"பூலோகத்தில் தற்போது நிறைய பிரச்சனை நிலவுகிறதே!" என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் சுந்தரமூர்த்தி.
"ஆமாம்..நான் கல்கி அவதாரம் எடுக்கும் சமயம் வந்து விட்டது போலிருக்கு."
"ஆனால் அசுரர்கள் என்று யாரும் இல்லையே! தாங்கள் அவதரித்து என்ன செய்வீர்கள்?" என்று தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை கேட்டார் சுந்தரமூர்த்தி.
"தங்களின் சாபம் காரணமாக சிவ கணம் ஒன்று பூலோகத்தில் பிறக்கப் போகிறதே! அப்படி தானே நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாம் கலந்தாலோசித்து எழுதினோம். அந்த அசுரனின் அட்டூழியம் எல்லை மீறும் பொழுது நாம் அவனை அழித்து உலகினை காப்போம்."
'அடப்பாவமே! இனிமே ஒரு அசுரன் வேறு பிறந்து அட்டூழியம் பண்ணுவானா?'

சிவன் சுந்தரமூர்த்தியாக மனித உருவெடுத்து வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் ஒரு நிசப்தம் நிலவியது. எப்பொழுதும் சத்தமாக இருக்கும் வீடு அமைதியாக இருந்தால், சின்னவன் ஏதாவது தவறு புரிந்திருப்பான் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத விதி. அதற்கு தகுந்தாற்போல், சின்னவன் காலில் இரத்த கறையுடன் கட்டு இருந்தது.
"என்னடா இது?" என்று சுந்தரமூர்த்தியாய் முழுவதும் மாறின சிவனார் அதட்டலான குரலில் கேட்டார்.
"விளையாடுறப்ப அடிப் பட்டுடிச்சு."
"படிக்காம ஏன் விளையாட போன?"
"விளையாடிட்டு வந்து படிச்சா நல்லதுன்னு மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லுது. அப்ப தான் மூளை சுறுசுறுப்பா இருக்குமாம். மண்ணுல விளையாடுற பசங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகுதாம்."
"தப்பு செஞ்சுட்டு அதுக்கு வியாக்கியானம் வேறு தர்றியா?" என்று நெற்றிக் கண் திறக்காத குறையாக கேட்டார்.
"நான் சொல்றதுல இருக்கிற தாத்பரியத்த புரிஞ்சிக்கோங்க. கருவறைக்குள்ள சிவனை பார்த்தால் சிவன், கல்லை பார்த்தால் கல். அந்த மாதிரி நீங்க கொஞ்சம் என் நிலையில் இருந்து யோசியுங்க."
'என்ன ராசியோ தெரியல...எனக்கு சின்ன பையனா யார் வந்தாலும், புத்தி சொல்றதிலியே குறியா இருக்காங்க.'

புதன், 19 டிசம்பர், 2007

எதிர்கரை

"அண்ணா தூங்கிட்டியா?"
கண்களும், நினைவுகளும் மெல்ல சுருங்கி புதிய உலகத்தின் வாசற்படியில் கால் வைக்கப் போகும் பொழுது, பட்டென்று கார்த்திக்கை அவன் தங்கையின் குரல் இழுத்து வந்து விட்டது. இதே போன்ற சூழ்நிலையில், பெற்றோர் எழுப்பியிருந்தால் கார்த்திக் முறைத்தவுடன் அங்கிருந்து நகர்ந்துக் கொள்வார்கள். ஆனால் தங்கையை முறைத்தால், தலை முடியை பிடித்துக் கொண்டு,'என்னடா முறைக்கிற!' என்று கொட்ட ஆரம்பித்து விடுவாள். கண்ணை கசக்கிக் கொண்டே, என்னவென்று தலையை ஆட்டி கேட்டான்.
"உங்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்று வாசற்படியை ஒட்டியபடி தலை குனிந்துக் கொண்டு நின்றாள்.
தலை குனிவை கண்டு கனவு காண்கிறோமோ என்ற சந்தேகம் கார்த்திக்கிற்கு வந்து விட்டது. இருந்தாலும் சற்று தைரியமாக, "ச்சீ..லூசு! போடி காலையில பேசிக்கலாம்" என்று படுத்துக் கொண்டான். இது கனவாக இருந்தால் உதை விழாது. அவள் உண்மையாகவே எழுப்பி, இவன் திட்டியிருந்தால், இந்நேரம் மேலே விழுந்து சண்டைப் போட்டிருப்பாள்.
'இவ்வளவு நேரம் அடிக்காம இருக்கிறத பார்த்தா, இது கனவு தான் போலிருக்கு' என்று ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தான். அவள் இன்னும் வாசலிலயே நின்றுக் கொண்டிருந்தாள். சட்டென்று எழுந்து அமர்ந்துக் கொண்டான். அவள் குனிந்த தலை நிமிரவே இல்லை. கார்த்திக் தொண்டையை சரி செய்து, தான் விழித்துக் கொண்டிருப்பதை அவளுக்கு உணர்த்தினான். மின் விசிறி ஓடும் சத்தத்தை தவிர, வேறு எதுவும் சில நிமிடங்களுக்கு அந்த அறையில் எதுவும் கேட்கவில்லை.
நிதானமாக அங்கு நிலவிய மெளனத்தை கிழித்து, "நான் உன் ப்ரென்ட் சரவணன லவ் பண்றேன்" என்றாள் மெல்லிய குரலில்.
அரை தூக்கத்தில் இருந்தவன், அவள் சொன்னதைக் கேட்டு தூக்கி வாரி போட்டது போல் முழுவதுமாக எழுந்தான்.
"சரவணனா? அவன் ரொம்ப நல்லவனாச்சே!"
இன்றைய தினத்தில் நல்லவன் என்று பெயர் எடுத்தவனை தான் கெட்டவன் போல் பார்ப்பார்கள்.
"எவ்வளவு நாளா?"
அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. எதிர்பார்த்தது தான். எதுவும் அவளாக தான் சொல்வாள். கேள்வி கேட்டால் அவளுக்கு பிடிக்காது.
சிறிது நேரம் யோசித்து விட்டு, "நான் போய் வேணும்னா சொல்லட்டுமா?" என்று கேட்டான்.
"அதெல்லாம் வேணாம். நானே பார்த்துக்கறேன். சும்மா உங்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
'சொல்லனும்னா தோனுச்சா?' என்று அதிசயித்து படுத்துக் கொண்டான். ஆனால் தூக்கமே வரவில்லை. தன் தங்கையின் தைரியத்தைக் கண்டு வியந்தான். இவனும் தான் பின் வீட்டு சுபாவை காதலிக்கிறான். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. தனக்கு தன் தங்கை பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் அடுத்த நாள் காலையில் விடிந்தவுடன் சுபாவை பார்த்து சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தான். ஓரே வகுப்பில் தான் படிக்கிறாள். வகுப்பில் சொன்னால் ரம்யாவிற்கு தெரிந்து விடும். ரம்யாவிற்கு தெரிந்தால் சும்மா விட மாட்டாள். இதுவரை எதுவும் மறைத்ததில்லை. பள்ளியில் இருந்தே நிழல் போல் உடன் வரும் தோழி அல்லது தொல்லை. அப்படியே ஏதோ ஏதோ நினைத்துக் கொண்டே தூங்கி விட்டான்.

எப்படியோ காலையில் சீக்கிரம் எழுந்துக் கொண்டான். சுபாவிற்காக சுவர் அருகே காத்திருந்தான். அப்படியே நின்றுக் கொண்டே தூங்கினான்.
"என்ன... இன்னும் தூக்கம் கலையலையா?" என்று சுபா வந்து எழுப்பினாள். அசட்டுத்தனமாக சிரித்தான் கார்த்திக்.
"சரி...உங்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்றாள் சுபா.
'ஒருவேள நம்மள மாதிரி தானோ!' என்று அதிசயித்தான். பழன் நழுவி பாலில் விழ போகிறது என மகிழ்ந்தான்.
"நம்ம சரவணன் இல்ல..." என்று ஆரம்பித்தாள். இது ஒன்று போதாதா! கார்த்திக்கிற்கு சகலமும் புரிந்தது. யாரோ நெஞ்சை அழுத்துவது போலும், கண்கள் இருண்டது போலும் இருந்தது.
சுதாரித்து கொண்டு, "நீ அவன லவ் பண்ற... அதானே!" என்று கேட்டு சிரிக்க முயன்றான்.
"ஐயோ...! அதெல்லாம் இல்ல."
"சரி...நம்பிட்டேன்."
"அவன்கிட்ட ஒரு புக் கேட்கனும். நான் இதுவரைக்கும் பேசினதில்லை. அதான் நீ ஹெல்ப் பண்ணுவேன்னு கேட்டா...இப்படி பேசுறியே!"
"ஐ..அதான் உன் கதை காலேஜூக்கே தெரிஞ்சுடுச்சே!"
"ஐய்யய்யோ... நன் இன்னும் யாருகிட்டயும் சொல்லவே இல்லியே?"
"அப்ப உண்மன்னு ஒத்துக்கிற" என்று சிரித்தான்.
"இல்ல" என்று சிரித்து விட்டு, "ஏய்..ப்ளீஸ்ப்பா யாருகிட்டயும் சொல்லிடாத. முக்கியமா ரம்யா கிட்ட சொல்லிடதா" என்று வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

"என்னாச்சு ரொம்ப டல்லடிக்கிற?" என்று கேட்டாள் ரம்யா.
"எல்லாம் தப்பு தப்பா நடக்காம சரியா நடக்கிறதால...எல்லாம் தப்பா தெரியுது."
"ச்சே...இதுக்கா ஃபீல் பண்ற?"
"சரி, உனக்கும் ரேவதிக்கும் என்ன சண்டை?"
"உங்கிட்ட சொல்லல? நம்ம கிளாஸ் சரவணன ப்ரொப்போஸ் பண்ணி ஃபெயிலியர் ஆயிடுச்சு ரேவதிக்கு. ரொம்ப அழகின்னு நினைப்பு. "என்னாலயே முடியல...வேறு யாரால முடியும்?'னு கேட்டா. 'என்னால முடியும்டி'ன்னு சவால் விட்டிருக்கேன்."
இரவில் இருந்து ஒரே பெயரை மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் எங்க போய் முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். தன்னையும், சரவணனையும் ஒப்பிட்டு பார்த்தான்.
"ஏய்...ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்கிற?"
"பார்த்து. விளையாட்டு வினை ஆயிடப் போகுது."
"என்னால முடியாதுன்னு நினைக்கிறியா?" என்று கேட்டாள்.
"அப்படியில்ல. சொல்ல தெரியல. சரி, ஒருவேள க்ளிக் ஆயிடுச்சுன்னா....என்ன பண்ணுவ?"
"ரொம்ப நல்லதா போச்சு...அப்படியே செட்டில் ஆயிடுவேன்" என்று சிரித்தாள்.
ஒரே நாளில் கார்த்திக்கிற்கு தனி ஆள் ஆகி விட்டது போலிருந்தது. கைக்கு அருகில் இருந்தவர்கள் எல்லாம் இன்று சரவணனோடு உள்ளனர். தான் யாருக்கும் வேண்டாதவனாகி விட்டதாக எண்ணி வருந்தினான்.

ஒரு வாரம் யாரிடமும் பேசாமலும், குறிப்பாக அந்த மூவர் கண்ணில் படாமல் இருக்கவும் பெரிதும் முயன்றுக் கொண்டிருந்தான். திடீரென்று வழியில் வந்த சரவணன், கார்த்திக்கை தடுத்து நிறுத்தினான். கார்த்திக் விலக முயற்சித்தும் முடியவில்லை. நீண்ட நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர். கார்த்திக் வேண்டா வெறுப்பாக நின்றுக் கொண்டிருந்தான்.
"ஆனா...உன்ன பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குடா."
ஆச்சரியத்தில் மூழ்கிய கார்த்திக், "ஏன்?" என்று கேட்டான்.
"ரொம்ப ஜாலியான லைஃப்டா உன்து. சண்ட போடுறதுக்கு வீட்ல தங்கச்சி, எல்லாத்தையும் மனசு விட்டு ஷேர் பண்றதுக்கு ரம்யா மாதிரி ஒரு நல்ல ஃப்ரென்ட், எந்த டவுட்டா இருந்தாலும் க்ளியர் பண்றதுக்கு பின்னாடி வீட்ல சுபா இருக்கா. ஆனா என்னை பாரு. தனிமை. மனசு விட்டு பேசுறதுக்கு ஆள் இல்ல. யாருக்கும் என்னை பிடிக்க மாட்டேங்குது. நம்ம க்ளாஸ் ரேவதி கூட என்னை லவ் பண்றதா கிண்டல் செய்றா. உடனே மத்த கேர்ல்ஸ் எல்லாம் சிரிக்கிறாங்க. எனக்கு எதுவுமே பிடிக்க மாட்டேங்குது" என்று ஒரு மாதிரி வருந்துவது போல் பேசினான் சரவணன்.
கார்த்திக் கதி கலங்கி போனான்.
'என்ன இவனும் ஃபீல் பண்றான்!' என்று நினைத்த கார்த்திக்கிற்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
"சாரிடா...எங்கயோ போன உன்ன வேற நிறுத்திட்டேன்."
"ஏய்...என்ன இது? சின்ன விஷயத்துக்கு எல்லாம் ஃபீல் பண்றியோன்னு தோனுது" என்று சரவணின் தோள் மேல் கை போட்டு அழைத்து சென்றான் கார்த்திக்.

திங்கள், 17 டிசம்பர், 2007

மேற்கு

'ஏன் நீ வேலைய விட கூடாதா?'

ஜான்சனிற்கு ஒன்றரை வயது இன்னும் முழுமையாக ஆகவில்லை, ஆனால் அவன் உடைத்த பொருட்களின் விலை ஒன்றை லட்சத்தை தாண்டியது. ஜெனிலியா இதற்காகவே அலுவலக விடுமுறையை ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்க வேண்டியதாகி விட்டது. ஜேம்ஸ் எவ்வளவோ சொல்லியும் ஜெனிலியா வேலையை விட சம்மதிக்கவில்லை. 

"இனிமே நீ வேலைக்கு போலாம்."

அமெரிக்காவில் பிரபலமாகி வரும் 'மிஸ்டர். மாம்' கலாச்சாரத்திற்கு ஜேம்சும் மாறி விட்டான். கட்டாய ஓய்வினை வாங்கிக் கொண்டு ஜான்சனை நேருக்கு நேராக சமாளிப்பதென முடிவுக்கு வந்து விட்டான்.   ஜெனிலியாவிற்கு இந்த முடிவு பிடிக்கவில்லை எனினும், ஜேம்சிற்கு ஜான்சனுடன் பொழுது நன்றாக போனது. வீட்டு வேலைகள் அனைத்தும் இரண்டு நாட்களிலயே பழகி விட்டது.  மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் மருத்துவ ஆலோசனைக்கு ஜான்சனை அழைத்து சென்றான் ஜேம்ஸ்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மருத்துவமனையில் இருந்து ஜெனிலியாவை தொடர்புக் கொண்டனர். ஜான்சனுக்கு தான் ஏதோ ஆபத்து போலிருக்கு என பதற்றத்துடன் மருத்துவர் முன் அமர்ந்திருந்தாள் ஜெனிலியா. மருத்துவர் சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு, "பதட்டப்படாம சொல்றத கேளுங்க. உங்க புருஷன் 'நெக்ரோபிலியா(Necrophilia)'வால பாதிக்கப்பட்டிருக்கார்" என்றார்.
"அப்படின்னா?" என்றாள் பயந்தவாறே.
"ம்ம்...அது ஒரு வகையான மன நோய். செத்தவங்க மேல ஏற்படற ஆசை. இன்னும் தெளிவா சொல்லனும்னா பிரேதத்தோட உறவு வச்சிப்பாங்க."
வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு எழுந்தாள் ஜெனிலியா.
"அவசரப்படாதீங்க. எங்கக்கிட்ட ஆதாரம் இருக்கு" என தனது கணினி திரையினை ஜெனிலியா பக்கம் திருப்பிய மருத்துவர் "இது மார்ச்சுவரியில இருக்கும் கேமராவுல பதிவாயிருக்கு" என்றார்.
ஜெனிலியாவிற்கு அழுகையாய் வந்தது. கண்களிலிருந்து வழிந்த நீரை துடைத்தப்படியே, "எதுவும் பண்ண முடியாதா?" என்று கேட்டாள்.
"இது ரொம்ப ரொம்ப ரேரான கேஸ். ட்ரை பண்ணலாமே தவிர முடிவ பத்தி சொல்ல முடியாது. நீங்க டைவர்ஸ் அப்ளை பண்ணீங்கன்னா நான் உங்களுக்கு ஃபேவரா ரிப்போர்ட் தர்றேன்."
"வேற வழி இல்லையா?"

"ஏன் உளர்ற? முதல்ல உட்காரு. இதெல்லாம் நான் ஈஜிப்ட் கதைல தான் கேட்டிருக்கேன். போயும் போயும் ஜேம்ஸ பண்ணுவானா இந்த வேலைய. லூசு, உட்காருன்னு சொல்றேனில்ல."
"எனக்கு பயமா இருக்கு."
"ஏன் அநாவசியமா பயப்படுற?"
"ஏன் நெக்ரோபிலியா வருது தெரியுமா? செத்தவங்க மேல பயம் இருந்தா அது வரும். ஜேம்சுக்கு இந்த பயம் சின்ன வயசுல இருந்தே இருக்குன்னு அவனே சொல்லியிருக்கான். உன்னால எனக்கு டைவர்ஸ் வாங்கி தர முடியுமா முடியாதா ஜூலி" என்று கோபமாக கேட்டாள் ஜெனிலியா.
"சரி, அவசரப்படாத. சொல்றத நல்லா கேளு. ஜேம்சுக்கு எதுவும் தெரிய வேணாம். எனக்கு ஒரு வாரம் டைம் கொடு. அப்பறமா நோட்டீஸ் அனுப்புவோம்."
"அவன் என் மேலயும், ஜான்சன் மேலயும் எவ்வளவு பாசம் வச்சிருக்கான் தெரியுமா?" என்று அழுதாள் ஜெனிலியா.
"அப்ப டைவர்ஸ் வேணாம் இல்ல?"
"ம்கூம்..வேணும்."

ஜெனிலியாவிடம் பேசிய அந்த டாக்டரை கைது செய்து விட்டனர். அதற்கு காரணம் அட்வகேட் ஜூலி தான் என செய்தி வெளியாகி இருந்தது. உடனே ஜூலியை பார்க்க சென்றாள் ஜெனிலியா.
"உன்ன தான் நான் பார்க்கனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். சின்ன கேசா வந்துக்கிட்டிருந்தது. உன்னால நான் இப்ப ரொம்ப பிசி ஆயிட்டேன். வா மேல போய் பேசலாம்."
"என்னாச்சு?"
"அந்த டாக்டர் ஃப்ராடு. யாரு பணம் கொடுத்து என்ன செய்ய சொன்னாலும் செய்வான். அவன் மேல இப்ப ஏகப்பட்ட கேஸ். உன் விஷயத்துக்கு வருவோம். க்ரீன் மெட்டல் கம்பெனியோட 34% ஷேர் உங்க ரெண்டு பேருகிட்டயும் இருக்கு. உங்க முடிவு இல்லாம தனியா ஜேக்கப்சால எதுவும் பண்ண முடியாது. அவங்கிட்ட 28% ஷேர் தான் இருக்கு. அதனால டாக்டர் மூல்யமா உனக்கு ஜேம்ஸ் மேல வெறுப்பு வர வச்சு டைவர்ஸ் வாங்கிட்டா, உங்க ஷேர் உடைஞ்சுடும். புரியுதா?" என்றாள் ஜூலி.
ஜெனிலியாவிற்கு மீண்டும் உயிர் வந்தது போலிருந்தது.
"உனக்கு ஜேம்ஸ் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்ப சொல்லி போன வாரம் வந்திருந்தான்."
"ஏன்?" என்று அதிர்ந்தாள் ஜெனிலியா.
"உனக்கும் உங்க ஆபிசுல இருக்கிற இன்னொருத்தனுக்கும் தொடர்பு இருக்கிறதா ஒரு வீடியோ டேப் ஜேம்சுக்கு கிடைச்சிருக்கு."
"அத அவன் நம்புறானா?"
"உன் விஷயமாவது நம்புற மாதிரி இருக்கு. ஆனா நீ அவசரப்பட்ட மாதிரி நான் அவசரப்படல" என்று வாசலில் நின்று புன்னகைத்தான் ஜேம்ஸ்.
"இதுவும் அந்த ஜேக்கப்ஸ் வேலை தான்" என்றாள் ஜூலி.
ஜெனிலியா கண் கலங்கினாள். கீழே ஏதோ உடையும் சத்தம் கேட்டது.
"ஜான்சனும் வந்திருக்கார் போலிருக்கே!"



Blogged with Flock

புதன், 5 டிசம்பர், 2007

ஒரு நாள்

மாலை நான்கு மணி...

"முரளி சார்... மேனஜர் கூப்பிடறார்."
பல மாதங்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வை பற்றியதாக தானிருக்கும் என்று மகிழ்ச்சியாக சென்றவரிடம், "கோவர்தன் ரெண்டு நாளா ஆபீஸ் வரல போலிருக்கு. அவரு பார்க்க வேண்டிய ஒரு ஃபைல நாளைக்கே மூவ் பண்ணியாகனும். மீனா கிட்ட ஃபைலிருக்கு. இன்னைக்கு நைட்டு அத முடிச்சிட்டு போங்க சார்" என்று சொல்லி முரளியின் முனறலுக்கு ஆளானார் மேனஜர்.
முரளி தனது இருக்கைக்கு வந்தவுடன், "சீதா... நான் தான் பேசுறேன். வீட்டுக்கு வர லேட்டாகும். நான் இங்கயே சாப்பிட்டுகிறேன். பரத் வன்ட்டானா?" என்று வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்டார்.

இரவு பத்து மணிக்கு தான் வீட்டிற்கு சென்றார் முரளி.
"எப்ப வந்தான்? தூங்குறானா!"
"அஞ்சரை மணிக்கு தான் வந்தான். ஏதோ அட்ரஸ் ப்ராப்ளமாம். பேங்க்குக்கு போயிட்டு வந்திருக்கான். நாளைக்கும் பாஸ் போர்ட் ஆபீசுக்கு போகனுமாம். குமார் வந்து படத்துக்கு கூட்டிட்டு போயிட்டான்."
"படத்துக்கா? இப்ப ரொம்ப முக்கியமா.... சரி, காலையில ஏழு மணிக்கு எல்லாம் போகனும்."
"நாளைக்கு கரன்ட் பில் கட்ட கடைசி நாளு."
காலையில் போகும் பொழுது தருகிறேன் என்று தூங்க சென்று விட்டார். காலையில் புறப்படுவதற்கு தயாராகி, பரத் அறையை கடக்கும் பொழுது எட்டிப் பார்த்தார்.
'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கவலை இல்லாம தூங்க முடியும்!'

ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்த ஃபைலை சரி பார்க்க மதியம் இரண்டு ஆனது. அதன் பிறகு, தான் பார்க்க வேண்டிய வேலைகளில் ஈடுப்பட்டார் முரளி.
"என்ன மிஸ்டர் முரளி...நான் ரொம்ப முக்கியமா பார்க்கனும்னு சொல்லியும் நீங்க ஒரு ஃபைல தான் பார்த்திருக்கீங்க. இன்னொரு ஃபைல் அப்படியே இருக்கு. முடியலன்னா ஓபன்னா சொல்லலாம் இல்ல. இப்ப மணி நாலு ஆகுது. ஏழு மணிக்குள்ள வேலைய முடிங்க. நான் வெயிட் பண்றேன்."

மாலை ஐந்து மணி...

"பரத்தம்மா..அவரு அக்கா இன்னைக்கு வர்றாங்களாம். கொஞ்சம் மளிகை சாமான் எல்லாம் வாங்கனும். நீங்க ஃப்ரீயா இருந்தா போய் வாங்கிட்டு வர முடியுமா? நான் அவங்கள ரிசீவ் பண்ண போகனும். அதனால் தான்."

சீதா பக்கத்து வீட்டு பெண்மனிக்காக மளிகைக் கடைக்கு சென்று விட்டு வரும் பொழுது, பரத் வீட்டு வாசலிலயே உட்கார்ந்திருந்தான்.
"ஏன் இவ்வளவு லேட்?"
"பேங்க் பாஸ் புக்ல இருக்கிற அட்ரசும், ரேஷன் கார்ட்ல இருக்கிற அட்ரசும் ஒன்னா இருக்கனுமாம். பேங்க் பாஸ் புக்குல ஒரு எழுத்து விட்டு போச்சு. அதான் பேங்க்குக்கு போனேன். மேனஜர கேட்கனும், அது இதுன்னு இழுத்துட்டாங்க."

பரத்தை பார்க்க வந்த அவனது பள்ளி தோழன், "என்ன ஆன்ட்டி...பரத்த எங்கூட படத்துக்கு அனுப்ப மாட்டீங்களா?" என்று கேட்டான்.
"ஏம்ப்பா... என்ன வம்புக்கு இழுக்கிற? நான் எதுவும் அப்படி சொல்லல."

பரத் படம் பார்த்து விட்டு, இரவு பத்து நாற்பதுக்கு தான் வந்தான்.
"அம்மா...காலையில எட்டு மணிக்கெல்லாம் கிளம்பனும். அப்ப தான் க்யூவல இருந்து தப்பிக்கலாம்."

காலையில் முரளி அவசரத்தில் மின் கட்டனத்திற்கு பணம் கொடுக்காமல் சென்று விட்டார். பரத்தும் கிளம்பிய பின், சீதா பக்கத்து வீட்டிற்குச் சென்றாள்.
"வந்தனா அம்மா" என்றழைத்து விட்டு, "விருந்தாளி எல்லாம் போயாச்சா?" என்று கேட்டார்.
"போயிட்டாங்க. யார் வந்தாலும் ஒரு நைட்டு தான். அதுவும் வேற வேலைய வர்றப்ப சும்மா வந்துட்டு போவாங்க. காலம் அப்படி மாறிடுச்சு."
பொதுவாக பேசியிருந்து விட்டு, "இன்னிக்கு தான் கரன்ட் பில் கட்ட கடைசி நாளு. பரத் அப்பா பணம் தர மறந்துட்டார். நான் சாயந்திரம் திருப்பி தந்துடுறேன்" என்றாள் சீதா.
"இதுல என்ன இருக்கு? நீங்க மெதுவாவே தாங்க. நானும் பணம் கட்ட மறந்துட்டேன். அப்படியே எங்களதையும் சேர்த்து கட்டிடுறீங்களா?"

கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு வந்தால் எதிர் வீட்டு பாட்டிக்கு நெஞ்சு வலி, துணைக்கு யாரும் இல்லை என்று சொல்லி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். பாட்டியின் மகள்கள் வந்தவுடன் வீடு திரும்ப சாயந்திரம் ஆகி விட்டது. சீதா வீட்டிற்கு வருவதற்கும் சிலிண்டர் வருவதற்கும் சரியாக இருந்தது.

"ஏம்ப்பா...நேத்து மதியம் போன் பண்ணதுக்கு இன்னிக்கு அஞ்சு மணிக்கு தான் வர்ற. சரி, அதை அப்படியே பக்கத்து வீட்ல கொண்டு போய் வச்சிடு."

மாலை ஆறு மணி...

"காலையில இருந்து க்யூவில நிக்கிறேன். ரொம்ப டயர்டா இருக்கு. படத்துக்கு வந்ததே பெரிய விஷயம். நீ தான் டிக்கெட் எடுக்கனும்" என்றான் பரத்.
"சரி, நான் க்யூவில நிக்கிறேன். கவலைய விடு" என்று சொல்லும் பொழுதே அவனது செல் போன் ஒலித்தது.
"ஒரு நிமிஷம் நில்லு. நான் தோ வந்துடுறேன்" என்று சொல்லி விட்டு, பரத் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கியதும் தான் வந்தான்.
"சாரிடா."

காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்ற எண்ணதிலேயே ரொம்ப நேரம் தூங்கி விட்டான். எழுந்தவுடன், "ஏன்மா எழுப்பல?" என்று கத்தினான்.
"பத்து மணிக்கு தான பாஸ்போட் ஆபீஸ் திறப்பாங்க. ஏன் இப்ப கத்துற?"
"இந்நேரம் க்யூ ஆரம்பம் ஆகியிருக்கும்" என்று முனறினான்.
"சரி, போயிடலாம் கவலப்படாத. இப்ப நீ பக்கத்து வீட்டுக்கு போய் சிலிண்டர் எடுத்துட்டு வா. நான் ஆன்ட்டிகிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்."
'முடியாது' என்று சொல்லலாம்னு தான் நினைத்தான். ஆனால் கால் இழுத்து சென்று விட்டது. வந்தனா தலை குனிந்த வாறே சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தாள். பரத் அவள் வீட்டு வாசலில் நின்று இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். வந்தனா பரத்தை கடந்து சென்று, சைக்கிளில் ஏறும் முன் திரும்பிப் பார்த்தாள். பரத் தலைக் குனிந்து கொண்டான். வந்தனா சிரித்துக் கொண்டே சென்று விட்டாள்.

"வாப்பா... காலேஜ் எல்லாம் எப்படிப் போகுது?" என்று விசாரித்தார் வந்தனாவின் தந்தை. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த வந்தனாவின் தம்பி திலீப் பரத்தை முறைத்துக் கொண்டிருந்தான். பரத்தை மேற்கோள் காட்டி தான் இருவரையும் திட்டுவார் வந்தனாவின் தந்தை.
"இந்த வருஷம் பப்ளிக் எக்சாம் எழுத போற. கொஞ்சம் அட்வைஸ் பண்ணு அவளுக்கு. சன்டேல நீ ஃபிரீயா இருந்தா மேக்ஸ் சொல்லி கொடு. நிறைய தப்பு பண்றா" என்பதற்கெல்லாம் வெறுமென தலையை மட்டும் ஆட்டினான்.

இந்த முறை பத்தாவது மதிப்பென் சான்றிதழலயும், ரேஷன் கார்ட்டிலும் பரத்தின் பெயரில் ஒரு எழுத்து மாறியிருப்பதாக சொல்லி தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அடுத்த க்யூ அவனுக்கு அங்கே காத்திருந்தது.

'மூனு நாள் லீவுக்கு அங்க காலேஜ்ல வேற போய் நிக்கனும்' என்று முனறிக் கொண்டே வீட்டிற்குச் சென்றால் வீடு பூட்டியிருந்தது.

"அம்மா கோயிலுக்கு போயிருக்காங்கப்பா. அதுவரைக்கும் வேணும்னா எங்க வீட்ல இரு. ஒரு கப் காஃபி சாப்பிட்டுட்டு, அப்படியே கேபிள் வரல என்னன்னு போய் கேட்டுட்டு வாயேன். உங்கம்மா வர்றதுக்கு ஏழு ஆகும்" என்று கையில் பரத் வீட்டு சாவியை வைத்துக் கொண்டே கேட்டாள் வந்தனாவின் அம்மா.

பரத் தன் வாட்ச்சில் மணி பார்த்தான். ஆறு தான் ஆகியிருந்தது.

திங்கள், 3 டிசம்பர், 2007

வெள்ளைக்காரி

"அங்க யாருக்கிட்டயும் பேசப்படாது" என்று முதல் நாள் பள்ளிக்கு போகும் தனது பேத்தி செளந்தர்ய வர்தனியிடம் ஆயிரம் முறை சொல்லி அனுப்பினார் ராதே மாமி.

எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டு மகிழ்ச்சியாக பள்ளிக்குப் புறப்பட்டாள் செளந்தர்யா. பெரியவர்களின் மத்தியிலேயே இருந்து விட்டு, தன் வயது குழந்தைகளைப் பார்ப்பதற்கு மிக குதூகலமாக இருந்தது. ஆனால் பாட்டியின் வார்த்தைகளை மீறவில்லை. பள்ளி விட்டு வரும் வழியில் கூட்டத்தை பார்த்துக் கொண்டே வந்தாள்.

"பால்கார மாணிக்கம் மாமாவும், ஆசாரி தாத்தா பொண்ணும் கிணத்துல விழுந்துட்டாங்களா அம்மா? பெரிய கிணத்துக்கிட்ட எல்லாம் நிக்கிறாங்க?" என்று கேட்டாள் செளந்தர்யா.
லட்சுமி என்ன சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, "ஏம்மா அவா ரெண்டு பேரும் கிணத்துல விழுந்தா?" என அடுத்த கேள்வியும் கேட்டு விட்டு, "கிணத்துல ஜலம் தானம்மா இருக்கும். அங்க இவா ரெண்டு பேரும் என்ன பண்ணுவா?" என்று தொடர்ந்துக் கேட்டாள் செளந்தர்யா.
லட்சுமி சிரித்து விட்டு, "அவா ரெண்டும் பேரயும் பேசக் கூடாதுன்னு உங்க பாட்டி மாதிரி பெரியவா எல்லாம் சொன்னதால, அவா ரெண்டு பெரும் சாமிகிட்ட போயிட்டா" என்றாள்.
"கிணத்துல தான் சாமி இருக்காராம்மா? நம்ம வீட்டு சாமியறையில, கோயிலில இருக்கிறது எல்லாம் யாரு? சாமின்னு பாட்டி சொன்னாங்களே!"
"அவர் எல்லா இடத்திலயும் இருப்பாரு. அதே மாதிரி எல்லாருகிட்டயும் இருக்கிறாரு. உங்கிட்ட, எங்கிட்ட, அப்பாகிட்ட, தாத்தா பாட்டி கிட்ட, ஆடு, மாடு. கோழி இப்படி எல்லா உயிர்லயும் இருக்கிறாரு."
"அப்ப ஸ்கூலயும் இருப்பாரு இல்லம்மா?"
"இருப்பாரு" என்று சிரித்தாள் லட்சுமி.
"சாமிகிட்ட போன அக்காவும், அம்மாவும் பேசிக்குவாளாம்மா!"
"ம்ம்..பேஷா பேசிப்பா."

வகுப்பில் ஒரு பையன் அனைவருக்கும் மாம்பழம் கொடுத்தான்.
"நேக்கு வேண்டாம். எங்க பாட்டி திட்டுவா."
"உங்க பாட்டிக்கு தெரியாம சாப்பிடு. எங்க வீட்ல எனக்கு உன்ன மாதிரியே அழகா தங்கிச்சி பாப்பா பிறந்திருக்கு" என்றவனிடம், "பாப்பா பெயரென்ன?" என்று கேட்டாள்.
"தெரியல. பாப்பான்னு தான் எல்லாம் கூப்பிடுறாங்க" என்று பழத்தை நீட்டினான்.
"வேணாம். நேக்கு பயமாயிருக்கு."
"நீ சாப்பிடலன்னா எங்க பாப்பா கோவிச்சுக்கும்."
செளந்தர்யா யோசித்து விட்டு, "நான் சாப்பிட்டுட்டேன்னு பாப்பாக்கிட்ட சொல்லு" என்று பழத்தை வாங்கிக் கொண்டு, "உன் பெயரென்ன?" என்று கேட்டாள்.
"கட்டபொம்மன்" என்று அவன் சொன்னதற்கு செளந்தர்யா சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிற?" என்று கேட்டான்.
"யார் நோக்கு பெயர் வச்சா?"
"எங்கய்யா தான். இது சாமி பெயரு."
"சாமி பெயரா! அந்த சாமி எப்படியிருக்கும்? எந்த கோயில்ல இருக்கு?"
"எனக்கும் தெரியல. ஆனா அந்த சாமி தான் வெள்ளக்காரங்க எல்லாரையும் கொன்னுச்சு."
"வெள்ளக்காரங்கன்னா யாரு?" என்று கேட்டாள் செளந்தர்யா.
"வெள்ளக்காரங்கன்னா..." என்று இழுத்து, "வெள்ளையா இருப்பாங்க. அவங்கெல்லாம் ரொம்ப கெட்டவங்க" என்றான்.

அந்த ஊரிலியே செளந்தர்யா குடும்பம் தான் மிகுந்த சிவப்பு தோள் உடையவர்களாக இருந்தனர். தனது குடும்பம் தான் வெள்ளைக்காரர்கள் எனவும், தன்னை கட்டபொம்மன் சாமி கொன்றுவிடும் எனவும் பயந்தாள் செளந்தர்யா.
"அப்பா... கட்டபொம்மன்னு ஒரு சாமி இருக்காராப்பா?"
"இல்லடா கண்ணு."
"இருக்காருப்பா. வெள்ளக்காரங்கள கூட கொன்னாரே!"
"இதெல்லாம் யாருடா கண்ணு நோக்கு சொன்னா?"
"எனக்கே எல்லாம் தெரியும்ப்பா."
"சரி, ஆனா கட்டபொம்மன் சாமி இல்லடா. நம்மள மாதிரி சாதாரன ஆளு தான்."
"நாமளும் வெள்ளையா தானப்பா இருக்கோம். நாம தான் வெள்ளைக்காரங்களா?"
"வெள்ளக்காரங்க நம்ம நாட்டை விட்டு போய் இருபது வருஷம் ஆச்சு. இப்ப இங்க வெள்ளக்காரங்களே இல்ல."

அடுத்த நாள் பள்ளியில் கட்டபொம்மனை தேடி சென்று, "நாங்கெல்லாம் வெள்ளக்காரங்க இல்ல. அவங்கெல்லாம் எப்பவோ போயிட்டாங்க. என்னை உங்க சாமி கொல்லாது" என்று சிரித்தாள்.
"நான் உங்கிட்ட பேச மாட்டேன். நான் மாம்பழம் கொடுத்தத ஏன் உங்க பாட்டிக்கிட்ட சொன்ன? நேத்து வீட்டுக்கு வந்து திட்டினாங்க. இனிமே உங்கிட்ட பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க" என்று அழுவது போல் சொன்னான்.
"சாமி சத்தியமா நான் பாட்டிக்கிட்ட சொல்லல. இனிமே நீ எங்கிட்ட பேச மாட்டியா?"
"வேணும்னா யாருக்கும் தெரியாம பேசுறேன்."
"யாரும் திட்டாம நீ எங்கிட்ட பேசறதுக்கு நான் ஒன்னு சொல்லட்டுமா?"
"என்ன?"
"நாம ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வர்ற வழியில இருக்கிற கிணத்துல விழுந்து சாமிகிட்ட போயிடலாம். அப்புறம் யாரும் உன்ன திட்ட மாட்டாங்க" என்றாள் செளந்தர்யா.
"உண்மையாவா? யார் சொன்னா உனக்கு?"
"எங்கம்மா. அவா பொய்யே பேச மாட்டா. ரொம்ப நல்லவா."
"அப்படின்னா...சரி."








Blogged with Flock