வியாழன், 27 நவம்பர், 2008

அடையாளங்கள்

'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!'
'எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.'
'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'

இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வருவார்கள். பொதுவாக யாரும் எளிதில் பேசி விட மாட்டார்கள். அரை வயிறு நிறைந்தவுடன் தானாக பேச ஆரம்பிப்பார்கள். விடை பெறும் போது வயிறார வாழ்த்துவார்கள். எனக்கு புண்ணியம் வந்து சேருகிறதோ இல்லையோ ஆனால் மனதில் ஒரு சிறு திருப்தி நிலவும்.

எனது இந்த பொழுதுப்போக்கு நன்றாக சென்றுக் கொன்டிருந்தது. அவனை காணும் வரை அல்லது அவர் என்னை குழப்பும் வரை. மிக நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் தூய்மையாக இருந்தார். ஆனால் அவரது ஆடை குறைப்பு கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விட்டது. முக்கால் வயிறு நிரம்பியும் அவர் வாயே திறக்கவில்லை. சரி நானே பேசி விடலாம் என்று எனது முதல் கேள்வியைக் கேட்டேன்.

"உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா?" என்றேன் மரியாதையாக. யாராக இருந்தால் என்ன, மரியாதை அவசியமாகிறதே! ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. இன்னும் என்னென்ன கேள்விகளோ கேட்டேன். ஆனால் அவர் அசரவில்லை.
முழுவதுமாக உண்டு விட்டு, "நானும் ரொம்ப வருஷமா அத தான் தேடிக்கிட்டிருக்கேன்" என்றார். உண்மைகளை மழுப்பும் இத்தகைய பதில்களை கேட்டால் நான் எரிச்சலாயிடுவேன்.
"வாழ்க்கைய தொலைச்சவங்க சொல்ற சமாதானம் இது" என்றேன் கோபமாக.
"அப்ப உனக்கு நீ யாருன்னு தெரியுமா?" என்றார் ஆச்சரியமாக.
"நல்லாவே தெரியும்.. கெளதம்" என்றேன் கிண்டலாக.
"அது உன் பெயர். யார் நீ?"
கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தவனாக, "ஈ.பி. யில ஜெ.இ.யா வேல செய்றேன்" என்றேன்.
"அது நீ செய்ற வேல?"
எடுபடாது என்று தெரிந்தும் தயங்கியவாறே, "எனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு" என்றேன்.
"அது உனக்கிருக்கும் உறவுகள்?"
இப்பொழுது நான் அமைதியானேன்.
"யார் நீ என்று கேட்டால் வெறும் அடையாளங்களாகவே சொல்றியே!" என்று எழுந்து சென்று விட்டார்.

நான் யார் என்று கண்டுப்பிடிக்க என்னால் முடிகிறதோ இல்லையோ ஆனால் வேறு ஏதாவது பொழுதுப்போக்கினை கண்டுப்பிடிக்கும் சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது.

வெள்ளி, 14 நவம்பர், 2008

வியாழன், 6 நவம்பர், 2008

ரெண்டு மணி நேரம் தான்

"ஏன்டா பக்கத்து தெருவுல தான் நான் இருக்கேன். எங்கள வந்து பார்க்கக் கூடாதா?"
"டைமே இல்ல மாமா."
"துரை..கலெக்டருக்கு படிக்கிறீங்களோ?"
"காலையில ஆறு மணிக்கு டியூஷன் போறேன். ஏழரை மணிக்கு வந்து அவசர அவசரமா கிளம்பி எட்டே காலுக்கு பஸ்ச பிடிக்கனும். திரும்பி நாலு மணிக்கு வீட்டுக்கு வந்து நாலரை மணி சயின்ஸ் டியூஷனுக்கு போயிட்டு அப்புறம் ஹிந்தி கிளாஸ் எல்லாம் முடிச்சுட்டு எட்டு மணிக்கு தான் திரும்பி வீட்டுக்கு வர்றேன். அப்புறம் ஹோம் ஒர்க் எழுதிட்டு, சாப்ட்டு தூங்கிடுவேன்."
"அது சரி..கலெக்டர் விட நீ பிசி தான். சரி சண்டேல வரலாம் தான?"
"அன்னிக்கு ஃபுல்லா கிரிக்கெட் பிராக்டீஸ் இருக்கு. காலை பதினொரு மணிக்கு போனா சாயந்திரம் ஆறு மணிக்கு தான் வருவேன்."
"இந்த காலத்து பசங்கெல்லாம் ரொம்ப பாவம்டா. சரி..சரி..போய் படி."
ஏதோ யோசித்தவராய் தன் தங்கையை அழைத்து, "ஏம்மா..இப்படியே படி படின்னு சொன்னா என்னம்மா ஆவறது. கொஞ்சம் ப்ரீயா விடுறதில்லையா? பாவம் பையன். என் ப்ரென்ட் ஒருத்தவன் 'யோகா' க்ளாஸ் நடத்தறான். ஞாயித்துக் கிழமை மட்டும் தான். நானே சொல்லி விடுறேன். பையன அனுப்பி வையுங்க. மைன்டுக்கு ரொம்ப நல்லது. படிக்கறதெல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். உடம்புக்கும் நல்லது. என்ன..சரியா!" என்றார்.

அர்த்தமுள்ள பொய்கள்

"முதல் உலகப் போரோட நூறாவது நாளுக்கும், இரண்டாவது உலகப் போரோட நூறாவது நாளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?"
'தெரியாது' என்று தலையை ஆட்டி விட்டு, "என்ன அது?" என்று கேட்டான்.
"அந்த இரண்டு நாளுலயும் ஜெர்மனியோட கை ஓங்கி இருந்தது."
"ம்" என்று தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
"ஆனா அந்த இரண்டு நாளோட கடைசியிலயும் ஜெர்மன் தளபதி ஒருத்தர நம்ம ஆளுங்க கொன்னுட்டாங்க."
"ஆமா..எப்பவும் நாஜி ஜெயிக்கிற மாதிரி தான் ஆரம்பத்தில இருக்கும். ஆனா இறுதி வெற்றி எப்பவும் நமக்கு தான்" என்று முக மலர்ச்சியோடு ஜேசனின் கைகளை பற்றியவாறே தூங்கி விட்டான்...நிரந்தரமாக.

எப்பொழுது தான் இரண்டாம் உலகப் போர் முடியுமோ என்றிருந்தது. ஒரு உயிர் பிரிவதை அருகிலிருந்து பார்ப்பது மிக கொடுமையானது. அதற்குள், "ஜேசன்..பக்கத்து அறையில நாலாவது பெட்ல இருக்கிறவன் தன் கடைசி நிமிடத்தில் இருக்கிறான். அவனுக்கு ஷேக்ஸ்பியரும், ப்ரெஞ்ச் வொயினும் பிடிக்குமாம்."

"ஷேக்ஸ்பியரோட நாடகத்தை எல்லாம் படிச்ச ரசிகையான ஒரு செல்வந்தர் வீட்டு பொண்ணு அவருக்கு ஒரு பாட்டில் ப்ரெஞ்ச் வொயின் அனுப்பி தன் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டா. நினைச்சாலே எனக்கு சிரிப்பு வருது. அத பத்தி கேள்விப்பட்டிருக்கியா?"

தூர அதிர்ஷ்டம்

வானத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். நாளைக்கு அவனது அண்ணன் மகன் ராமுவிற்கு பிறந்த நாள். கணேசனுக்கு ராமு என்றால் ரொம்ப பிடிக்கும். அவனுடைய பிறந்த நாளுக்கு சின்ன பரிசு வாங்கி கொடுக்க கூட காசில்லையே என்று நினைத்து கொன்டிருந்தான் கணேசன்.
"இந்தா கணேசா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கெல்லாம் தயாரா இரு. வேல ஒன்னு வந்திருக்கு" என்றார் முனியன்.
'என்ன வேல...திடீரென்னு!' என்பது போல் நம்பிக்கையின்றி முனியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் கணேசன்.
"மேக்கப்பட்டிக்கு மினிஸ்டர் வர இருந்தாரில்ல..அது ரத்தாகி இப்ப நம்ம ஊர்ல நடக்கப் போகுது. ஏதோ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக நம்ம ஊர்ல மேடை அமைக்க போறாங்களாம். எப்படியோ...நமக்கு நாள பொழுது ஓடினா சரி தான்" என்றார் ஒரு வறட்டு திருப்தியுடன்.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் மேடை தயாராகி விட்டது. பத்து மணி வண்டியில் ஏறினால், கணேசன் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கலாம். கூலி தருபவரிடம் சென்ற பொழுது, "நைட்டு பந்தல பிரிக்கிற வரைக்கும் இருந்தா, ரெண்டு வேள சாப்பிடு இன்னுமொரு நூறு ரூபா கிடைக்குமில்ல!?" என்ற படியே கணேசனுக்கு நூற்றைம்பது ரூபாய் தந்து, இரு நூற்றைம்பது ரூபாய் தந்ததாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்று ராமுவை பார்த்து விட்டு, மூன்றரை மணி பேருந்தில் ஏறி மீண்டும் பந்தல் பிரிக்கவும் வந்து கூலி வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவோடு பேருந்தில் ஏறினான்.

பேருந்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில், கணேசன் தூக்கத்தின் வாயிலாக கனவு உலகத்திற்கு சென்று விட்டான். சுமார் மூன்று மணி நேர உறக்கத்திற்கு பிறகு விழித்த பொழுது, பேருந்து போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டது தெரிந்தது. அமைச்சர் வந்து செல்லும் வரை இந்த சங்கடங்களும் தொடரும்.

ஒருவழியாக நான்கு மணி நேரத்தில் பத்து கி.மீ. தொலைவினை பேருந்து கடந்திருந்தது. இனிமேல் ஊருக்கு சென்று வந்தால் ஒருவேளை கூலி பறிப் போகுமென்று எண்ணி பேருந்திலிருந்து இறங்கி விட்டான். அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தும் பொழுது, "நடக்க வேண்டிய சமயத்துல ஒண்ணு நடக்கலன்னா, அதுக்கப்பறம் அது நடக்காமலே இருக்கலாம்" என்றொரு பெரியவர் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஏதோ தோன்றியவனாக கணேசன் ஊர்ந்துக் கொண்டிருந்த பேருந்தில் நிதானமாக சென்று ஏறிக் கொண்டான். கணேசன் வீடு போய் சேர இரவு எட்டு மணி ஆகி விட்டது. ஆனால் ராமுவும் அவனது அப்பாவும் கணேசனைக் காண சென்றிருந்தனர்.