வியாழன், 25 செப்டம்பர், 2008

இன்றைய தினத்தில்

"அப்புறம்...எப்படி இருக்க? காலேஜ் படிக்கறப்ப பார்த்தது! ஆளே ரொம்ப மாறிட்டே"
தவிர்க்க முடியாத இந்த சம்பிரதாய வைபவங்களே அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. நான்கைந்து வருடங்களுக்கு பிறகு பார்த்ததால் உண்டான மகிழ்ச்சி இருவர் முகத்திலும் தெரிந்தது. அப்பொழுது நரேனின் செல்பேசி ஒலித்தது.
"ஒரு நிமிஷம்டா...வீட்டிலிருந்து அம்மா பண்றாங்க.வீட்டுக்கு போய் ரெண்டு மாசத்துக்கு மேலாகுது" என்று சிரித்துவிட்டு, மொத்தமாக 'முப்பத்தேழு' ஒரு நிமிடங்கள் பேசினான்.
நேரமின்மை காரணமாக மீதமிருந்த சம்பிரதாயங்களை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு ஒரு கைக் குலுக்கலுடன் விடைப் பெற்றனர்.

"எழுந்திருப்பா..சாப்பிட வேணாமா? மணி பதினொன்னு ஆகப் போகுது பாரு!"
இரவு பன்னிரெண்டு முப்பதுக்கு மேல் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் நரேன். வேலைக்கு சென்ற பிறகு நரேனுக்கு தூங்குவதற்கே நேரம் கிடைப்பதில்லை. அப்படியே நேரம் கிடைத்து தூங்கினாலும், தூங்கிய திருப்தி எழும் பொழுது இருப்பதில்லை.
"அப்பாவும், நீங்களும் சாப்பிட்டாச்சா?" என்று நரேன் சாப்பிட அமரும் பொழுது கடிகாரத்தின் சின்ன முள்ளும், பெரிய முள்ளும் ஒன்றாய் மேல் நோக்கி பார்த்தது.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, நரேனின் செல்பேசி ஒலித்தது.
"ஹலோ..சொல்லுடா. நல்லா இருக்கேன். நீ?"
......
"இல்ல..இப்ப தான் எழுந்துரிச்சி சாப்பிட உட்காருறேன்."
......
"பரவாயில்ல்..சொல்லு. பண்ணாதவன் பண்ணி இருக்க!"
......
"அடப்போடா...நாலு மணிக்கெல்லாம் கிளம்பிடுவேன்."