சனி, 23 மே, 2009

ஊர் உலகம்

நமக்கு ரொம்ப வேண்டிய பையன், பக்கத்துல சினிமா எடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டு வேடிக்கை பார்க்க போயிருக்கான். பக்கத்துல நல்ல டீ கடை எங்க இருக்குன்னு அந்த சினிமாக்கார கும்பலுல யாரோ ஒருத்தவங்க நம்ம பையன்கிட்ட கேட்டிருக்காங்க. அப்படியே பொதுவா நம்ம பையன் சினிமாக்காரங்க கிட்ட பேசினத, தூரத்துல இருந்து அவங்க ஊர் ஆளு ஒருத்தரு பார்த்துட்டாரு.


"நம்ம பையன்.. இப்ப நடிகர் ஆயிட்டான். தெரியுமா?"

"எனக்கு அப்பவே தெரியும்... அவன் முகத்தில அப்படி ஒரு கலை."

"பரவாயில்ல... கொஞ்ச நாளுலயே ரெண்டு, மூனு படத்துல நடிக்க கூப்பிட்டுட்டாங்களாம்."

"ரஜினி, கமல் எல்லாம் இவனுக்கு இப்ப ப்ரென்ட்ஸ் ஆயிட்டாங்களாம்."


அவனவன் முன்னேறுவதற்கு என்னம்மோ பண்றான். நம்ம பையனோ சுலபமாக பெரிய ஆள் ஆகி விட்டேன். அதெப்படி என்று தீவிரமாக யோசித்த பொழுது தான் ஒன்று புரிந்தது. கடின உழைப்போ, திறமையோ தேவையில்லை. ஒரு காதும், ஒரு வாயும் சுத்தி இருக்கிற ஒரு நாலு பேருக்கு இருந்தா போதும். நீங்களும் நம்ம் பையன் மாதிரி பெரிய ஆளு தான்.

இப்படியெல்லாம் நம்ம பையனை உசுப்பேத்தி உச்சாணி கொம்பில் உட்கார வைத்த ஊர் உலகம்...கடைசியாக அந்த கேள்வியை அவனிடம் கேட்டு விட்டது.

"உன் படம் எப்ப ரிலீஸ் ஆகும்?"

திங்கள், 18 மே, 2009

சோழியன் குடுமி

"நமக்கு கிடைத்த தகவல்.. சரி தானா?"
"அது பொய்யாய் இருப்பதற்கான வாய்ப்புகள் ரொம்ப கம்மி சார்" என்றான் இளம் ராணுவ அதிகாரி மிடுக்காக.
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "எப்படியும் நமக்கு கண்டியில இருந்து உதவுவாங்க. கண்டிக்கு போன் பண்ணு" என்றார் தொய்வான குரலில்.

.............

மயான அமைதியுடன் இருக்கும் அந்த கிராமத்தில் முதல் குண்டினை வீசினர். எப்பொழுதும் போல் கிராம மக்கள் அலறி அடித்து ஓடி வரவில்லை. இரண்டு, மூன்று குண்டுகளுக்கு பிறகும் எந்த விதமான சப்தமோ, எதிர்ப்போ இல்லை. மூத்த தலைவர்கள் சிலர் ஒன்று கூடி, ஒற்றர் படையினை வேவு பார்க்க அனுப்பினர். பதுங்கி பதுங்கி சென்ற ஒற்றர் படை வீரர்கள் விழி பிதுங்கியவாறே வந்தனர்.
"யாருமே உயிரோட இல்ல சார்?"
"எல்லாம் தூங்குற மாதிரி தான் சார் படுத்து இருக்காங்க. ஆனா உயிர் இல்ல."

.............

"அவருகிட்ட பேசனும்னா.. கண்டிக்கு நேர்ல போனா தான் முடியும்னு சொல்லிட்டாங்க சார்."
"நாம எங்கிருந்து பேசுறோம்னு தெரிஞ்சுமா, அப்படி சொன்னாங்க."
"தெரிஞ்சதால தான் சார்..சொன்னாங்க" என்றான் இளம் அதிகாரி அழுத்தம் திருத்தமாக.
இளம் அதிகாரியை முறைப்பது போல் பார்த்து விட்டு, "கண்டிக்கு போக ஏற்பாடு பண்ணு" என்றார் ஜன்னலை பார்த்தவாறே.
............ .

"இது ஒரு வகையான ஸ்லோ பாய்சன். எல்லா உறுப்புகளையும் நிதானமா செயலிழக்க வச்சு, கடைசியில உயிர் போயிடும் சார்" என்றார் மருத்துவர்
பிரேத பரிசோதனை அறிக்கையை கையில் வைத்தவாறு.
"இது கொலையா இல்ல தற்கொலையா?"
"தெரியல. ஆனா இந்த மாதிரி ஸ்லோ பாய்சன் இங்க கிடைக்கறதில்லை. வெளியில இருந்து தான் வந்திருக்கனும்" என்று கிளம்பியவர், "இன்னொரு விஷயம்..சாகுறப்ப யாருக்கும் வலி எதுவும் தெரிஞ்சிருக்காது."

.............

அவர் பிரக்ஞையுடன் அமர்ந்திருக்காரா இல்லையா என்பதே சந்தேகமாக இருந்தது. சிரிப்பது போன்ற உதடுகள், போதையில் இருப்பது போன்ற கண்கள், விழுந்து விடுவது போல் நடுங்கும் தேகம். இவரிடம் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டே, "உங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைக்கிறேன்" என்று மூத்த அதிகாரி ஆரம்பித்தார்.
"தெரியாது" என்றார் ஒற்றை வார்த்தையில் உறுதியாக.
"ஒரு கிராமமே மர்மமான முறையில் இறந்திருக்காங்க. அதுல உங்க ஆளு ஒருத்தர் சம்பந்தப்பட்டிருக்கார். அவர நாங்க கூடிய சீக்கிரம் பிடிச்சிடுவோம். ஆயுதம் கடத்த முயன்றார் என்று அவர நாங்க ராணுவ முறைப்படி..." என்று நிறுத்தி, "அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு" என்று மூத்த ராணுவ அதிகாரி முடித்தார்.
"கொல்லாமையை போதிக்க வேண்டிய எங்கிட்டயே.. கொல பண்ணப் போறேன்னு சொல்லிட்டு செய்றீங்க" என்று வருத்தத்தோடு புன்னகைத்தார்.


.............

"சார்.. நேத்து நம்ம செக் போஸ்ட் தாண்டி ஒருத்தர் தான் போயிருக்கார்."
"அவர் பெயரு.. மஹிந்தா இந்திரசாரா."
"அனுராதாபுரம் புத்த மடத்துல இருந்து வர்றதா சொன்னார் சார்."
"அவர் ஒரே ஒரு துணி மூட்டை தான் வச்சிருந்திருக்கார். அதுல சில மூலிகைங்க இருந்திருக்கு."
"அனுராதபுரம் மடத்துல விசாரிச்சிங்கீளா?" என்றார் மூத்த அதிகாரி கோபமாக.
"அவர் அந்த மடத்த சேர்ந்தவர் தானாம். ஆனா அவர பத்தி வேறு எதுவும் சொல்ல மறுத்துட்டாங்க."

.............

"இது ரொம்ப சீரியசான இஷ்யூ. உலக நாடுகள் எல்லாம் நம்மல உன்னிப்பா பார்த்துக்கிட்டிருக்காங்க. நீங்க மஹிந்தா இந்திரசாராவ பிடிக்க உதவுனீங்கன்னா, எந்த மடத்து பெயரும் வராம நாங்க மறைச்சிடுறோம். உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது."
"உண்மைய ஏன் மறைக்கனும்? தானாக பழுத்து விழ வேண்டிய சருகுகளை, இலையாய் துளிர ஆரம்பிக்கும் பொழுதே அதை சிவப்பாக்கி கீழே விழ வைக்க பார்த்தீங்க. ஆனா இப்ப அந்த இலைகளை சேதாரமில்லாமல் இந்திரசாரா பறிச்சுட்டார். இதுல மறைப்பதற்கு ஒன்னுமில்லை. அதற்கான அவசியமுமில்லை" என்று புத்தர் சிலையை கம்பீரமாக பார்த்தார்.
"அடுத்த தடவையும் நீங்களே தலைமை குருவா வருவதற்கு அரசு உதவி செய்யும்" என்றார் அதிகாரியும் புத்தர் சிலையைப் பார்த்து.
"புத்தம்..சரணம்..கச்சாமி" என்றார் புத்தர் மீதிருந்த பார்வையை எடுத்தவாறே.