வந்த வழியிலேயே திரும்பி ஐந்து நிமிடம் நடந்தோம். பள்ளத்தாக்கை நோக்கி சரிந்து செல்லும் பெரிய பாறை ஒன்றில் அமர்ந்தோம். நான் துண்டை விரித்து படுத்துக் கொண்டேன். தத்துவம் கேட்கும் மனநிலையில் நான் அப்பொழுது இல்லை. சுமார் இரண்டரை மணி நேரம் எனக்கு ஆழ்நிலைத் தூக்கம் வாய்த்தது. இரவு ஒரு மணிக்கு விழிப்பு வந்து பார்த்தால், அருணையடி என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு அமர்ந்திருந்தார். சுற்றி பால் நிலாவின் ஒளி பிரவாகம். நான் தூங்கும் பொழுது இருள் சூழ்ந்த இடமெல்லாம், வெள்ளையாய் ஒளித்துக் கொண்டிருந்தது.
"உனக்கு குளிரல?"
எனக்கு அப்படியொன்றும் குளிரவில்லை. எழுந்து நின்றேன். 'உஸ்ஸ்..' என பேரிரைச்சலுடன் காற்று என்னைப் பள்ளத்தாக்கில் தள்ள பார்த்தது. முதுகில் ஐஸ் கத்தியால் குத்தியது போன்று குளிர் உடம்பெல்லாம் பரவ ஆரம்பித்தது. நான் விழிக்காமல் தூங்கிக் கொண்டே இருந்திருக்கலாம் போல. என பலம் என் தூக்கம் என எப்பொழுதும் போல் நன்றாக புரிந்தது. அப்பொழுது தான் அருணையடியைப் பார்த்தேன். குளிரில் அவர் வாய் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது.
அந்தச் சமயம் ஏதோ பேச்சு அரவமும், சிறு ஒளியும் பாதையில் தோன்றியது. அருணையடி தான் முதலில் கவனித்தார். நான் திரும்பி பார்ப்பதற்குள் என்னை அவர்கள் கடந்து விட்டனர். அருணையடி அவர்களைக் கூப்பிட்டார். அந்த இருவருடனும் நாங்கள் இணைந்துக் கொண்டோம். அவர்கள் காலில் வெந்நீர் ஊற்றியது போல் வேக வேகமாக நடந்தனர். அவர்கள் குழுவைச் சேர்ந்த மீதி ஐவர் எங்கள் பின்னால் ஓடி வந்து சேர்ந்துக் கொண்டனர். எங்கள் முன் சென்றுக் கொண்டிருந்த இருவரும் நின்றனர். ஒளிகளை அணைக்க சொல்லி பின்னால் இருந்தவர்களுக்கு சமிக்ஞை செய்தனர். மீண்டும் இருள் சூழ்ந்தது. கண்கள் சிறிது இருளுக்கு பழகியவுடன், ஒன்றிரண்டு பால் நிலவின் ஒளி கதிர் கிளைகள் ஊடே போராடி வீழ்ந்து பாதையில் தவழ்ந்ததை காண முடிந்தது. கிளை முறியும் சத்தமும், அதைத் தொடர்ந்து மரக் கிளைகள் ஆட்டுவது போல சலசலப்பும் கேட்டது. அசைய வல்லப் பொருட்கள் எல்லாம் திடீரென்று அசையாமல் ஸ்தம்பித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது (திருவிளையாடல் படம் பார்த்த நினைவுகள் எழுந்திருக்கலாம்). சில நிமிடங்கள் நிசப்தம் நிலவியது. நடக்கத் தொடங்கினார்கள். மீண்டும் பிலாவடி கருப்பண்ணசாமி முன்பு போலவே காட்சி கொடுத்தார்.
"சிவா.. சிவா.. சிவா.. சிவா.." என ஒருவர் மலையை நோக்கி கையெடுத்து கும்பிட்டார்.
"பிலாவடி கருப்பண்ணசாமீஈஈஈ.." என்று பரவசத்தில் விநோதமாக அழைத்தார். ஒருவர் அமானுஷ்யமாக சிரித்தார். இன்னொருவரின் உடல் வெடவெட என நடுங்கிக் கொண்டிருந்தது.

"நாம் எல்லையை மிதிச்சுட்டோம்.. இனி பயப்படறதுக்கு ஒன்னுமில்ல. எல்லாம் பதட்டப்படாம நடங்க" என்று மீண்டும் நடக்கத் தொடங்கினார். கீழே அடிவாரத்தில் சூப் கடை தாண்டி இருக்கும் காவல் தெய்வமான கருப்பு சாமி கோயில் முதலே எல்லை தொடங்குகிறதே என சந்தேகம் எழுந்தாலும், பாதையை எங்கே தவற விட்டோம் என அறிந்துக் கொள்வதில் ஒரே குறுகுறுப்பு எனக்கு.
கருப்பண்ணசாமி எதிரில் விரவி கிடக்கும் பாறைகள் மீது நடக்கத் தொடங்கினர். பாறைகள் இடுக்கில் நீர் சலன்மில்லாமல் மெல்லியக் கோடுகளாய் ஓடிக் கொண்டிருந்தது (பகலில் திரும்பும் பொழுது கவனித்தது). ஆனால் நீர் அடித்துக் கொண்டு ஓடுவது போல் சத்தம் மட்டும் பிரமாதமாய் கேட்டுக் கொண்டிருந்தது. மின்மினிப் பூச்சி ஒன்று.. எங்கள் இடப் பக்கம் மிதந்துக் கொண்டிருந்தது. அதை ஒருவர் தொட போனார். மற்றொருவர் தடுத்து, "எதுவும் பண்ணாதீங்க. இந்த மலையில் எல்லாமே சூட்சமம். வர்ற வழியில் பார்த்தீங்க இல்ல!!" என்றார். நல்லவேளை இங்கு மலையாவது ஸ்தூல வடிவில் இருக்கே என நினைத்துக் கொண்டேன். மெதுவாக அவர்கள் பேச்சில் இருந்து, அவர்கள் காலில் ஊற்றப்பட்ட வெந்நீரின் ரகசியத்தை அறிந்தேன். முதலில் யாரோ அவர்களை துரத்தும் சத்தம் கேட்டதாம்; பிறகு யாரோ இடித்துக் கொண்டு ஓடியது போல் இருந்ததாம். அடிவாரத்தில் பிடித்த ஓட்டத்தை, கருப்பண்ணசாமி சன்னிதியில் தான் நிறுத்தி உள்ளனர். பாவம் அவர்களுக்கு எங்களைப் போல் ஏகாந்தத்தை ரசிக்க முடியாமல் போய் விட்டது.
சுந்தர மகாலிங்கம் சன்னிதி பின்புறத்தில் உள்ள சத்திரத்தில் தூங்கினோம். நாங்கள் மூன்று மணி நேரம் தங்கிய பாறையில் இருந்து 15 நிமிடங்கள் நடந்தால் அடையும் தொலைவிலேயே கோயில் இருந்துள்ளது. அந்தக் குழு இரண்டாக பிரிந்து கிடைத்த இடங்களில் படுத்துக் கொண்டனர். முதல் குழுவில் ஒருவர், "அங்க மரத்துல சத்தம் கேட்டுச்சு இல்ல. என்னன்னு நினைக்கிறீங்க?? யானை. யாரோ இரண்டு பேர் அதை துரத்தினாங்க" என்றார். இன்னொருவர், "யார் துரத்தினாங்க?" என்று கேட்டார். "அதான் தெரியல" என்றார். அதற்கு, 'இது தெரியல? சூட்சமம்!! அது சித்தர்கள் தான்' என்று பொருள். இன்னொரு குழுவில் இருந்தவர், "எப்படிப் பொய் சொல்றான் பாருங்க!! அந்த இடத்தில் போய் யானை வருமா? யாரோ அத துரத்தினாங்களாம்!! அது காவலுக்கு கிளம்பிய கருப்பண்ணசாமியா தான் இருக்கும்" என்றார்.
காலையில் ஐந்தே முக்கால் மணிக்கு எழுந்து, காரமான சுக்கு காஃபி குடித்து, பரந்து விரிந்த காட்டில் காலை கடன்களை முடித்து, யாரோ உபயதாரர் போட்டிருந்த குழாயில் (அழுத்தினால் தண்ணீர் வரும் tap) குளித்து தயாரானோம். சுந்தர மகாலிங்கம் சன்னிதியில் தரிசனம் முடித்து சூடாய் இட்லி சாப்பிட்டோம். மீண்டும் சிறிது தூரம் மலை ஏறி, பார்வதி தேவி வழிபட்ட சந்தன மகாலிங்க சன்னிதிக்கு சென்றோம்.
முதலில் சட்டைநாதர் குகை உள்ளது. அடுத்து 18 சித்தர்கள் சிலை உள்ளது. சித்தர்கள் எதிரில் நவகிரகங்கள் சன்னிதி உள்ளது. முருகர், சந்தன மகாலிங்கம் சன்னிதிகளைத் தொடர்ந்து ஆகாய கங்கை தீர்த்தம் உள்ளது. அருகில் வனகாளி சன்னிதி. இவ்விடத்தோடு எங்கள் பயணம் இனிதாக முடிந்தது.
சுந்தர மகாலிங்கம் சன்னிதி அருகில் அன்னதானக் கூடம் உள்ளது. சுட சுட சாதமும் அதற்கு சாம்பார்/ரசம் ஊற்றினார்கள் (போஜனம் அன்லிமிடட்). சுண்டல் வைத்தார்கள். அருணையடி அன்னதானத்திற்கு நிதி அளித்தார். திணை மாவு கவர் கொடுத்தார்கள். அவர் அருகில் நான் நின்றதால் எனக்கும் கொடுத்தார்கள். என்னிடம் திணை மாவைக் கொடுத்து விட்டு, 'இவர் உங்களோடு வந்தவர் தானே?' என அருணையடியிடம் உறுதி செய்துக் கொண்டார்.
சூடாக இட்லி சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சாப்பாடும் சாப்பிட்டு பத்து மணி அளவில் மலை இறங்க தொடங்கினோம். ஏறும் முன்பும் சரி, இறங்கும் முன்பும் சரி.. வயிறு நிறைய சாப்பிட்டோம்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே!!
உடம்பினை முன்னம் இழுக்கு என்றிருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!!
பி.கு.:
1. எங்களுடையது முழுமையான பயணம் இல்லை. தவசிப்பாறை, பெரிய மகாலிங்கம், கோரக்கர் ஏடு எழுதிய இடம், சித்தர்கள் வசித்த குகைகள் என மலையில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் விஸ்தாரமாக நீளுகிறது. சரியான itinerary இல்லை என்றால் சிலவற்றை தவற நேரிடும்.
திரு.M.நாகராஜ் என்ற சிவ அன்பர் "கைட்" ஆக உதவுபவர். 9344272555, 9751622107, 9489379417 ஆகிய செல்பேசி எண்கள் பயணத்தைத் திட்டமிட உதவக்கூடும்.
2. கவுண்டுண்ய நதியும் மலை மேலே தான் உள்ளதாம். அதாவது சந்தன மகாலிங்கம் சன்னிதிக்கும் மேலே. நேர பற்றாக்குறையை ஒரு சமாதானமாக பாவித்து, அருணையடி அடுத்த முறை பாவங்களை கழுவிக் கொள்ளலாம் என தனது நோக்கத்தை ஒத்தி வைத்து விட்டார்.
3. கொஞ்சம் பெரிய டார்ச்-லைட்டாக எடுத்து செல்வது நல்லது.