ஞாயிறு, 16 ஜூன், 2013

சதுராச்சலம்: ஓர் அனுபவம் - 2


நிதானமாக பாதையைத் துப்பறிந்தோம். ஆனால் வில்லன் துரத்தும் பொழுது முட்டுச் சந்தில் சிக்கிய நாயகி போல் முழிப் பிதுங்கி நிற்க வேண்டியதாகி விட்டது. நாயகிக்கு உதவ எப்படியாவது நாயகன் வந்து சேர்ந்து விடுவார். எங்களுக்கு?

வந்த வழியிலேயே திரும்பி ஐந்து நிமிடம் நடந்தோம். பள்ளத்தாக்கை நோக்கி சரிந்து செல்லும் பெரிய பாறை ஒன்றில் அமர்ந்தோம். நான் துண்டை விரித்து படுத்துக் கொண்டேன். தத்துவம் கேட்கும் மனநிலையில் நான் அப்பொழுது இல்லை. சுமார் இரண்டரை மணி நேரம் எனக்கு ஆழ்நிலைத் தூக்கம் வாய்த்தது. இரவு ஒரு மணிக்கு விழிப்பு வந்து பார்த்தால், அருணையடி என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு அமர்ந்திருந்தார். சுற்றி பால் நிலாவின் ஒளி பிரவாகம். நான் தூங்கும் பொழுது இருள் சூழ்ந்த இடமெல்லாம், வெள்ளையாய் ஒளித்துக் கொண்டிருந்தது.

"உனக்கு குளிரல?"

எனக்கு அப்படியொன்றும் குளிரவில்லை. எழுந்து நின்றேன். 'உஸ்ஸ்..' என பேரிரைச்சலுடன் காற்று என்னைப் பள்ளத்தாக்கில் தள்ள பார்த்தது. முதுகில் ஐஸ் கத்தியால் குத்தியது போன்று குளிர் உடம்பெல்லாம் பரவ ஆரம்பித்தது. நான் விழிக்காமல் தூங்கிக் கொண்டே இருந்திருக்கலாம் போல. என பலம் என் தூக்கம் என எப்பொழுதும் போல் நன்றாக புரிந்தது. அப்பொழுது தான் அருணையடியைப் பார்த்தேன். குளிரில் அவர் வாய் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது.

அந்தச் சமயம் ஏதோ பேச்சு அரவமும், சிறு ஒளியும் பாதையில் தோன்றியது. அருணையடி தான் முதலில் கவனித்தார். நான் திரும்பி பார்ப்பதற்குள் என்னை அவர்கள் கடந்து விட்டனர். அருணையடி அவர்களைக் கூப்பிட்டார். அந்த இருவருடனும் நாங்கள் இணைந்துக் கொண்டோம். அவர்கள் காலில் வெந்நீர் ஊற்றியது போல் வேக வேகமாக நடந்தனர். அவர்கள் குழுவைச் சேர்ந்த மீதி ஐவர் எங்கள் பின்னால் ஓடி வந்து சேர்ந்துக் கொண்டனர். எங்கள் முன் சென்றுக் கொண்டிருந்த இருவரும் நின்றனர். ஒளிகளை அணைக்க சொல்லி பின்னால் இருந்தவர்களுக்கு சமிக்ஞை செய்தனர். மீண்டும் இருள் சூழ்ந்தது. கண்கள் சிறிது இருளுக்கு பழகியவுடன், ஒன்றிரண்டு பால் நிலவின் ஒளி கதிர் கிளைகள் ஊடே போராடி வீழ்ந்து பாதையில் தவழ்ந்ததை காண முடிந்தது. கிளை முறியும் சத்தமும், அதைத் தொடர்ந்து மரக் கிளைகள் ஆட்டுவது போல சலசலப்பும் கேட்டது. அசைய வல்லப் பொருட்கள் எல்லாம் திடீரென்று அசையாமல் ஸ்தம்பித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது (திருவிளையாடல் படம் பார்த்த நினைவுகள் எழுந்திருக்கலாம்). சில நிமிடங்கள் நிசப்தம் நிலவியது. நடக்கத் தொடங்கினார்கள். மீண்டும் பிலாவடி கருப்பண்ணசாமி முன்பு போலவே காட்சி கொடுத்தார்.

"சிவா.. சிவா.. சிவா.. சிவா.." என ஒருவர் மலையை நோக்கி கையெடுத்து கும்பிட்டார்.

"பிலாவடி கருப்பண்ணசாமீஈஈஈ.." என்று பரவசத்தில் விநோதமாக அழைத்தார். ஒருவர் அமானுஷ்யமாக சிரித்தார். இன்னொருவரின் உடல் வெடவெட என நடுங்கிக் கொண்டிருந்தது.

"நாம் எல்லையை மிதிச்சுட்டோம்.. இனி பயப்படறதுக்கு ஒன்னுமில்ல. எல்லாம் பதட்டப்படாம நடங்க" என்று மீண்டும் நடக்கத் தொடங்கினார். கீழே அடிவாரத்தில் சூப் கடை தாண்டி இருக்கும் காவல் தெய்வமான கருப்பு சாமி கோயில் முதலே எல்லை தொடங்குகிறதே என சந்தேகம் எழுந்தாலும், பாதையை எங்கே தவற விட்டோம் என அறிந்துக் கொள்வதில் ஒரே குறுகுறுப்பு எனக்கு.

கருப்பண்ணசாமி எதிரில் விரவி கிடக்கும் பாறைகள் மீது நடக்கத் தொடங்கினர். பாறைகள் இடுக்கில் நீர் சலன்மில்லாமல் மெல்லியக் கோடுகளாய் ஓடிக் கொண்டிருந்தது (பகலில் திரும்பும் பொழுது கவனித்தது). ஆனால் நீர் அடித்துக் கொண்டு ஓடுவது போல் சத்தம் மட்டும் பிரமாதமாய் கேட்டுக் கொண்டிருந்தது. மின்மினிப் பூச்சி ஒன்று.. எங்கள் இடப் பக்கம் மிதந்துக் கொண்டிருந்தது. அதை ஒருவர் தொட போனார். மற்றொருவர் தடுத்து, "எதுவும் பண்ணாதீங்க. இந்த மலையில் எல்லாமே சூட்சமம். வர்ற வழியில் பார்த்தீங்க இல்ல!!" என்றார். நல்லவேளை இங்கு மலையாவது ஸ்தூல வடிவில் இருக்கே என நினைத்துக் கொண்டேன். மெதுவாக அவர்கள் பேச்சில் இருந்து, அவர்கள் காலில் ஊற்றப்பட்ட வெந்நீரின் ரகசியத்தை அறிந்தேன். முதலில் யாரோ அவர்களை துரத்தும் சத்தம் கேட்டதாம்; பிறகு யாரோ இடித்துக் கொண்டு ஓடியது போல் இருந்ததாம். அடிவாரத்தில் பிடித்த ஓட்டத்தை, கருப்பண்ணசாமி சன்னிதியில் தான் நிறுத்தி உள்ளனர். பாவம் அவர்களுக்கு எங்களைப் போல் ஏகாந்தத்தை ரசிக்க முடியாமல் போய் விட்டது.

சுந்தர மகாலிங்கம் சன்னிதி பின்புறத்தில் உள்ள சத்திரத்தில் தூங்கினோம். நாங்கள் மூன்று மணி நேரம் தங்கிய பாறையில் இருந்து 15 நிமிடங்கள் நடந்தால் அடையும் தொலைவிலேயே கோயில் இருந்துள்ளது. அந்தக் குழு இரண்டாக பிரிந்து கிடைத்த இடங்களில் படுத்துக் கொண்டனர். முதல் குழுவில் ஒருவர், "அங்க மரத்துல சத்தம் கேட்டுச்சு இல்ல. என்னன்னு நினைக்கிறீங்க?? யானை. யாரோ இரண்டு பேர் அதை துரத்தினாங்க" என்றார். இன்னொருவர், "யார் துரத்தினாங்க?" என்று கேட்டார். "அதான் தெரியல" என்றார். அதற்கு, 'இது தெரியல? சூட்சமம்!! அது சித்தர்கள் தான்' என்று பொருள். இன்னொரு குழுவில் இருந்தவர், "எப்படிப் பொய் சொல்றான் பாருங்க!! அந்த இடத்தில் போய் யானை வருமா? யாரோ அத துரத்தினாங்களாம்!! அது காவலுக்கு கிளம்பிய கருப்பண்ணசாமியா தான் இருக்கும்" என்றார்.

காலையில் ஐந்தே முக்கால் மணிக்கு எழுந்து, காரமான சுக்கு காஃபி குடித்து, பரந்து விரிந்த காட்டில் காலை கடன்களை முடித்து, யாரோ உபயதாரர் போட்டிருந்த குழாயில் (அழுத்தினால் தண்ணீர் வரும் tap) குளித்து தயாரானோம். சுந்தர மகாலிங்கம் சன்னிதியில் தரிசனம் முடித்து சூடாய் இட்லி சாப்பிட்டோம். மீண்டும் சிறிது தூரம் மலை ஏறி, பார்வதி தேவி வழிபட்ட சந்தன மகாலிங்க சன்னிதிக்கு சென்றோம்.

முதலில் சட்டைநாதர் குகை உள்ளது. அடுத்து 18 சித்தர்கள் சிலை உள்ளது. சித்தர்கள் எதிரில் நவகிரகங்கள் சன்னிதி உள்ளது. முருகர், சந்தன மகாலிங்கம் சன்னிதிகளைத் தொடர்ந்து ஆகாய கங்கை தீர்த்தம் உள்ளது. அருகில் வனகாளி சன்னிதி. இவ்விடத்தோடு எங்கள் பயணம் இனிதாக முடிந்தது.

சுந்தர மகாலிங்கம் சன்னிதி அருகில் அன்னதானக் கூடம் உள்ளது. சுட சுட சாதமும் அதற்கு சாம்பார்/ரசம் ஊற்றினார்கள் (போஜனம் அன்லிமிடட்). சுண்டல் வைத்தார்கள். அருணையடி அன்னதானத்திற்கு நிதி அளித்தார். திணை மாவு கவர் கொடுத்தார்கள். அவர் அருகில் நான் நின்றதால் எனக்கும் கொடுத்தார்கள். என்னிடம் திணை மாவைக் கொடுத்து விட்டு, 'இவர் உங்களோடு வந்தவர் தானே?' என அருணையடியிடம் உறுதி செய்துக் கொண்டார்.

சூடாக இட்லி சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சாப்பாடும் சாப்பிட்டு பத்து மணி அளவில் மலை இறங்க தொடங்கினோம். ஏறும் முன்பும் சரி, இறங்கும் முன்பும் சரி.. வயிறு நிறைய சாப்பிட்டோம்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே!!

உடம்பினை முன்னம் இழுக்கு என்றிருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!!


பி.கு.:

1. எங்களுடையது முழுமையான பயணம் இல்லை. தவசிப்பாறை, பெரிய மகாலிங்கம், கோரக்கர் ஏடு எழுதிய இடம், சித்தர்கள் வசித்த குகைகள் என மலையில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் விஸ்தாரமாக நீளுகிறது. சரியான itinerary இல்லை என்றால் சிலவற்றை தவற நேரிடும்.

திரு.M.நாகராஜ் என்ற சிவ அன்பர் "கைட்" ஆக உதவுபவர். 9344272555, 9751622107, 9489379417 ஆகிய செல்பேசி எண்கள் பயணத்தைத் திட்டமிட உதவக்கூடும்.

2. கவுண்டுண்ய நதியும் மலை மேலே தான் உள்ளதாம். அதாவது சந்தன மகாலிங்கம் சன்னிதிக்கும் மேலே. நேர பற்றாக்குறையை ஒரு சமாதானமாக பாவித்து, அருணையடி அடுத்த முறை பாவங்களை கழுவிக் கொள்ளலாம் என தனது நோக்கத்தை ஒத்தி வைத்து விட்டார்.

3. கொஞ்சம் பெரிய டார்ச்-லைட்டாக எடுத்து செல்வது நல்லது.திங்கள், 4 ஜூன், 2012

சதுராச்சலம்: ஓர் அனுபவம் - 1

கூட்டுவதும் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை

ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும் – காட்டுவதும்

காட்டி மறைப்பதுவும் கண்ணுதலோன் முன்னமைத்த

ஏட்டின் படியென் றிரு.லிங்கங்கள் மீதான ஆர்வம் எந்த வயதில் தொடங்கியது என சரி வர ஞாபகம் இல்லை. வைத்து விளையாட ஏற்ற பொருளாக தான் எப்பொழுதும் அவை என் கண்களுக்கு தெரிந்தது. 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, சின்ன பச்சை நிறக் கண்ணாடி லிங்கம் ஒன்றினை எப்பொழுதும் பேன்ட் பாக்கெட்டிலேயே வைத்திருப்பேன். அந்த லிங்கம் ஒருநாள் சொல்லிக்காமல் கொள்ளாமல் மாயமாய் போய் விட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறவனுக்கு இருக்கும் அழுத்தங்களை சொல்லி மாளாது. அந்த அழுத்தங்களில் சிவலிங்கம் காணாமல் போன கவலை கடலில் கரைத்த பெருங்காயம் போல் கரைந்துப் போனது.


பிறகு கல்லூரி படிக்கும் பொழுது ஒருநாள், கும்பகோணத்தில் இருந்து 70/- ரூபாய் மதிப்புள்ள கனமான பித்தளை சிவலிங்கம் வந்து சேர்ந்தது. சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது என்பதாக கேள்வி. அதனால் காட்சிப் பொருளாக மட்டும் வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது. எனக்கும் அது தானே தேவை. ஆனால் அந்தப் பித்தளை லிங்கத்திற்கு, என்னைப் பார்த்தால் எப்படி இருந்தது என தெரியவில்லை. எவர் கண்ணையோ உறுத்த வைத்து, என் கண்ணில் மண்ணைத் தூவி எங்கோ சென்று விட்டது. சரி எனக்கும், சிவ லிங்கத்திற்கும் ஏக பொருத்தம் போலும் என ஒருவாறு சமாதானம் அடைந்து விட்டேன்.
பெரும்பாலான சமாதானங்களின் ஆயுசு குறைவே. இந்த வருடம் ஏப்ரல் ஐந்தாம் தேதியில், நன்றாக பசிக்கும் மதிய வேளையின் பொழுது அரும்பாக்கத்தில் ஒரு லிங்கம் கிடைத்தது. சின்னஞ்சிறிய லிங்கம். எனக்காக கடல் கடந்து பயணம் செய்திருந்தது. தொட்டால் சில்லென்று இருந்தது. பார்ப்பதற்கு மிட்டாய் போல் இருந்தது. அப்படியே விழுங்கி விடலாமா என்று கூட தோன்றியது. ஒவ்வாமையில் வாந்தி வந்து, வாந்தியில் லிங்கம் வந்து, எங்கே அதை மற்றவர்கள் பார்த்து.. எனக்கு யாரேனும் ஆசிரமம் தொடங்கி விடுவார்களோ என பயந்து நடுங்கி அவ்வாசையை மூட்டைக் கட்டினேன். ஆர்வக் கோளாறில் ஒருநாள் முழுவதும் கையில் அழுத்திப் பிடித்தப்படியே தூங்கினேன். கையெல்லாம் கருப்பாகி விட்டது. மூலிகையாம், ரசமாம், ரச லிங்கமாம். அதை அளித்த நண்பர் பயப்பட ஒன்னுமில்லை என்று சொன்னார்.


லிங்கத்தின் மீதான எனது பிடிப்பிற்கு என்னக் காரணம் என்று யோசித்துப் பார்த்தேன். லிங்கங்கள் எனக்காக ஏதாவது தருவிக்கும் அல்லது நான் நினைத்ததை நடத்திக் காட்டும் என விட்டலாச்சாரிய மனோபாவத்தில் இருந்துள்ளேன். அப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் எனக்கு உலகிலுள்ள ஒட்டுமொத்த லிங்கங்களின் மீதும் கோபமோ கோபம். அந்தக் கோபத்தை யாரிடம் காட்ட என தெரியாமல், லிங்கம் அளித்த நண்பரிடமே காட்டி விடலாம் என்று தீர்மானித்தேன். அதற்காக தொடையை தட்டிக் கொண்டு சண்டைக்கா செல்ல முடியும்? விளையாட்டுத் தனமாய் கோபத்தை வெளிப்படுத்தணும் என்று முடிவு செய்தேன். அதெப்படி விளையாட்டுத்தனமாய் கோபப்படுவது என்று தெரியாததால் என் மீது எனக்கே கோபமாக வந்தது.
'நான் படிக்க நினைக்கும் புத்தகங்களை.. வானத்தில் இருந்து மழையாக லிங்கம் வர வைக்குமா?' என்று கேட்கலாம் என ரொம்ப யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ரொம்ப திருப்தியாய் என் புத்திசாலித்தனமான கேள்வியைப் எண்ணிப் பார்த்தேன். சின்னப் பிள்ளைத்தனமாய் இருந்தது. எதற்குமே திருப்திப்படாத மனதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கவலை வேறு இடையில். அப்பொழுது நண்பர் ரகுவிடம் இருந்து படிக்க வாங்கிய 'சொர்ண ரகசியம்' என்றொரு புத்தகம் கண்ணில் பட்டது. சதுரகிரி என்ற மலையில் நடப்பதாக செல்லும் கதை. லிங்கம் - சதுரகிரி என்று பொருத்தி கேட்க ஒரு கேள்வி மனதில் எழுந்தது.

'இந்த லிங்கம் என்னை சதுரகிரி அழைச்சிக்கிட்டு போகுமா?' என்று கேட்டு சிரித்தேன்.

'ஓ.. போவுமே!' என்று பதில் கிடைத்தது.

கேட்பவன் கேணையனாக இருந்தால் பதில் இப்படித் தான் வரும். நான் தான் அது புரிந்து எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அவமானப்பட்ட பின்பு தான் புத்தியில் எல்லாம் உறைக்கிறது.

அதன்பின் ஒருநாள் பீகாரில் யோகம் பயின்ற நண்பர் எறும்பு இராஜகோபாலரிடம் என்னை சதுரகிரி அழைத்து செல்லும்படி கேட்டேன். முன்பே ஒருமுறை சதுரகிரி சென்றிருந்த அவர், இன்னொரு முறை குழுவாக பயணிக்க திட்டமிடுவதாக மோப்பம் பிடித்திருந்தேன்.
"யோவ் குட்டி டின்னு.. நானே போவனா என தெரியாது? அதெல்லாம் அவர் கூப்பிட்டா தான் போக முடியும்" என என்னைக் கழட்டி விட்டுட்டார். என்னை சதுரகிரியில் இருந்து சந்தன மகாலிங்கம் போன் செய்து விருந்துக்கு வாப்பா என்றா அழைக்கப் போகிறார்? அப்படியே அவர் அழைக்க நினைத்தாலும், அவரிடம் போன் உள்ளதோ இல்லையோ? அப்படியே போன் இருந்தாலும், அவர் வீற்றிருக்கும் மலை மேல் சிக்னல் இருக்குமோ இல்லையோ? எறும்பு கைவிட்ட நிலையில் சதுரகிரி பயணக் கனவு, பேய்த் தேராக மின்னி மறைந்தது.ஜூன் 17 மாலை, பஸ் உலகில் விரும்பத்தக்க புரட்சி செய்து வரும் அண்ணல் அருணையடி அழைத்தார்.


"சதுரகிரி போலாமா?"

"எப்ப?"

"இன்னிக்கு."

"அவ்வ்.. என்கிட்ட பணம் இல்ல."

"அது பார்த்துக்கலாம். நீ வர்ற."

முதலில் வர்றியா என கேட்டவர் 'வர்ற அல்லது வந்து தான் ஆகணும்' என்ற தொனியில் பேசினார்.

அடுத்த நாள் சனிக்கிழமை மதியம் திருவில்லிபுத்தூரில், பேருந்து நிலையம் எதிரில் உள்ள கற்பகம் ஹோட்டலில் திவ்யமாய் சாப்பிட்டோம். வத்றாப்/வத்திராயிருப்பு என்று மழுவிய/மழுவாத பெயருடைய ஊரில் இறங்கினோம். அந்த ஊரை பெயர்ப் பலகை உதவியின்றியே கண்டுப்பிடிக்கலாம். அந்த ஊரின் முகப்பில் தென்னந்தோப்பு உயர்ந்து நிற்கிறது. வத்திராயிருப்புக்கு 'குட்டி மலையாள நாடு' என்ற பெயரும் உண்டாம். தென்னையும், செந்நெல்லும் தழைத்துக் காணப்படுவதால் தான் அந்த ஊரிற்கு 'வற்றாத இருப்பு' என காரணப் பெயர் வந்ததாக தெரிகிறது. அந்தக் காரணம் உண்மையாக தான் இருக்கும் என்பதை வத்ராப்பிற்கு முன்னிருக்கும் ஊர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தால் தெரியும். வத்திராயிருப்பில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் சதுரகிரி மலையின் அடிவாரமான தாணிப்பாறைக்கு சென்று இறங்கினோம். ஓங்கி உயர்ந்து வீற்றிருந்த மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்  அன்போடு வரவேற்றது.

இந்தப் பயணம் அந்த ரசலிங்கத்தால் தான் சாத்தியம் ஆனதோ என சந்தேகம் மெல்ல எழுந்து வலுக்க ஆரம்பித்தது. அந்த லிங்கத்தை என்னிடம் கையில் கொடுக்கும் முன், "இன்னும் மூனு மாசத்தில் நீ ஒரு பெரிய மாற்றத்த எதிர்பார்க்கலாம்" என்று சொல்லி கண்களை மூடி, ஏதோ மந்திரம் சொல்வது போல முணுமுணுத்தார். ஒருவேளை எழுத்தாளர், கிழுத்தாளர் ஆயிடுவேனோ என நப்பாசை எட்டிப் பார்த்தது. சிவன் என்ன தான் கல்லாக இருந்தாலும், தனது வாசக பக்தர்களை அத்தகைய இன்னல்களுக்கு உட்படுத்த விரும்ப மாட்டார் என்றே தோன்றுகிறது. கூட்டி கழித்துப் பார்த்தால், பெரியவர் சொன்ன மாற்றம் இதுவாக தான் இருக்கும் எனப் பட்டது. இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காக்கா, பனம்பழ கதையாக இருந்து விட்டால்?

04:20. இந்த நேரத்தில் மலை ஏற தொடங்கியது தற்செயல் தான். எவரும் எந்த அர்த்தமும் கற்பித்துக் கொள்ள வேண்டாம். ரம்மியமான மாலைப் பொழுது அது. சம தரையில் நடக்கத் தொடங்கியதும் முதலில் தென்பட்டது "ஆசீர்வாதப் பிள்ளையார்" சன்னதி. இடம்புரி அல்லது வலம்புரி விநாயகராக இல்லாமல், துதிக்கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் நிலையில் உள்ளது இந்தப் பிள்ளையாரின் சிறப்பு. பக்கத்தில் அம்மன் சன்னிதி. பூட்டியக் கோயிலை வழிபடக் கூடாதென அருணையடி வந்து விட்டார். நான் அவருடன் செல்லாமல், வலப் பக்கமிருந்த சூப் கடையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"முடவன் ஆட்டுகால் கிழங்கு சூப்", கொல்லி மலை ஆசிரமத்தின் பெயர் ஏதோ எழுதியிருந்தது. பாறைகளில் விளையும் கிழங்காம். சளி, இருமல், மூட்டு வலி என எல்லாம் மூலிகையும் ஒரே மாதிரியான நிவாரணத்திற்கு தான் பயன்படும் போல. செம காரம். அந்தச் சூப் கடை வாசலில் இருந்து தான் மலைத் தொடங்குகிறது. நிதானமாக மலை ஏறினால், மலை உச்சியை நேரத்திற்கு அடைந்து விடுமோ என எண்ணி மிக நிதானமாக நடந்தோம். சின்னக் குழந்தைகளை கடைக்கு அனுப்பினால், அவர்கள் வாங்க வேண்டிய பொருட்களை மறக்காமல் இருக்க.. அந்தப் பொருளின் பெயரை கடை வரை வழியெல்லாம் சொல்லிக் கொண்டே செல்வார்கள். அதைப் போல் கோயம்பேட்டில் ஏறியதிலிருந்து, 'கவுண்டுண்ய நதி'யில் குளிக்கணும் என்று சொல்லிக் கொண்டே வந்தார் அருணையடி. அந்த நதியில் குளித்து எப்படியாவது பூர்வ ஜென்ம பாவங்களைத் தொலைப்பதில் குறியாக இருந்தார். மலை ஏற தொடங்கிய சில நிமிடங்களில், நீர் சலசலக்கும் சத்தம் கேட்டது. அருகில் சரிவான ஒற்றையடி மண் பாதை இருந்தது. அதற்குள் நுழைந்துப் பார்க்கும் சாகச ஆசை எனக்கு. அந்தப் பாதையோ மிகவும் குறுகல். நான் அருணையடியைப் பார்த்தேன். அவருக்கும் இறங்க ஆசை தான் போல. 'போய் பார்க்கலாம்' என்றார். அடடே.. நாங்கள் ஒத்த கருத்து உள்ளவர்கள் போல என்று நினைத்துக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, எங்கே அந்தச் சலசலக்கும் நீர் நிலை 'கவுண்டுண்ய நதி' ஆக இருக்குமோ என்ற பரிதவிப்பு அவருக்கு. எனக்கு 'திக்' என்றிருந்தது. மலையே இப்பொழுது தான் தொடங்குகிறது. இதே ரீதியில் போனால் நிறைய இடங்களில் முக்கு போட்டுக் கோண்டே இருப்பாரோ என திகில் ஆட்கொண்டது. நான் மலையை திரும்பிப் பார்த்தேன். அதுவோ பிராம்மாவிற்கு ஆட்டம் காட்டிய லிங்கோத்பவர் போல் ஓங்கி வளர்ந்த வண்ணமாக இருப்பது போல் தோன்றியது. நான் தலையில் மட்டும் தண்ணீர் தெளித்துக் கொண்டேன். அருணையடி ஜல க்ரீடை முடித்ததும், நடக்கத் தொடங்கினோம். வெளிச்சம் மங்கத் தொடங்கியது.


மாலை 06:50க்கு ஒரு பாறை முன் தளர்வாக நின்றோம். அந்தப் பாறையில் "கோரக்கர் குகை" என எழுதி, ஒரு பள்ளத்தின் பக்கம் அம்புக் குறி வரையப்பட்டிருந்தது. அந்தப் பள்ளத்திற்கு எப்படிச் செல்வது என குழம்பிய பொழுது, அன்பர் ஒருவர் பாதையை சுட்டிக் காட்டினார். மெல்லிய குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்த அன்பர் குளிரை விரட்ட வாயில் வெண்குழல் சுருட்டை வைத்துக் கொண்டு, தீப்பெட்டியை தன் உடையில் தேடிக் கொண்டிருந்தார். சிவனடியாருக்கு தொண்டு புரிவதே தன் பிறவி நோக்கம் என்பது போல், அருணையடி அவர் எடுத்து வந்திருந்த மஞ்சப் பையைத் துழாவி தீப்பெட்டி எடுத்துக் கொடுத்தார். கவுண்டுண்ய நதியில் குளித்து பாவத்தைப் போக்கி கொள்ளாதா வருத்தத்தை, இந்தப் புண்ணியச் செய்கையால் ஈடு செய்து விட்ட திருப்தி அருணையடிக்கு. அந்தத் திருப்தியாலோ என்னமோ இரவு மீண்டும் அவர் நதியில் குளிப்பதைப் பற்றி பேசவில்லை.


ஆயிரம் ஆண்டுகள் அரசாண்ட மாவாணர் குலத்தில் உதித்த மாவீரன் வந்தியதேவனுக்கும் எனக்கும் ஓர் ஒத்துமை உண்டு. அரியும், சிவனும் ஒன்னு.. அறியதாவர் வாயில மண்ணு என்ற எண்ணம் உடையவர்கள் நாங்கள். அதற்கு சாட்சியாய இருக்கும் சங்கர நாராயணன் என அழைக்கப் படும் இரட்டை லிங்கம் சன்னிதி வந்தது. ஒரே ஆவுடையாரில் இரண்டு லிங்கம் உள்ளது. ஆனால் அதிலுள்ள அரசியலைப் பாருங்கள். ஒரு லிங்கம் சிறியதாகவும்; மற்றொன்று பெரியதாகவும் உள்ளது. பெரியதாய் உள்ள லிங்கத்திற்கு சந்தனப் பட்டை அடித்து சிவன் என்று வேறுபடுத்தி, சிறியதாக உள்ள லிங்கத்தை நாராயணன் என காட்டி விட்டனர். அரசியல் ஒழுங்கான பாதை இல்லாத மலை மேலும் உள்ளது.மங்கிக் கொண்டிருந்த வெளிச்சம் மறைந்துப் போனது. தீப்பெட்டியைப் போல, ஒரு துக்கிணியூன்டு டார்ச்-லைட்டையும் பயணத்திற்கு உதவும் என தன் மஞ்சப் பையில் வைத்திருந்தார் அருணையடி. அதில் இருந்து கசிந்த மிக கொஞ்சமான ஒளிக் கொன்டு சமாளித்து நடந்தோம். பாதை இறங்கி திடீரென்று செங்குத்தாக ஏறும் இடங்களில் திண்டாட வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பொறியில் சிக்கிய உணர்வு. சுற்றி மேடான பாறைகள். குத்துமதிப்பாக பாதை இதுவாக தான் இருக்கும் என நடந்தோம். அமர்ந்தோம். காலை நீட்டினோம். பக்கத்தில் அருணையடி அமர்ந்திருப்பார். அவரை உணர தான் முடியும். பார்க்க முடியாது. அடர்த்தியான கானக இருள். 'டிஸ்கவரி சேனலில்' வரும் பிண்ணனி இசையும் இடைவெளி இல்லாது ஒளித்துக் கொண்டே இருந்தது.
"நல்ல அனுபவம் இல்ல?"

எங்கு இருக்கோம், இன்னும் எவ்வளவு தூரம் போகணும் என்று தெரியவில்லை. அப்பொழுது இரவு 08:45 மணி. போகும் பாதை சரி தானா என்பதும் நிச்சயமாக தெரியவில்லை.

"இதுக்கு பெயர் தான் ஏகாந்தம் போல!!"

'அடிங்.' - இது எனது மைன்ட் வாய்ஸ்.

"இங்கயே இருந்துடலாம் போல இருக்கு. யப்பா.. சில்லுன்னு காத்து. மெட்ராசுல இப்படிக் கிடைக்குமா?" - இது எனது மவுத் வாய்ஸ்.

சும்மாவா.. பின்ன? இந்தப் பயணத்திற்கு அவர் தானே ஸ்பான்சர். (பழைய ஸ்பான்சர் ரகுவிற்கு போன மாதம் கல்யாணம் ஆயிடுச்சு.)

அருணையடி உட்கார்ந்தால் ஏகாந்தத்தில் கரைந்து விடுவார் போல. 'நடக்கிற எல்லாத்துக்கும் காரணம் இருக்கு' என்பார். அவரது குருநாதரைப் பற்றி சொல்வார். காதை இரவல் கொடுக்கும் கலைத் தெரிந்தவனுக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை.

இரவு பத்து மணிக்கு பலாவடி கருப்பண்ணசாமி சன்னிதி அடைந்தோம். பெயருக்கு தகுந்தாற் போல் கருப்பா பயங்கரமாக இருந்தார். பொதுவாக மலை ஏறுபவர்களுக்கு பைரவர் நாய் வடிவில் துணையாகவும், வழி மாறாமல் இருக்கவும் உடன் வருவாராம். ஆனால் எங்களுடன் வரவில்லை. இதற்கே எனக்கும், பைரவருக்கும் எந்த வாய்க்கால் தகராறும் கூட இல்லை. பைரவர் ஏன் வரவில்லை என யோசித்துக் கொண்டிருந்தேன். அருணையடி கன்னத்தில் போட்டுக் கொண்டார். எனக்கு அவர் மேல் தான் சந்தேகமாக இருந்தது.

அருவி ஓடுவது போல் கருப்பண்ணசாமி சன்னிதி எதிரில் சத்தம். பாறைகள் விரவி கடந்தன. சன்னிதியின் பின் பக்கம் மேடு. மேட்டில் காடு. சன்னிதியின் இடப் பக்கம் நாங்கள் ஏறி வந்த வழி. வலப் பக்கம் போனோம். புதர் மண்டி இருந்தது."பாதைய எங்கயோ தொலைச்சிட்டோம் போல!"அவ்வ்.. தொலைக்கக் கூடிய பொருளா அது?

திங்கள், 8 ஜூன், 2009

கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி

நான் ஒரு அவசர வேலையாக பிரதான சாலை வழியே நடந்துக் கொண்டிருந்தேன். கிழக்குத் தெருவான செட்டியார்களின் ஜாகைகள் இருக்கும் வீதி வழியாக சென்றால் தூரம் பாதியாக குறையும் என்பதால் பாதையை மாற்றினேன். மாணிக்கம் செட்டி வீட்டு வாசல் அருகே ஒரு சிறுமி அழுதுக் கொண்டிருந்தாள். 'ஏன் பாப்பா அழுகிறாய்?' என்று கேட்டேன். அது நிமிர்ந்து என் முகத்தை பார்த்து, 'ஐயோ! பூச்சாண்டி' என்று மேலும் குரலெடுத்து அழுதது. நான் என் மீசைக்கும், தலை பாகைக்கும் கிடைத்த வரவேற்பினை எண்ணி மனதிற்குள் முறுவலித்தேன். நான் சற்றே முகத்தினை சாந்தப்படுத்தி சிரித்தவாறே, 'நான் பூச்சாண்டி இல்லை பாப்பா. என் பெயர் ஷெல்லிதாசன்' என்றேன் மெல்லிய குரலில். ஆனால் அச்சிறுமிக்கு என் பெயர் தேவை இல்லை போலிருக்கிறது. ஐம்புலன்களையும் அடக்கிய ஞானியை போல் அச்சிறுமியின் பார்வையும், எண்ணமும் மேல் நோக்கியே இருந்தது. சற்று முன் என் மேலிருந்த அச்சம் நொடிகளில் மறைந்து விட்டிருந்தது. குழந்தையின் மனோலயத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

'மாமா..எனக்கு அந்த பூனை வேணும்' என என்னிடம் சிறுமி வாஞ்சையாகி விட்டாள். 'நான் தான் பூச்சாண்டி ஆச்சே! என்னிடம் ஏன் கேட்கிறாய்?' என்று மனதில் எழுந்த கேள்வியை கேட்கவில்லை. ஏனென்றால் என் சாமர்த்தியம் மழலைகளிடம் பலிக்காது என நன்றாகவே நான் அறிந்திருந்தேன். பிஞ்சு விரல்கள் காட்டிய திசைதனை தொடர்ந்தால் அது எதிர் வீட்டு கூரையின் மேல் முடிந்தது. அங்கே ஒரு பூனைக் குட்டி எங்களை முறைத்தவாறு சிலை போல் நின்றிருந்தது. சிறுமியின் மேல் நோக்கிய பார்வையின் இரகசியம் புரிந்தது.

முதல் நாள் பாரதப் போரில் பார்த்திபனுக்கு ஏற்பட்ட மன நிலையில் இருந்தேன். சென்று கொண்டிருக்கும் பணியா? இல்லை கூரை மேலிருக்கும் பூனையா? என்று இருதலை கொல்லி எறும்பு போல் முடிவு எடுக்க முடியாமல் குழம்பினேன். 'மாமா..பூனைய போய் பிடிச்சின்னு வாங்க' என்று அன்பு கட்டளை பிறந்தது. அன்று பார்த்திபனுக்கு கண்ணன் இருந்தான். எனக்கு இன்று இச்சிறுமி போலும். சுயநலம் அழிந்தது. எதன் நிமித்தமாக வீட்டை விட்டு கிளம்பினேனோ அதை முற்றிலுமாய் மறந்தேன். எனது கண்ணிற்கு என்னை முறைக்கும் பூனை மட்டுமே தெரிந்தது.

கூரை மீது ஏறி பூனையை பிடித்தால், வீட்டு உரிமையாளன் சண்டைக்கு வந்து விடுவான். பூனை தானாகவும் கீழே இறங்காது. அப்படியே இறங்கினாலும் நம் பக்கம் தான் இறங்கும் எனவும் உறுதி கூற முடியாது. பூனையிடம் தோற்று விடுவோமோ என சிறிய பயம் எட்டி பார்த்தது. குழந்தையின் நம்பிக்கையை பாழாக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. ஏன் தரையில் நடமாடும் ஆடுகளின் மீதெல்லாம் இச்சிறுமிக்கு பிரியம் ஏர்படவில்லை?கடமையை செய் பலனை எதிர்பாராதே என சுலபமாக கண்ணன் சொல்லி விட்டார். மற்றவர்களின் உடைமைகள் மீதேறி கடமையை எப்படி செய்வது? பிரதான சாலை வழியாகவே சென்றிருக்கலாம். குறுக்கு வழி என்றும் உதவாது என்பது சரியாக தான் இருக்கிறது.

'நான் வேண்டுமானால் வரும் பொழுது புது பூனை வாங்கி வரட்டுமா?' என தோல்வியினை மறைத்து சமாதானம் பேச முயன்றேன். சாது மிரண்டால் என சொல்வார்களே, அது போல கண்களில் அக்னி கனல் வீச,'எனக்கு அது தான் வேண்டும்' என்றாள் பிடிவாதமாக. ம்ம்..திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. விசித்திரமான மனம் சென்று கொண்டிருந்த வேலையை நினைவுப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை வேறு வலியுறுத்த ஆரம்பித்தது.

'சாப்பிட வாம்மா' என வீட்டுக்குள் இருந்து குரல் வந்தவுடனே சிட்டாய் பறந்து விட்டாள் சிறுமி. ஆனால் எனக்கு அந்த குரலினை உள் வாங்கி அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு சில நொடிகள் ஆனாது. அதற்குள் அவள் வாசற்படியை கடந்து மறைந்து விட்டிருந்தாள். நீர் மேலிருக்கும் தாமரை போன்ற மனம் படைத்தவர்கள் போலும் குழந்தைகள். பூனையின் மீதே முழு கருத்து இருந்தும் அன்னையின் குரல் கேட்டதும் அனைத்தையும் உதறி விட்டு சென்று விட்டாள். அனைவரும் இப்படி இருந்து விட்டால் பிரச்சனை இராது.

'தெய்வன் மனுஷ ரூபேனாம்' என்று சொல்லுவார்கள். எனக்கு அச்சிறுமியின் தாய் குரல், அசிரீரியாகவே பட்டது. கடைசியாக பூனையை ஒருமுறை பார்த்து விட்டு, கிளம்பலாம் என எத்தனிக்கும் பொழுது சிறுமி வந்து விட்டாள். மின்னலை மிந்தி விடுவாள் போலிருக்கிறது.

'நான் சாப்பிட்டு வர்றதுக்குள்ள,பூனக் குட்டிய பிடிச்சு வையுங்க.'


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

ஞாயிறு, 7 ஜூன், 2009

சனி, 23 மே, 2009

ஊர் உலகம்

நமக்கு ரொம்ப வேண்டிய பையன், பக்கத்துல சினிமா எடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டு வேடிக்கை பார்க்க போயிருக்கான். பக்கத்துல நல்ல டீ கடை எங்க இருக்குன்னு அந்த சினிமாக்கார கும்பலுல யாரோ ஒருத்தவங்க நம்ம பையன்கிட்ட கேட்டிருக்காங்க. அப்படியே பொதுவா நம்ம பையன் சினிமாக்காரங்க கிட்ட பேசினத, தூரத்துல இருந்து அவங்க ஊர் ஆளு ஒருத்தரு பார்த்துட்டாரு.


"நம்ம பையன்.. இப்ப நடிகர் ஆயிட்டான். தெரியுமா?"

"எனக்கு அப்பவே தெரியும்... அவன் முகத்தில அப்படி ஒரு கலை."

"பரவாயில்ல... கொஞ்ச நாளுலயே ரெண்டு, மூனு படத்துல நடிக்க கூப்பிட்டுட்டாங்களாம்."

"ரஜினி, கமல் எல்லாம் இவனுக்கு இப்ப ப்ரென்ட்ஸ் ஆயிட்டாங்களாம்."


அவனவன் முன்னேறுவதற்கு என்னம்மோ பண்றான். நம்ம பையனோ சுலபமாக பெரிய ஆள் ஆகி விட்டேன். அதெப்படி என்று தீவிரமாக யோசித்த பொழுது தான் ஒன்று புரிந்தது. கடின உழைப்போ, திறமையோ தேவையில்லை. ஒரு காதும், ஒரு வாயும் சுத்தி இருக்கிற ஒரு நாலு பேருக்கு இருந்தா போதும். நீங்களும் நம்ம் பையன் மாதிரி பெரிய ஆளு தான்.

இப்படியெல்லாம் நம்ம பையனை உசுப்பேத்தி உச்சாணி கொம்பில் உட்கார வைத்த ஊர் உலகம்...கடைசியாக அந்த கேள்வியை அவனிடம் கேட்டு விட்டது.

"உன் படம் எப்ப ரிலீஸ் ஆகும்?"

திங்கள், 18 மே, 2009

சோழியன் குடுமி

"நமக்கு கிடைத்த தகவல்.. சரி தானா?"
"அது பொய்யாய் இருப்பதற்கான வாய்ப்புகள் ரொம்ப கம்மி சார்" என்றான் இளம் ராணுவ அதிகாரி மிடுக்காக.
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "எப்படியும் நமக்கு கண்டியில இருந்து உதவுவாங்க. கண்டிக்கு போன் பண்ணு" என்றார் தொய்வான குரலில்.

.............

மயான அமைதியுடன் இருக்கும் அந்த கிராமத்தில் முதல் குண்டினை வீசினர். எப்பொழுதும் போல் கிராம மக்கள் அலறி அடித்து ஓடி வரவில்லை. இரண்டு, மூன்று குண்டுகளுக்கு பிறகும் எந்த விதமான சப்தமோ, எதிர்ப்போ இல்லை. மூத்த தலைவர்கள் சிலர் ஒன்று கூடி, ஒற்றர் படையினை வேவு பார்க்க அனுப்பினர். பதுங்கி பதுங்கி சென்ற ஒற்றர் படை வீரர்கள் விழி பிதுங்கியவாறே வந்தனர்.
"யாருமே உயிரோட இல்ல சார்?"
"எல்லாம் தூங்குற மாதிரி தான் சார் படுத்து இருக்காங்க. ஆனா உயிர் இல்ல."

.............

"அவருகிட்ட பேசனும்னா.. கண்டிக்கு நேர்ல போனா தான் முடியும்னு சொல்லிட்டாங்க சார்."
"நாம எங்கிருந்து பேசுறோம்னு தெரிஞ்சுமா, அப்படி சொன்னாங்க."
"தெரிஞ்சதால தான் சார்..சொன்னாங்க" என்றான் இளம் அதிகாரி அழுத்தம் திருத்தமாக.
இளம் அதிகாரியை முறைப்பது போல் பார்த்து விட்டு, "கண்டிக்கு போக ஏற்பாடு பண்ணு" என்றார் ஜன்னலை பார்த்தவாறே.
............ .

"இது ஒரு வகையான ஸ்லோ பாய்சன். எல்லா உறுப்புகளையும் நிதானமா செயலிழக்க வச்சு, கடைசியில உயிர் போயிடும் சார்" என்றார் மருத்துவர்
பிரேத பரிசோதனை அறிக்கையை கையில் வைத்தவாறு.
"இது கொலையா இல்ல தற்கொலையா?"
"தெரியல. ஆனா இந்த மாதிரி ஸ்லோ பாய்சன் இங்க கிடைக்கறதில்லை. வெளியில இருந்து தான் வந்திருக்கனும்" என்று கிளம்பியவர், "இன்னொரு விஷயம்..சாகுறப்ப யாருக்கும் வலி எதுவும் தெரிஞ்சிருக்காது."

.............

அவர் பிரக்ஞையுடன் அமர்ந்திருக்காரா இல்லையா என்பதே சந்தேகமாக இருந்தது. சிரிப்பது போன்ற உதடுகள், போதையில் இருப்பது போன்ற கண்கள், விழுந்து விடுவது போல் நடுங்கும் தேகம். இவரிடம் என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டே, "உங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைக்கிறேன்" என்று மூத்த அதிகாரி ஆரம்பித்தார்.
"தெரியாது" என்றார் ஒற்றை வார்த்தையில் உறுதியாக.
"ஒரு கிராமமே மர்மமான முறையில் இறந்திருக்காங்க. அதுல உங்க ஆளு ஒருத்தர் சம்பந்தப்பட்டிருக்கார். அவர நாங்க கூடிய சீக்கிரம் பிடிச்சிடுவோம். ஆயுதம் கடத்த முயன்றார் என்று அவர நாங்க ராணுவ முறைப்படி..." என்று நிறுத்தி, "அதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு" என்று மூத்த ராணுவ அதிகாரி முடித்தார்.
"கொல்லாமையை போதிக்க வேண்டிய எங்கிட்டயே.. கொல பண்ணப் போறேன்னு சொல்லிட்டு செய்றீங்க" என்று வருத்தத்தோடு புன்னகைத்தார்.


.............

"சார்.. நேத்து நம்ம செக் போஸ்ட் தாண்டி ஒருத்தர் தான் போயிருக்கார்."
"அவர் பெயரு.. மஹிந்தா இந்திரசாரா."
"அனுராதாபுரம் புத்த மடத்துல இருந்து வர்றதா சொன்னார் சார்."
"அவர் ஒரே ஒரு துணி மூட்டை தான் வச்சிருந்திருக்கார். அதுல சில மூலிகைங்க இருந்திருக்கு."
"அனுராதபுரம் மடத்துல விசாரிச்சிங்கீளா?" என்றார் மூத்த அதிகாரி கோபமாக.
"அவர் அந்த மடத்த சேர்ந்தவர் தானாம். ஆனா அவர பத்தி வேறு எதுவும் சொல்ல மறுத்துட்டாங்க."

.............

"இது ரொம்ப சீரியசான இஷ்யூ. உலக நாடுகள் எல்லாம் நம்மல உன்னிப்பா பார்த்துக்கிட்டிருக்காங்க. நீங்க மஹிந்தா இந்திரசாராவ பிடிக்க உதவுனீங்கன்னா, எந்த மடத்து பெயரும் வராம நாங்க மறைச்சிடுறோம். உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது."
"உண்மைய ஏன் மறைக்கனும்? தானாக பழுத்து விழ வேண்டிய சருகுகளை, இலையாய் துளிர ஆரம்பிக்கும் பொழுதே அதை சிவப்பாக்கி கீழே விழ வைக்க பார்த்தீங்க. ஆனா இப்ப அந்த இலைகளை சேதாரமில்லாமல் இந்திரசாரா பறிச்சுட்டார். இதுல மறைப்பதற்கு ஒன்னுமில்லை. அதற்கான அவசியமுமில்லை" என்று புத்தர் சிலையை கம்பீரமாக பார்த்தார்.
"அடுத்த தடவையும் நீங்களே தலைமை குருவா வருவதற்கு அரசு உதவி செய்யும்" என்றார் அதிகாரியும் புத்தர் சிலையைப் பார்த்து.
"புத்தம்..சரணம்..கச்சாமி" என்றார் புத்தர் மீதிருந்த பார்வையை எடுத்தவாறே.

செவ்வாய், 24 மார்ச், 2009

சாஃப்ட்வேர் இஞ்சினீயரும், அண்ணா யூனிவர்சிட்டி ப்ரொஃபசரும்

"நாளைக்கு எனக்கு.. கவுன்சிலிங் சார்."
"எனக்கும் தான்" என்றார் வருத்தமாக.
"என்ன சார்.. என்னம்மோ மாதிரி பேசுறீங்க?" என்று கேள்விக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.
"க்யூ பெருசா இருக்கு.. ரொம்ப நேரம் நிக்கனுமேனே யோசிக்கிறீங்கலா? அது ஏதோ சின்ன டெக்னிக்கல் ப்ராப்ளம் தானாம் சார். இன்னும் கொஞ்ச நேரத்துல சரி பண்ணிடுவாங்க."
அவர் மீண்டும் அமைதியாக இருந்தார். முகத்தில் சிறு எரிச்சல் தோன்றி மறைந்தது.

"எங்க..எங்க.. இடம் காலியா இருக்குன்னு பார்த்துட்டேன் சார். முடிஞ்சா இரண்டு பேரும் ஒரே இடத்துக்கு அப்ளை பண்ணலாம். ஆனா என்ன, இடம் ரிஜிஸ்டர் ஆகி கன்ஃபார்ம் ஆனவுடன், நமக்கு பழசெல்லாம் மறந்துடும்."
"அப்படியா?" என்றார் திகைத்தவறாக.
"என்ன சார் அப்படியான்னு கேக்குறீங்க! அப்படி தான ப்ரோகிராம் எழுதி இருக்காங்க."
"உனக்கு ப்ரோகிராம் எழத சொல்லி கொடுத்தவனே நான் தான். ம்ம்... சரி விடு. ஆனா உண்மையிலேயே எனக்கு இந்த ப்ரோகிராம் புரியவே இல்ல. உனக்கு மூனு மாசம் முன்னாடி இங்க வந்தவன் நான். ரொம்பா நாளா பென்ச்சுல உட்கார்ந்துக்கிட்டிருக்கேன். ஆனா ரெண்டே வாரத்துல உனக்கு கவுன்சிலிங் டேட் வந்துடிச்சு!!"
"நீங்க சீனியாரிட்டி படி எல்லாம் நடக்கனும்னு எதிர் பார்க்குறீங்க. ஆன இங்க வரவங்களா டெஸ்ட் பண்ணி, க்வாலிட்டி ரேட்டிங் போட்டு தனி டேட்டா பேஸ் மெயின்டெயின் பண்ணுது. ப்ளஸ் பக்ஸ் கால்குலேஷன் அது, இதுனு ஏதோ ஃபார்முலா யூஸ் பண்ணி கவுன்சிலிங் டேட்டும், ப்ளேசும் அசைன் ஆகுது."

"என்ன ரெண்டு பேரும் இங்க நின்னு பேசிக்கிட்டிருக்கீங்க. நாளைக்கு பூமியில பொறக்கிறவங்களுக்கு, நாளன்னைக்கு பொறக்க போற நீங்க தான முன்ன நின்னு ஃபேர்வெல் தரனும்."