"எங்க வச்சேள்?"
சோமு ஐயர் தன் வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிரம் தடவைக்கு மேல் இந்த கேள்வியை கேட்டு விட்டார். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஊர் தலைவர் முருகேச முதலியாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார் ஐயர். இரண்டு நாட்களாக முருகேச முதலியார் ஐயர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்.
"நம்பிக்கிட்ட புதுசு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். புதன்கிழமை வந்துடும்" என்றார் ஐயர்.
"ஆனா.. பெளர்ணமி செவ்வாய்கிழமை தானே!"
சில நாட்களுக்கு முன் நடந்த கோயில் திருவிழாவின் போது, "பாப்பானுக்கு புரோகிதமும், செட்டிக்கு வணிகமும் சொல்லி கொடுக்காமலே வந்துடும் அந்த மாதிரி...." என்று ஏதோ மேற்கோள் காட்டி பேசினார் ஆறுமுக கவுண்டர். அங்கிருந்த முருகேச முதலியார், கவுண்டரின் மேற்கோளை மறுத்தார். அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாத முடிவில், கடை ஒன்று வைத்து தன்னாலும் வணிகம் செய்ய முடியும் என்று நிருபிப்பதாக சொல்லி விட்டு வந்து விட்டார் முருகேச முதலியார். சொன்னதோடு நில்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக தொடங்கினார். அவரது ஜாதகப் படி வரும் வளர்பிறைக்குள் கடை வைத்தால் முன்னேறுவார் என்றும், அதன் பிறகு இரண்டு வருடங்கள் தொழில் யோகம் இல்லை என்றிருந்தது.
"ஏன்டா கணேசா..முதலியாரு செலவு இல்லாம புரோகிதம் படிச்சிருக்கலாம். இன்னும் நாள் மட்டும் தான் குறிக்கல போலிருக்கு. முப்பது குடும்பம் இருக்கிர ஊர்ல அவர் வேற தொழில் ஆரம்பிச்சா நீ என்னடா பண்ணுவா!"
"நீங்க எதுவும் இத பத்தி எல்லாம் வெளியில பேசாதீங்கம்மா..! நடக்கிறது நடக்கட்டும். பார்த்துக்கலாம்...விசாலம் மதிய உணவை பையனிடம் கொடுத்து அனுப்பிச்சுடு" என்று கணேச செட்டியார் சொல்லி விட்டு கிளம்பி விட்டார். செட்டியார் கிளம்பியவுடன் கையில் சில வெல்ல கட்டிகளுடன் விசாலாட்சி தோட்டத்திற்கு சென்றாள்.
ஐயரின் மூன்று வயது மகள் கெளரியிடம், "எப்ப வெல்லம் வேணும்னாலும் எங்கிட்ட கேளு" என்றாள்.
நவீன அறிவியலின் வழிமுறைகள்
10 மணிநேரம் முன்பு