எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டு மகிழ்ச்சியாக பள்ளிக்குப் புறப்பட்டாள் செளந்தர்யா. பெரியவர்களின் மத்தியிலேயே இருந்து விட்டு, தன் வயது குழந்தைகளைப் பார்ப்பதற்கு மிக குதூகலமாக இருந்தது. ஆனால் பாட்டியின் வார்த்தைகளை மீறவில்லை. பள்ளி விட்டு வரும் வழியில் கூட்டத்தை பார்த்துக் கொண்டே வந்தாள்.
"பால்கார மாணிக்கம் மாமாவும், ஆசாரி தாத்தா பொண்ணும் கிணத்துல விழுந்துட்டாங்களா அம்மா? பெரிய கிணத்துக்கிட்ட எல்லாம் நிக்கிறாங்க?" என்று கேட்டாள் செளந்தர்யா.
லட்சுமி என்ன சொல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, "ஏம்மா அவா ரெண்டு பேரும் கிணத்துல விழுந்தா?" என அடுத்த கேள்வியும் கேட்டு விட்டு, "கிணத்துல ஜலம் தானம்மா இருக்கும். அங்க இவா ரெண்டு பேரும் என்ன பண்ணுவா?" என்று தொடர்ந்துக் கேட்டாள் செளந்தர்யா.
லட்சுமி சிரித்து விட்டு, "அவா ரெண்டும் பேரயும் பேசக் கூடாதுன்னு உங்க பாட்டி மாதிரி பெரியவா எல்லாம் சொன்னதால, அவா ரெண்டு பெரும் சாமிகிட்ட போயிட்டா" என்றாள்.
"கிணத்துல தான் சாமி இருக்காராம்மா? நம்ம வீட்டு சாமியறையில, கோயிலில இருக்கிறது எல்லாம் யாரு? சாமின்னு பாட்டி சொன்னாங்களே!"
"அவர் எல்லா இடத்திலயும் இருப்பாரு. அதே மாதிரி எல்லாருகிட்டயும் இருக்கிறாரு. உங்கிட்ட, எங்கிட்ட, அப்பாகிட்ட, தாத்தா பாட்டி கிட்ட, ஆடு, மாடு. கோழி இப்படி எல்லா உயிர்லயும் இருக்கிறாரு."
"அப்ப ஸ்கூலயும் இருப்பாரு இல்லம்மா?"
"இருப்பாரு" என்று சிரித்தாள் லட்சுமி.
"சாமிகிட்ட போன அக்காவும், அம்மாவும் பேசிக்குவாளாம்மா!"
"ம்ம்..பேஷா பேசிப்பா."
வகுப்பில் ஒரு பையன் அனைவருக்கும் மாம்பழம் கொடுத்தான்.
"நேக்கு வேண்டாம். எங்க பாட்டி திட்டுவா."
"உங்க பாட்டிக்கு தெரியாம சாப்பிடு. எங்க வீட்ல எனக்கு உன்ன மாதிரியே அழகா தங்கிச்சி பாப்பா பிறந்திருக்கு" என்றவனிடம், "பாப்பா பெயரென்ன?" என்று கேட்டாள்.
"தெரியல. பாப்பான்னு தான் எல்லாம் கூப்பிடுறாங்க" என்று பழத்தை நீட்டினான்.
"வேணாம். நேக்கு பயமாயிருக்கு."
"நீ சாப்பிடலன்னா எங்க பாப்பா கோவிச்சுக்கும்."
செளந்தர்யா யோசித்து விட்டு, "நான் சாப்பிட்டுட்டேன்னு பாப்பாக்கிட்ட சொல்லு" என்று பழத்தை வாங்கிக் கொண்டு, "உன் பெயரென்ன?" என்று கேட்டாள்.
"கட்டபொம்மன்" என்று அவன் சொன்னதற்கு செளந்தர்யா சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிற?" என்று கேட்டான்.
"யார் நோக்கு பெயர் வச்சா?"
"எங்கய்யா தான். இது சாமி பெயரு."
"சாமி பெயரா! அந்த சாமி எப்படியிருக்கும்? எந்த கோயில்ல இருக்கு?"
"எனக்கும் தெரியல. ஆனா அந்த சாமி தான் வெள்ளக்காரங்க எல்லாரையும் கொன்னுச்சு."
"வெள்ளக்காரங்கன்னா யாரு?" என்று கேட்டாள் செளந்தர்யா.
"வெள்ளக்காரங்கன்னா..." என்று இழுத்து, "வெள்ளையா இருப்பாங்க. அவங்கெல்லாம் ரொம்ப கெட்டவங்க" என்றான்.
அந்த ஊரிலியே செளந்தர்யா குடும்பம் தான் மிகுந்த சிவப்பு தோள் உடையவர்களாக இருந்தனர். தனது குடும்பம் தான் வெள்ளைக்காரர்கள் எனவும், தன்னை கட்டபொம்மன் சாமி கொன்றுவிடும் எனவும் பயந்தாள் செளந்தர்யா.
"அப்பா... கட்டபொம்மன்னு ஒரு சாமி இருக்காராப்பா?"
"இல்லடா கண்ணு."
"இருக்காருப்பா. வெள்ளக்காரங்கள கூட கொன்னாரே!"
"இதெல்லாம் யாருடா கண்ணு நோக்கு சொன்னா?"
"எனக்கே எல்லாம் தெரியும்ப்பா."
"சரி, ஆனா கட்டபொம்மன் சாமி இல்லடா. நம்மள மாதிரி சாதாரன ஆளு தான்."
"நாமளும் வெள்ளையா தானப்பா இருக்கோம். நாம தான் வெள்ளைக்காரங்களா?"
"வெள்ளக்காரங்க நம்ம நாட்டை விட்டு போய் இருபது வருஷம் ஆச்சு. இப்ப இங்க வெள்ளக்காரங்களே இல்ல."
அடுத்த நாள் பள்ளியில் கட்டபொம்மனை தேடி சென்று, "நாங்கெல்லாம் வெள்ளக்காரங்க இல்ல. அவங்கெல்லாம் எப்பவோ போயிட்டாங்க. என்னை உங்க சாமி கொல்லாது" என்று சிரித்தாள்.
"நான் உங்கிட்ட பேச மாட்டேன். நான் மாம்பழம் கொடுத்தத ஏன் உங்க பாட்டிக்கிட்ட சொன்ன? நேத்து வீட்டுக்கு வந்து திட்டினாங்க. இனிமே உங்கிட்ட பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க" என்று அழுவது போல் சொன்னான்.
"சாமி சத்தியமா நான் பாட்டிக்கிட்ட சொல்லல. இனிமே நீ எங்கிட்ட பேச மாட்டியா?"
"வேணும்னா யாருக்கும் தெரியாம பேசுறேன்."
"யாரும் திட்டாம நீ எங்கிட்ட பேசறதுக்கு நான் ஒன்னு சொல்லட்டுமா?"
"என்ன?"
"நாம ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வர்ற வழியில இருக்கிற கிணத்துல விழுந்து சாமிகிட்ட போயிடலாம். அப்புறம் யாரும் உன்ன திட்ட மாட்டாங்க" என்றாள் செளந்தர்யா.
"உண்மையாவா? யார் சொன்னா உனக்கு?"
"எங்கம்மா. அவா பொய்யே பேச மாட்டா. ரொம்ப நல்லவா."
"அப்படின்னா...சரி."
Blogged with Flock
2 கருத்துகள்:
பிரமாதம். கடைசி வரியில், ஒரு சுவாரஸ்யமான திருப்பம் வைப்பது, அந்த திருப்பத்திற்கான காரணிகளை கதையின் ஆங்காங்கே தூவி வைப்பது, போன்றவைகளில் எனக்கு கொஞ்சம் உடன்பாடு இல்லை என்றாலும் ஒரு குழந்தையின் ஆரம்பப் புரிதல்கள் அருமையாக பதிவாகி இருப்பதாக நினைக்கிறேன். குழந்தை மட்டுமல்லாமல், அனைவரின் ஆரம்பப் புரிதல்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்தப் புரிதல்களும் முழுமை இல்லாதவை. முழுமையாவது ஏது? எல்லாம் பின்னங்கள், பின்னங்களின் பின்னங்கள்.
இது வரையிலான உன் படைப்புகளில் இதை மட்டும் சிறுகதையாக ஏற்க முடிகிறது.
"அளவில் மட்டும் சிறியதாக இருப்பது சிறுகதையாகாது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி, மனோபாவம், குணவிஸ்தாரம், அல்லது வர்ணனை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஒரு தனிப் பிண்டமாக செய்யும் கவிதைக் கொத்தை மேல்நாட்டினர் லிரிக் என்பார்கள். சிறுகதையும் அப்படிப்பட்ட ஒன்று தான்" - புதுமைப்பித்தன்.
நல்ல சிறுகதை. சொல்ல வேண்டியதை சிவகுமார் நன்றாக சொல்லிவிட்டார். நிறைய படியுங்கள்; நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.
அனுஜன்யா
கருத்துரையிடுக