வியாழன், 27 நவம்பர், 2008

அடையாளங்கள்

'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!'
'எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.'
'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'

இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வருவார்கள். பொதுவாக யாரும் எளிதில் பேசி விட மாட்டார்கள். அரை வயிறு நிறைந்தவுடன் தானாக பேச ஆரம்பிப்பார்கள். விடை பெறும் போது வயிறார வாழ்த்துவார்கள். எனக்கு புண்ணியம் வந்து சேருகிறதோ இல்லையோ ஆனால் மனதில் ஒரு சிறு திருப்தி நிலவும்.

எனது இந்த பொழுதுப்போக்கு நன்றாக சென்றுக் கொன்டிருந்தது. அவனை காணும் வரை அல்லது அவர் என்னை குழப்பும் வரை. மிக நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் தூய்மையாக இருந்தார். ஆனால் அவரது ஆடை குறைப்பு கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விட்டது. முக்கால் வயிறு நிரம்பியும் அவர் வாயே திறக்கவில்லை. சரி நானே பேசி விடலாம் என்று எனது முதல் கேள்வியைக் கேட்டேன்.

"உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா?" என்றேன் மரியாதையாக. யாராக இருந்தால் என்ன, மரியாதை அவசியமாகிறதே! ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. இன்னும் என்னென்ன கேள்விகளோ கேட்டேன். ஆனால் அவர் அசரவில்லை.
முழுவதுமாக உண்டு விட்டு, "நானும் ரொம்ப வருஷமா அத தான் தேடிக்கிட்டிருக்கேன்" என்றார். உண்மைகளை மழுப்பும் இத்தகைய பதில்களை கேட்டால் நான் எரிச்சலாயிடுவேன்.
"வாழ்க்கைய தொலைச்சவங்க சொல்ற சமாதானம் இது" என்றேன் கோபமாக.
"அப்ப உனக்கு நீ யாருன்னு தெரியுமா?" என்றார் ஆச்சரியமாக.
"நல்லாவே தெரியும்.. கெளதம்" என்றேன் கிண்டலாக.
"அது உன் பெயர். யார் நீ?"
கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தவனாக, "ஈ.பி. யில ஜெ.இ.யா வேல செய்றேன்" என்றேன்.
"அது நீ செய்ற வேல?"
எடுபடாது என்று தெரிந்தும் தயங்கியவாறே, "எனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு" என்றேன்.
"அது உனக்கிருக்கும் உறவுகள்?"
இப்பொழுது நான் அமைதியானேன்.
"யார் நீ என்று கேட்டால் வெறும் அடையாளங்களாகவே சொல்றியே!" என்று எழுந்து சென்று விட்டார்.

நான் யார் என்று கண்டுப்பிடிக்க என்னால் முடிகிறதோ இல்லையோ ஆனால் வேறு ஏதாவது பொழுதுப்போக்கினை கண்டுப்பிடிக்கும் சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: