நான் ஒரு அவசர வேலையாக பிரதான சாலை வழியே நடந்துக் கொண்டிருந்தேன். கிழக்குத் தெருவான செட்டியார்களின் ஜாகைகள் இருக்கும் வீதி வழியாக சென்றால் தூரம் பாதியாக குறையும் என்பதால் பாதையை மாற்றினேன். மாணிக்கம் செட்டி வீட்டு வாசல் அருகே ஒரு சிறுமி அழுதுக் கொண்டிருந்தாள். 'ஏன் பாப்பா அழுகிறாய்?' என்று கேட்டேன். அது நிமிர்ந்து என் முகத்தை பார்த்து, 'ஐயோ! பூச்சாண்டி' என்று மேலும் குரலெடுத்து அழுதது. நான் என் மீசைக்கும், தலை பாகைக்கும் கிடைத்த வரவேற்பினை எண்ணி மனதிற்குள் முறுவலித்தேன். நான் சற்றே முகத்தினை சாந்தப்படுத்தி சிரித்தவாறே, 'நான் பூச்சாண்டி இல்லை பாப்பா. என் பெயர் ஷெல்லிதாசன்' என்றேன் மெல்லிய குரலில். ஆனால் அச்சிறுமிக்கு என் பெயர் தேவை இல்லை போலிருக்கிறது. ஐம்புலன்களையும் அடக்கிய ஞானியை போல் அச்சிறுமியின் பார்வையும், எண்ணமும் மேல் நோக்கியே இருந்தது. சற்று முன் என் மேலிருந்த அச்சம் நொடிகளில் மறைந்து விட்டிருந்தது. குழந்தையின் மனோலயத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
'மாமா..எனக்கு அந்த பூனை வேணும்' என என்னிடம் சிறுமி வாஞ்சையாகி விட்டாள். 'நான் தான் பூச்சாண்டி ஆச்சே! என்னிடம் ஏன் கேட்கிறாய்?' என்று மனதில் எழுந்த கேள்வியை கேட்கவில்லை. ஏனென்றால் என் சாமர்த்தியம் மழலைகளிடம் பலிக்காது என நன்றாகவே நான் அறிந்திருந்தேன். பிஞ்சு விரல்கள் காட்டிய திசைதனை தொடர்ந்தால் அது எதிர் வீட்டு கூரையின் மேல் முடிந்தது. அங்கே ஒரு பூனைக் குட்டி எங்களை முறைத்தவாறு சிலை போல் நின்றிருந்தது. சிறுமியின் மேல் நோக்கிய பார்வையின் இரகசியம் புரிந்தது.
முதல் நாள் பாரதப் போரில் பார்த்திபனுக்கு ஏற்பட்ட மன நிலையில் இருந்தேன். சென்று கொண்டிருக்கும் பணியா? இல்லை கூரை மேலிருக்கும் பூனையா? என்று இருதலை கொல்லி எறும்பு போல் முடிவு எடுக்க முடியாமல் குழம்பினேன். 'மாமா..பூனைய போய் பிடிச்சின்னு வாங்க' என்று அன்பு கட்டளை பிறந்தது. அன்று பார்த்திபனுக்கு கண்ணன் இருந்தான். எனக்கு இன்று இச்சிறுமி போலும். சுயநலம் அழிந்தது. எதன் நிமித்தமாக வீட்டை விட்டு கிளம்பினேனோ அதை முற்றிலுமாய் மறந்தேன். எனது கண்ணிற்கு என்னை முறைக்கும் பூனை மட்டுமே தெரிந்தது.
கூரை மீது ஏறி பூனையை பிடித்தால், வீட்டு உரிமையாளன் சண்டைக்கு வந்து விடுவான். பூனை தானாகவும் கீழே இறங்காது. அப்படியே இறங்கினாலும் நம் பக்கம் தான் இறங்கும் எனவும் உறுதி கூற முடியாது. பூனையிடம் தோற்று விடுவோமோ என சிறிய பயம் எட்டி பார்த்தது. குழந்தையின் நம்பிக்கையை பாழாக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை. ஏன் தரையில் நடமாடும் ஆடுகளின் மீதெல்லாம் இச்சிறுமிக்கு பிரியம் ஏர்படவில்லை?கடமையை செய் பலனை எதிர்பாராதே என சுலபமாக கண்ணன் சொல்லி விட்டார். மற்றவர்களின் உடைமைகள் மீதேறி கடமையை எப்படி செய்வது? பிரதான சாலை வழியாகவே சென்றிருக்கலாம். குறுக்கு வழி என்றும் உதவாது என்பது சரியாக தான் இருக்கிறது.
'நான் வேண்டுமானால் வரும் பொழுது புது பூனை வாங்கி வரட்டுமா?' என தோல்வியினை மறைத்து சமாதானம் பேச முயன்றேன். சாது மிரண்டால் என சொல்வார்களே, அது போல கண்களில் அக்னி கனல் வீச,'எனக்கு அது தான் வேண்டும்' என்றாள் பிடிவாதமாக. ம்ம்..திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. விசித்திரமான மனம் சென்று கொண்டிருந்த வேலையை நினைவுப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை வேறு வலியுறுத்த ஆரம்பித்தது.
'சாப்பிட வாம்மா' என வீட்டுக்குள் இருந்து குரல் வந்தவுடனே சிட்டாய் பறந்து விட்டாள் சிறுமி. ஆனால் எனக்கு அந்த குரலினை உள் வாங்கி அர்த்தப்படுத்திக் கொள்வதற்கு சில நொடிகள் ஆனாது. அதற்குள் அவள் வாசற்படியை கடந்து மறைந்து விட்டிருந்தாள். நீர் மேலிருக்கும் தாமரை போன்ற மனம் படைத்தவர்கள் போலும் குழந்தைகள். பூனையின் மீதே முழு கருத்து இருந்தும் அன்னையின் குரல் கேட்டதும் அனைத்தையும் உதறி விட்டு சென்று விட்டாள். அனைவரும் இப்படி இருந்து விட்டால் பிரச்சனை இராது.
'தெய்வன் மனுஷ ரூபேனாம்' என்று சொல்லுவார்கள். எனக்கு அச்சிறுமியின் தாய் குரல், அசிரீரியாகவே பட்டது. கடைசியாக பூனையை ஒருமுறை பார்த்து விட்டு, கிளம்பலாம் என எத்தனிக்கும் பொழுது சிறுமி வந்து விட்டாள். மின்னலை மிந்தி விடுவாள் போலிருக்கிறது.
'நான் சாப்பிட்டு வர்றதுக்குள்ள,பூனக் குட்டிய பிடிச்சு வையுங்க.'
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
வரலாற்றை நேர்மையாகக் கற்பது…
7 மணிநேரம் முன்பு
15 கருத்துகள்:
நல்லா மாட்டிக்கிட்டீங்களா??? :-)
வெற்றிபெற வாழ்த்துக்கள்!
:D என்னையும் பொருட்டாய் மதித்து வந்ததற்கு.. நன்றி உழவன் சார் :)
நல்ல கதை. இன்னும் எலாபரேட்டாக எழுதியிருந்திருக்கலாம்...!!!
வாழ்த்துக்கள்...
இது சிறுகதை போட்டி என்று நினைத்து.. எலபரேட்டாக எழுதவில்லை.
நல்லா இருக்கு தினேஷ். ரவி சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதியிருக்கலாம். ஆனாலும், 'நல்ல கதை நீளமில்லை' என்றும் சொலவடை உண்டு. வாழ்த்துகள். 'பாரதி' தாசனா நீங்கள்?
அனுஜன்யா
ரொம்ப இயல்பா இருக்கு. :)
வாழ்க !!
இந்த word verification மட்டும் நீக்கி விட்டு, moderation போட்டு கொள்ளுங்கள்.
---வித்யா
உழவன், செந்தழல் ரவி, அனுஜன்யா, விதூஷ்..
அனைவரின் வருகைக்கும் நன்றி.
பூனை எப்போதுமே என்னை கவருகின்ற ஒரு பிராணி., ரசித்தேன்.
வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே.
நல்லா இருந்துச்சிங்க...
அடலேறு, ஜாக்கி சேகர்.. வருகைக்கும் பின்னூட்டதிற்கும் மனமார்ந்த நன்றி :D
அருமை வாழ்த்துக்கள் !
நன்றி 'பனித்துளி சங்கர்.
அருமையான சிறுகதை
வாழ்த்துக்கள்
சாம்ராஜ்யபிரியன்.
கதை அருமை :)
//என் சாமர்த்தியம் மழலைகளிடம் பலிக்காது என நன்றாகவே நான் அறிந்திருந்தேன்//
ரொம்ப நல்லாருக்கு
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கருத்துரையிடுக