கூட்டுவதும் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும் – காட்டுவதும்
காட்டி மறைப்பதுவும் கண்ணுதலோன் முன்னமைத்த
ஏட்டின் படியென் றிரு.
லிங்கங்கள் மீதான ஆர்வம் எந்த வயதில் தொடங்கியது என சரி வர ஞாபகம் இல்லை. வைத்து விளையாட ஏற்ற பொருளாக தான் எப்பொழுதும் அவை என் கண்களுக்கு தெரிந்தது. 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, சின்ன பச்சை நிறக் கண்ணாடி லிங்கம் ஒன்றினை எப்பொழுதும் பேன்ட் பாக்கெட்டிலேயே வைத்திருப்பேன். அந்த லிங்கம் ஒருநாள் சொல்லிக்காமல் கொள்ளாமல் மாயமாய் போய் விட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறவனுக்கு இருக்கும் அழுத்தங்களை சொல்லி மாளாது. அந்த அழுத்தங்களில் சிவலிங்கம் காணாமல் போன கவலை கடலில் கரைத்த பெருங்காயம் போல் கரைந்துப் போனது.
பிறகு கல்லூரி படிக்கும் பொழுது ஒருநாள், கும்பகோணத்தில் இருந்து 70/- ரூபாய் மதிப்புள்ள கனமான பித்தளை சிவலிங்கம் வந்து சேர்ந்தது. சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூசிக்கக் கூடாது என்பதாக கேள்வி. அதனால் காட்சிப் பொருளாக மட்டும் வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது. எனக்கும் அது தானே தேவை. ஆனால் அந்தப் பித்தளை லிங்கத்திற்கு, என்னைப் பார்த்தால் எப்படி இருந்தது என தெரியவில்லை. எவர் கண்ணையோ உறுத்த வைத்து, என் கண்ணில் மண்ணைத் தூவி எங்கோ சென்று விட்டது. சரி எனக்கும், சிவ லிங்கத்திற்கும் ஏக பொருத்தம் போலும் என ஒருவாறு சமாதானம் அடைந்து விட்டேன்.
பெரும்பாலான சமாதானங்களின் ஆயுசு குறைவே. இந்த வருடம் ஏப்ரல் ஐந்தாம் தேதியில், நன்றாக பசிக்கும் மதிய வேளையின் பொழுது அரும்பாக்கத்தில் ஒரு லிங்கம் கிடைத்தது. சின்னஞ்சிறிய லிங்கம். எனக்காக கடல் கடந்து பயணம் செய்திருந்தது. தொட்டால் சில்லென்று இருந்தது. பார்ப்பதற்கு மிட்டாய் போல் இருந்தது. அப்படியே விழுங்கி விடலாமா என்று கூட தோன்றியது. ஒவ்வாமையில் வாந்தி வந்து, வாந்தியில் லிங்கம் வந்து, எங்கே அதை மற்றவர்கள் பார்த்து.. எனக்கு யாரேனும் ஆசிரமம் தொடங்கி விடுவார்களோ என பயந்து நடுங்கி அவ்வாசையை மூட்டைக் கட்டினேன். ஆர்வக் கோளாறில் ஒருநாள் முழுவதும் கையில் அழுத்திப் பிடித்தப்படியே தூங்கினேன். கையெல்லாம் கருப்பாகி விட்டது. மூலிகையாம், ரசமாம், ரச லிங்கமாம். அதை அளித்த நண்பர் பயப்பட ஒன்னுமில்லை என்று சொன்னார்.
லிங்கத்தின் மீதான எனது பிடிப்பிற்கு என்னக் காரணம் என்று யோசித்துப் பார்த்தேன். லிங்கங்கள் எனக்காக ஏதாவது தருவிக்கும் அல்லது நான் நினைத்ததை நடத்திக் காட்டும் என விட்டலாச்சாரிய மனோபாவத்தில் இருந்துள்ளேன். அப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் எனக்கு உலகிலுள்ள ஒட்டுமொத்த லிங்கங்களின் மீதும் கோபமோ கோபம். அந்தக் கோபத்தை யாரிடம் காட்ட என தெரியாமல், லிங்கம் அளித்த நண்பரிடமே காட்டி விடலாம் என்று தீர்மானித்தேன். அதற்காக தொடையை தட்டிக் கொண்டு சண்டைக்கா செல்ல முடியும்? விளையாட்டுத் தனமாய் கோபத்தை வெளிப்படுத்தணும் என்று முடிவு செய்தேன். அதெப்படி விளையாட்டுத்தனமாய் கோபப்படுவது என்று தெரியாததால் என் மீது எனக்கே கோபமாக வந்தது.
'நான் படிக்க நினைக்கும் புத்தகங்களை.. வானத்தில் இருந்து மழையாக லிங்கம் வர வைக்குமா?' என்று கேட்கலாம் என ரொம்ப யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ரொம்ப திருப்தியாய் என் புத்திசாலித்தனமான கேள்வியைப் எண்ணிப் பார்த்தேன். சின்னப் பிள்ளைத்தனமாய் இருந்தது. எதற்குமே திருப்திப்படாத மனதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று கவலை வேறு இடையில். அப்பொழுது நண்பர் ரகுவிடம் இருந்து படிக்க வாங்கிய 'சொர்ண ரகசியம்' என்றொரு புத்தகம் கண்ணில் பட்டது. சதுரகிரி என்ற மலையில் நடப்பதாக செல்லும் கதை. லிங்கம் - சதுரகிரி என்று பொருத்தி கேட்க ஒரு கேள்வி மனதில் எழுந்தது.
'இந்த லிங்கம் என்னை சதுரகிரி அழைச்சிக்கிட்டு போகுமா?' என்று கேட்டு சிரித்தேன்.
'ஓ.. போவுமே!' என்று பதில் கிடைத்தது.
கேட்பவன் கேணையனாக இருந்தால் பதில் இப்படித் தான் வரும். நான் தான் அது புரிந்து எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அவமானப்பட்ட பின்பு தான் புத்தியில் எல்லாம் உறைக்கிறது.
அதன்பின் ஒருநாள் பீகாரில் யோகம் பயின்ற நண்பர் எறும்பு இராஜகோபாலரிடம் என்னை சதுரகிரி அழைத்து செல்லும்படி கேட்டேன். முன்பே ஒருமுறை சதுரகிரி சென்றிருந்த அவர், இன்னொரு முறை குழுவாக பயணிக்க திட்டமிடுவதாக மோப்பம் பிடித்திருந்தேன்.
"யோவ் குட்டி டின்னு.. நானே போவனா என தெரியாது? அதெல்லாம் அவர் கூப்பிட்டா தான் போக முடியும்" என என்னைக் கழட்டி விட்டுட்டார். என்னை சதுரகிரியில் இருந்து சந்தன மகாலிங்கம் போன் செய்து விருந்துக்கு வாப்பா என்றா அழைக்கப் போகிறார்? அப்படியே அவர் அழைக்க நினைத்தாலும், அவரிடம் போன் உள்ளதோ இல்லையோ? அப்படியே போன் இருந்தாலும், அவர் வீற்றிருக்கும் மலை மேல் சிக்னல் இருக்குமோ இல்லையோ? எறும்பு கைவிட்ட நிலையில் சதுரகிரி பயணக் கனவு, பேய்த் தேராக மின்னி மறைந்தது.
ஜூன் 17 மாலை, பஸ் உலகில் விரும்பத்தக்க புரட்சி செய்து வரும் அண்ணல் அருணையடி அழைத்தார்.
"சதுரகிரி போலாமா?"
"எப்ப?"
"இன்னிக்கு."
"அவ்வ்.. என்கிட்ட பணம் இல்ல."
"அது பார்த்துக்கலாம். நீ வர்ற."
முதலில் வர்றியா என கேட்டவர் 'வர்ற அல்லது வந்து தான் ஆகணும்' என்ற தொனியில் பேசினார்.
அடுத்த நாள் சனிக்கிழமை மதியம் திருவில்லிபுத்தூரில், பேருந்து நிலையம் எதிரில் உள்ள கற்பகம் ஹோட்டலில் திவ்யமாய் சாப்பிட்டோம். வத்றாப்/வத்திராயிருப்பு என்று மழுவிய/மழுவாத பெயருடைய ஊரில் இறங்கினோம். அந்த ஊரை பெயர்ப் பலகை உதவியின்றியே கண்டுப்பிடிக்கலாம். அந்த ஊரின் முகப்பில் தென்னந்தோப்பு உயர்ந்து நிற்கிறது. வத்திராயிருப்புக்கு 'குட்டி மலையாள நாடு' என்ற பெயரும் உண்டாம். தென்னையும், செந்நெல்லும் தழைத்துக் காணப்படுவதால் தான் அந்த ஊரிற்கு 'வற்றாத இருப்பு' என காரணப் பெயர் வந்ததாக தெரிகிறது. அந்தக் காரணம் உண்மையாக தான் இருக்கும் என்பதை வத்ராப்பிற்கு முன்னிருக்கும் ஊர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தால் தெரியும். வத்திராயிருப்பில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் சதுரகிரி மலையின் அடிவாரமான தாணிப்பாறைக்கு சென்று இறங்கினோம். ஓங்கி உயர்ந்து வீற்றிருந்த மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் அன்போடு வரவேற்றது.
இந்தப் பயணம் அந்த ரசலிங்கத்தால் தான் சாத்தியம் ஆனதோ என சந்தேகம் மெல்ல எழுந்து வலுக்க ஆரம்பித்தது. அந்த லிங்கத்தை என்னிடம் கையில் கொடுக்கும் முன், "இன்னும் மூனு மாசத்தில் நீ ஒரு பெரிய மாற்றத்த எதிர்பார்க்கலாம்" என்று சொல்லி கண்களை மூடி, ஏதோ மந்திரம் சொல்வது போல முணுமுணுத்தார். ஒருவேளை எழுத்தாளர், கிழுத்தாளர் ஆயிடுவேனோ என நப்பாசை எட்டிப் பார்த்தது. சிவன் என்ன தான் கல்லாக இருந்தாலும், தனது வாசக பக்தர்களை அத்தகைய இன்னல்களுக்கு உட்படுத்த விரும்ப மாட்டார் என்றே தோன்றுகிறது. கூட்டி கழித்துப் பார்த்தால், பெரியவர் சொன்ன மாற்றம் இதுவாக தான் இருக்கும் எனப் பட்டது. இருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காக்கா, பனம்பழ கதையாக இருந்து விட்டால்?
04:20. இந்த நேரத்தில் மலை ஏற தொடங்கியது தற்செயல் தான். எவரும் எந்த அர்த்தமும் கற்பித்துக் கொள்ள வேண்டாம். ரம்மியமான மாலைப் பொழுது அது. சம தரையில் நடக்கத் தொடங்கியதும் முதலில் தென்பட்டது "ஆசீர்வாதப் பிள்ளையார்" சன்னதி. இடம்புரி அல்லது வலம்புரி விநாயகராக இல்லாமல், துதிக்கையை உயர்த்தி ஆசிர்வதிக்கும் நிலையில் உள்ளது இந்தப் பிள்ளையாரின் சிறப்பு. பக்கத்தில் அம்மன் சன்னிதி. பூட்டியக் கோயிலை வழிபடக் கூடாதென அருணையடி வந்து விட்டார். நான் அவருடன் செல்லாமல், வலப் பக்கமிருந்த சூப் கடையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"முடவன் ஆட்டுகால் கிழங்கு சூப்", கொல்லி மலை ஆசிரமத்தின் பெயர் ஏதோ எழுதியிருந்தது. பாறைகளில் விளையும் கிழங்காம். சளி, இருமல், மூட்டு வலி என எல்லாம் மூலிகையும் ஒரே மாதிரியான நிவாரணத்திற்கு தான் பயன்படும் போல. செம காரம். அந்தச் சூப் கடை வாசலில் இருந்து தான் மலைத் தொடங்குகிறது. நிதானமாக மலை ஏறினால், மலை உச்சியை நேரத்திற்கு அடைந்து விடுமோ என எண்ணி மிக நிதானமாக நடந்தோம். சின்னக் குழந்தைகளை கடைக்கு அனுப்பினால், அவர்கள் வாங்க வேண்டிய பொருட்களை மறக்காமல் இருக்க.. அந்தப் பொருளின் பெயரை கடை வரை வழியெல்லாம் சொல்லிக் கொண்டே செல்வார்கள். அதைப் போல் கோயம்பேட்டில் ஏறியதிலிருந்து, 'கவுண்டுண்ய நதி'யில் குளிக்கணும் என்று சொல்லிக் கொண்டே வந்தார் அருணையடி. அந்த நதியில் குளித்து எப்படியாவது பூர்வ ஜென்ம பாவங்களைத் தொலைப்பதில் குறியாக இருந்தார். மலை ஏற தொடங்கிய சில நிமிடங்களில், நீர் சலசலக்கும் சத்தம் கேட்டது. அருகில் சரிவான ஒற்றையடி மண் பாதை இருந்தது. அதற்குள் நுழைந்துப் பார்க்கும் சாகச ஆசை எனக்கு. அந்தப் பாதையோ மிகவும் குறுகல். நான் அருணையடியைப் பார்த்தேன். அவருக்கும் இறங்க ஆசை தான் போல. 'போய் பார்க்கலாம்' என்றார். அடடே.. நாங்கள் ஒத்த கருத்து உள்ளவர்கள் போல என்று நினைத்துக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, எங்கே அந்தச் சலசலக்கும் நீர் நிலை 'கவுண்டுண்ய நதி' ஆக இருக்குமோ என்ற பரிதவிப்பு அவருக்கு. எனக்கு 'திக்' என்றிருந்தது. மலையே இப்பொழுது தான் தொடங்குகிறது. இதே ரீதியில் போனால் நிறைய இடங்களில் முக்கு போட்டுக் கோண்டே இருப்பாரோ என திகில் ஆட்கொண்டது. நான் மலையை திரும்பிப் பார்த்தேன். அதுவோ பிராம்மாவிற்கு ஆட்டம் காட்டிய லிங்கோத்பவர் போல் ஓங்கி வளர்ந்த வண்ணமாக இருப்பது போல் தோன்றியது. நான் தலையில் மட்டும் தண்ணீர் தெளித்துக் கொண்டேன். அருணையடி ஜல க்ரீடை முடித்ததும், நடக்கத் தொடங்கினோம். வெளிச்சம் மங்கத் தொடங்கியது.
மாலை 06:50க்கு ஒரு பாறை முன் தளர்வாக நின்றோம். அந்தப் பாறையில் "கோரக்கர் குகை" என எழுதி, ஒரு பள்ளத்தின் பக்கம் அம்புக் குறி வரையப்பட்டிருந்தது. அந்தப் பள்ளத்திற்கு எப்படிச் செல்வது என குழம்பிய பொழுது, அன்பர் ஒருவர் பாதையை சுட்டிக் காட்டினார். மெல்லிய குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்த அன்பர் குளிரை விரட்ட வாயில் வெண்குழல் சுருட்டை வைத்துக் கொண்டு, தீப்பெட்டியை தன் உடையில் தேடிக் கொண்டிருந்தார். சிவனடியாருக்கு தொண்டு புரிவதே தன் பிறவி நோக்கம் என்பது போல், அருணையடி அவர் எடுத்து வந்திருந்த மஞ்சப் பையைத் துழாவி தீப்பெட்டி எடுத்துக் கொடுத்தார். கவுண்டுண்ய நதியில் குளித்து பாவத்தைப் போக்கி கொள்ளாதா வருத்தத்தை, இந்தப் புண்ணியச் செய்கையால் ஈடு செய்து விட்ட திருப்தி அருணையடிக்கு. அந்தத் திருப்தியாலோ என்னமோ இரவு மீண்டும் அவர் நதியில் குளிப்பதைப் பற்றி பேசவில்லை.
ஆயிரம் ஆண்டுகள் அரசாண்ட மாவாணர் குலத்தில் உதித்த மாவீரன் வந்தியதேவனுக்கும் எனக்கும் ஓர் ஒத்துமை உண்டு. அரியும், சிவனும் ஒன்னு.. அறியதாவர் வாயில மண்ணு என்ற எண்ணம் உடையவர்கள் நாங்கள். அதற்கு சாட்சியாய இருக்கும் சங்கர நாராயணன் என அழைக்கப் படும் இரட்டை லிங்கம் சன்னிதி வந்தது. ஒரே ஆவுடையாரில் இரண்டு லிங்கம் உள்ளது. ஆனால் அதிலுள்ள அரசியலைப் பாருங்கள். ஒரு லிங்கம் சிறியதாகவும்; மற்றொன்று பெரியதாகவும் உள்ளது. பெரியதாய் உள்ள லிங்கத்திற்கு சந்தனப் பட்டை அடித்து சிவன் என்று வேறுபடுத்தி, சிறியதாக உள்ள லிங்கத்தை நாராயணன் என காட்டி விட்டனர். அரசியல் ஒழுங்கான பாதை இல்லாத மலை மேலும் உள்ளது.
மங்கிக் கொண்டிருந்த வெளிச்சம் மறைந்துப் போனது. தீப்பெட்டியைப் போல, ஒரு துக்கிணியூன்டு டார்ச்-லைட்டையும் பயணத்திற்கு உதவும் என தன் மஞ்சப் பையில் வைத்திருந்தார் அருணையடி. அதில் இருந்து கசிந்த மிக கொஞ்சமான ஒளிக் கொன்டு சமாளித்து நடந்தோம். பாதை இறங்கி திடீரென்று செங்குத்தாக ஏறும் இடங்களில் திண்டாட வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பொறியில் சிக்கிய உணர்வு. சுற்றி மேடான பாறைகள். குத்துமதிப்பாக பாதை இதுவாக தான் இருக்கும் என நடந்தோம். அமர்ந்தோம். காலை நீட்டினோம். பக்கத்தில் அருணையடி அமர்ந்திருப்பார். அவரை உணர தான் முடியும். பார்க்க முடியாது. அடர்த்தியான கானக இருள். 'டிஸ்கவரி சேனலில்' வரும் பிண்ணனி இசையும் இடைவெளி இல்லாது ஒளித்துக் கொண்டே இருந்தது.
"நல்ல அனுபவம் இல்ல?"
எங்கு இருக்கோம், இன்னும் எவ்வளவு தூரம் போகணும் என்று தெரியவில்லை. அப்பொழுது இரவு 08:45 மணி. போகும் பாதை சரி தானா என்பதும் நிச்சயமாக தெரியவில்லை.
"இதுக்கு பெயர் தான் ஏகாந்தம் போல!!"
'அடிங்.' - இது எனது மைன்ட் வாய்ஸ்.
"இங்கயே இருந்துடலாம் போல இருக்கு. யப்பா.. சில்லுன்னு காத்து. மெட்ராசுல இப்படிக் கிடைக்குமா?" - இது எனது மவுத் வாய்ஸ்.
சும்மாவா.. பின்ன? இந்தப் பயணத்திற்கு அவர் தானே ஸ்பான்சர். (பழைய ஸ்பான்சர் ரகுவிற்கு போன மாதம் கல்யாணம் ஆயிடுச்சு.)
அருணையடி உட்கார்ந்தால் ஏகாந்தத்தில் கரைந்து விடுவார் போல. 'நடக்கிற எல்லாத்துக்கும் காரணம் இருக்கு' என்பார். அவரது குருநாதரைப் பற்றி சொல்வார். காதை இரவல் கொடுக்கும் கலைத் தெரிந்தவனுக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை.
இரவு பத்து மணிக்கு பலாவடி கருப்பண்ணசாமி சன்னிதி அடைந்தோம். பெயருக்கு தகுந்தாற் போல் கருப்பா பயங்கரமாக இருந்தார். பொதுவாக மலை ஏறுபவர்களுக்கு பைரவர் நாய் வடிவில் துணையாகவும், வழி மாறாமல் இருக்கவும் உடன் வருவாராம். ஆனால் எங்களுடன் வரவில்லை. இதற்கே எனக்கும், பைரவருக்கும் எந்த வாய்க்கால் தகராறும் கூட இல்லை. பைரவர் ஏன் வரவில்லை என யோசித்துக் கொண்டிருந்தேன். அருணையடி கன்னத்தில் போட்டுக் கொண்டார். எனக்கு அவர் மேல் தான் சந்தேகமாக இருந்தது.
அருவி ஓடுவது போல் கருப்பண்ணசாமி சன்னிதி எதிரில் சத்தம். பாறைகள் விரவி கடந்தன. சன்னிதியின் பின் பக்கம் மேடு. மேட்டில் காடு. சன்னிதியின் இடப் பக்கம் நாங்கள் ஏறி வந்த வழி. வலப் பக்கம் போனோம். புதர் மண்டி இருந்தது.
"பாதைய எங்கயோ தொலைச்சிட்டோம் போல!"
அவ்வ்.. தொலைக்கக் கூடிய பொருளா அது?
-தொடரும்.
13 கருத்துகள்:
ஆர்வக் கோளாறில் ஒருநாள் முழுவதும் கையில் அழுத்திப் பிடித்தப்படியே தூங்கினேன். கையெல்லாம் கருப்பாகி விட்டாது. மூலிகையாம், ரசமாம், ரச லிங்கமாம். அதை அளித்த நண்பர் பயப்பட ஒன்னுமில்லை என்று சொன்னார். //
பயப்படும்படி ஏதும் நடந்ததா?
எனக்கும் ஒரு ரசலிங்கம் வேணும் எங்க கிடைக்கும்? உங்களுக்கு எப்படி கிடைச்சது? விபரம் தந்தால் உதவியாக இருக்கும்.
நல்லா சொல்லிருக்கீங்க. மீதி கதைக்கு காத்திருக்கிறேன்.
Good one
புகைப்பட ட்ரிக் செய்து வேண்டுமென்றே பருமனான உடலாக சித்தரித்த குட்டி டின் அவர்களை வன்மையாக கண்ணடிக்கிறேன்!
நல்லா எழுதிருக்கீங்க தினேஷ் .வாசிக்க மகிழ்ச்சியா இருந்தது
சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள் , பயனுள்ள தகவல்களும் கூட
நல்ல நடை
அருமை டின்னு! :) அடுத்தமுறை நாங்க போகும்போதும் வா! :)
Pls remove the word verification!
// பைரவர் ஏன் வரவில்லை என யோசித்துக் கொண்டிருந்தேன். அருணையடி கன்னத்தில் போட்டுக் கொண்டார். எனக்கு அவர் மேல் தான் சந்தேகமாக இருந்தது. //
நச்ச் போ .. கலக்கல்
//அருமை டின்னு! :) அடுத்தமுறை நாங்க போகும்போதும் வா! :) //
பபாஷா- அண்ணே உங்க கூட வந்துட்டு ப்ளாக் எழுதுறேன்னு உங்க போட்டோவையும் கொஞ்சம் பருமனா காட்டி போட்டுடுவான்.. பார்த்துகோங்க :P
வாழ்த்துக்கள் தினேஷ்.
நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
சதுரகிரிக்குப்போக சந்தர்ப்பம் கிடைப்பது எளிது ஆனால் அதை நிறைவேற்றுவது அவன் செயலே....டின்னுக்கும் சிபிக்கும் வாழ்த்துகள் அன்பே சிவம் அருமையான இடுகை..எனக்கு என்று அவனிடமிருந்து சதுரகிரிக்கு அழைப்பு வருமோ?
/எனக்கு என்று அவனிடமிருந்து சதுரகிரிக்கு அழைப்பு வருமோ?/
ஷைலஜா அக்கா! விரைவில் வரும்! :)
வணக்கம் நண்பர் பாலா அவர்கள் சொல்வது பொய்.சில மர்மங்கள் மர்மமாக இருப்பதே சித்தம்.நான் மாயா தற்சமயம் மலேசியாவில் உள்ளேன். சதுரகிரி என்றால் என்ன? தொலைகாட்சி.பத்திரிக்கை. இணையம் மூலம் அறிந்தது மற்றவரிடம் பகிர்ந்தது. தோழியின் சேவை சிறந்தது. ஆனால் தோழி படித்ததை தெரிவிக்கிறார்.சதுரகிரி எனும் வார்த்தை மறுவிய வார்த்தை.கேரள எல்லை ஓரத்தில் உள்ள மக்களுக்கு இன்னும் தெரிவரா ஓர் அடர்ந்த வனம்.எனது வனவாசத்தில் நான் அறிந்தது.நானும் ஒரு காலத்தில் விஞ்ஞான அறிவு கொண்டவன்தான்.உடம்பில் வெளிதெரியா ஊனம் உள்ளவர்கள் மட்டுமே அனுக முடிந்த இடம்.அப்படி இருப்பின்.நீங்கள் சொல்லும் சதுரகிரியில் நான் சொல்லும் இடத்தில் இருக்கும் சிவயோகிடம் அனுமதி பெற்று சித்தராஜ்யம் சென்று சித்தசேவை செய்து பாருங்கள்
கருத்துரையிடுக