செவ்வாய், 24 மார்ச், 2009

சாஃப்ட்வேர் இஞ்சினீயரும், அண்ணா யூனிவர்சிட்டி ப்ரொஃபசரும்

"நாளைக்கு எனக்கு.. கவுன்சிலிங் சார்."
"எனக்கும் தான்" என்றார் வருத்தமாக.
"என்ன சார்.. என்னம்மோ மாதிரி பேசுறீங்க?" என்று கேள்விக்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.
"க்யூ பெருசா இருக்கு.. ரொம்ப நேரம் நிக்கனுமேனே யோசிக்கிறீங்கலா? அது ஏதோ சின்ன டெக்னிக்கல் ப்ராப்ளம் தானாம் சார். இன்னும் கொஞ்ச நேரத்துல சரி பண்ணிடுவாங்க."
அவர் மீண்டும் அமைதியாக இருந்தார். முகத்தில் சிறு எரிச்சல் தோன்றி மறைந்தது.

"எங்க..எங்க.. இடம் காலியா இருக்குன்னு பார்த்துட்டேன் சார். முடிஞ்சா இரண்டு பேரும் ஒரே இடத்துக்கு அப்ளை பண்ணலாம். ஆனா என்ன, இடம் ரிஜிஸ்டர் ஆகி கன்ஃபார்ம் ஆனவுடன், நமக்கு பழசெல்லாம் மறந்துடும்."
"அப்படியா?" என்றார் திகைத்தவறாக.
"என்ன சார் அப்படியான்னு கேக்குறீங்க! அப்படி தான ப்ரோகிராம் எழுதி இருக்காங்க."
"உனக்கு ப்ரோகிராம் எழத சொல்லி கொடுத்தவனே நான் தான். ம்ம்... சரி விடு. ஆனா உண்மையிலேயே எனக்கு இந்த ப்ரோகிராம் புரியவே இல்ல. உனக்கு மூனு மாசம் முன்னாடி இங்க வந்தவன் நான். ரொம்பா நாளா பென்ச்சுல உட்கார்ந்துக்கிட்டிருக்கேன். ஆனா ரெண்டே வாரத்துல உனக்கு கவுன்சிலிங் டேட் வந்துடிச்சு!!"
"நீங்க சீனியாரிட்டி படி எல்லாம் நடக்கனும்னு எதிர் பார்க்குறீங்க. ஆன இங்க வரவங்களா டெஸ்ட் பண்ணி, க்வாலிட்டி ரேட்டிங் போட்டு தனி டேட்டா பேஸ் மெயின்டெயின் பண்ணுது. ப்ளஸ் பக்ஸ் கால்குலேஷன் அது, இதுனு ஏதோ ஃபார்முலா யூஸ் பண்ணி கவுன்சிலிங் டேட்டும், ப்ளேசும் அசைன் ஆகுது."

"என்ன ரெண்டு பேரும் இங்க நின்னு பேசிக்கிட்டிருக்கீங்க. நாளைக்கு பூமியில பொறக்கிறவங்களுக்கு, நாளன்னைக்கு பொறக்க போற நீங்க தான முன்ன நின்னு ஃபேர்வெல் தரனும்."

வியாழன், 18 டிசம்பர், 2008

அவன்

இராஜ வீதிக்காரர்கள் உண்மையிலேயே அப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைத்து பார்க்கவே அவனால் முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தம் கொதித்தது. வேறேதாவது காரணத்திற்காக இம்முடிவு எடுக்கப் பெற்றிருந்தால், அவனே முன்னின்று தலையைக் கொடுத்தாவது செய்து முடித்திருப்பான்.

"ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினொன்னு" என்று கண்களை மூடியவாறே எண்ணிக் கொண்டிருந்தான். தூக்கம் வருவதாக இல்லை. 'பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கீழ் வகுப்புப் பெண்ணை அவர்கள் வீதி வழியாக அழைத்து சென்றதற்காக கலெக்டர் ஆஷ் துரையை கொல்லப் போகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்லி தடுக்கலாம், ஆனால் கலெக்டர் கொல்லப் பட வேண்டியவன். இன்னும் பதினேழு நாட்கள் மீதம் உள்ளது' என்று யோசித்தவாறே சிறிது கண்ணயர்ந்தான்.

வாஞ்சிநாதனை எதிர்ப்பார்த்து அவன் முன்னதாகவே மணியாச்சி இரயில் நிலையத்திற்கு சென்று விட்டான். இரயில் வந்து நின்ற சில நொடிகளில் எங்கிருந்தோ தோன்றி, வாஞ்சிநாதன் புயலென இரயிலில் ஏறினான். துப்பாக்கி வெடிக்கும் சத்தத்தைத் தொடர்ந்து அங்கே நிலவிய ஆழ்ந்த நிசப்தத்தை திருமதி ஆஷின் அழுகை சத்தம் கலைத்தது. முகமுடியுடன் துரிதமாக வாஞ்சிநாதன் தப்பி ஓடுவதில் குறியாக இருந்தான். முடிந்தவரை தன்னை யாரென வெளிக் காட்டாமல் தப்பிப்பது இல்லையேல் சரணடைவது என்ற முடிவோடு தான் வாஞ்சிநாதன் இருந்தான். அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு, அவனிருக்கும் திசை நோக்கி ஒடினான் வாஞ்சிநாதன். மீண்டுமொரு துப்பாக்கி சத்தம். இனிமேல் நன்றாக தூக்கம் வருமென்ற திருப்தியுடன் அவன் அவ்விடத்தை விட்டு அனைவரும் வரும் முன் ஒடினான்.

*******************************

பாரதி புதையல்

வியாழன், 27 நவம்பர், 2008

அடையாளங்கள்

'ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!'
'எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.'
'மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.'

இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி தருவது. கைகளில் கிழிந்த சாக்குடன், சுருள் சுருளாக அழுக்கு தலை முடியோடு, தனியாக பேசியவாறு செல்வோரை எல்லாம் அணுகி இல்லாத பணிவினை வரவழைத்துக் கொண்டு பவ்யமாக அழைப்பேன். அவர்கள் அனைவரும் என்னை பேயை பார்ப்பது போல் பார்த்து விட்டு, மிக்க யோசனைக்கு பிறகு என்னுடன் அருகிலிருக்கும் உணவகத்திற்கு வருவார்கள். பொதுவாக யாரும் எளிதில் பேசி விட மாட்டார்கள். அரை வயிறு நிறைந்தவுடன் தானாக பேச ஆரம்பிப்பார்கள். விடை பெறும் போது வயிறார வாழ்த்துவார்கள். எனக்கு புண்ணியம் வந்து சேருகிறதோ இல்லையோ ஆனால் மனதில் ஒரு சிறு திருப்தி நிலவும்.

எனது இந்த பொழுதுப்போக்கு நன்றாக சென்றுக் கொன்டிருந்தது. அவனை காணும் வரை அல்லது அவர் என்னை குழப்பும் வரை. மிக நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். பார்ப்பதற்கும் தூய்மையாக இருந்தார். ஆனால் அவரது ஆடை குறைப்பு கவர்ச்சி நடிகைகளுக்கே சவால் விட்டது. முக்கால் வயிறு நிரம்பியும் அவர் வாயே திறக்கவில்லை. சரி நானே பேசி விடலாம் என்று எனது முதல் கேள்வியைக் கேட்டேன்.

"உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாமா?" என்றேன் மரியாதையாக. யாராக இருந்தால் என்ன, மரியாதை அவசியமாகிறதே! ஆனால் அவரிடமிருந்து பதில் இல்லை. இன்னும் என்னென்ன கேள்விகளோ கேட்டேன். ஆனால் அவர் அசரவில்லை.
முழுவதுமாக உண்டு விட்டு, "நானும் ரொம்ப வருஷமா அத தான் தேடிக்கிட்டிருக்கேன்" என்றார். உண்மைகளை மழுப்பும் இத்தகைய பதில்களை கேட்டால் நான் எரிச்சலாயிடுவேன்.
"வாழ்க்கைய தொலைச்சவங்க சொல்ற சமாதானம் இது" என்றேன் கோபமாக.
"அப்ப உனக்கு நீ யாருன்னு தெரியுமா?" என்றார் ஆச்சரியமாக.
"நல்லாவே தெரியும்.. கெளதம்" என்றேன் கிண்டலாக.
"அது உன் பெயர். யார் நீ?"
கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தவனாக, "ஈ.பி. யில ஜெ.இ.யா வேல செய்றேன்" என்றேன்.
"அது நீ செய்ற வேல?"
எடுபடாது என்று தெரிந்தும் தயங்கியவாறே, "எனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு" என்றேன்.
"அது உனக்கிருக்கும் உறவுகள்?"
இப்பொழுது நான் அமைதியானேன்.
"யார் நீ என்று கேட்டால் வெறும் அடையாளங்களாகவே சொல்றியே!" என்று எழுந்து சென்று விட்டார்.

நான் யார் என்று கண்டுப்பிடிக்க என்னால் முடிகிறதோ இல்லையோ ஆனால் வேறு ஏதாவது பொழுதுப்போக்கினை கண்டுப்பிடிக்கும் சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது.

வெள்ளி, 14 நவம்பர், 2008

கடைசி வீரன்

"வெற்றி!!!"
...........

வியாழன், 6 நவம்பர், 2008

ரெண்டு மணி நேரம் தான்

"ஏன்டா பக்கத்து தெருவுல தான் நான் இருக்கேன். எங்கள வந்து பார்க்கக் கூடாதா?"
"டைமே இல்ல மாமா."
"துரை..கலெக்டருக்கு படிக்கிறீங்களோ?"
"காலையில ஆறு மணிக்கு டியூஷன் போறேன். ஏழரை மணிக்கு வந்து அவசர அவசரமா கிளம்பி எட்டே காலுக்கு பஸ்ச பிடிக்கனும். திரும்பி நாலு மணிக்கு வீட்டுக்கு வந்து நாலரை மணி சயின்ஸ் டியூஷனுக்கு போயிட்டு அப்புறம் ஹிந்தி கிளாஸ் எல்லாம் முடிச்சுட்டு எட்டு மணிக்கு தான் திரும்பி வீட்டுக்கு வர்றேன். அப்புறம் ஹோம் ஒர்க் எழுதிட்டு, சாப்ட்டு தூங்கிடுவேன்."
"அது சரி..கலெக்டர் விட நீ பிசி தான். சரி சண்டேல வரலாம் தான?"
"அன்னிக்கு ஃபுல்லா கிரிக்கெட் பிராக்டீஸ் இருக்கு. காலை பதினொரு மணிக்கு போனா சாயந்திரம் ஆறு மணிக்கு தான் வருவேன்."
"இந்த காலத்து பசங்கெல்லாம் ரொம்ப பாவம்டா. சரி..சரி..போய் படி."
ஏதோ யோசித்தவராய் தன் தங்கையை அழைத்து, "ஏம்மா..இப்படியே படி படின்னு சொன்னா என்னம்மா ஆவறது. கொஞ்சம் ப்ரீயா விடுறதில்லையா? பாவம் பையன். என் ப்ரென்ட் ஒருத்தவன் 'யோகா' க்ளாஸ் நடத்தறான். ஞாயித்துக் கிழமை மட்டும் தான். நானே சொல்லி விடுறேன். பையன அனுப்பி வையுங்க. மைன்டுக்கு ரொம்ப நல்லது. படிக்கறதெல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். உடம்புக்கும் நல்லது. என்ன..சரியா!" என்றார்.

அர்த்தமுள்ள பொய்கள்

"முதல் உலகப் போரோட நூறாவது நாளுக்கும், இரண்டாவது உலகப் போரோட நூறாவது நாளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?"
'தெரியாது' என்று தலையை ஆட்டி விட்டு, "என்ன அது?" என்று கேட்டான்.
"அந்த இரண்டு நாளுலயும் ஜெர்மனியோட கை ஓங்கி இருந்தது."
"ம்" என்று தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
"ஆனா அந்த இரண்டு நாளோட கடைசியிலயும் ஜெர்மன் தளபதி ஒருத்தர நம்ம ஆளுங்க கொன்னுட்டாங்க."
"ஆமா..எப்பவும் நாஜி ஜெயிக்கிற மாதிரி தான் ஆரம்பத்தில இருக்கும். ஆனா இறுதி வெற்றி எப்பவும் நமக்கு தான்" என்று முக மலர்ச்சியோடு ஜேசனின் கைகளை பற்றியவாறே தூங்கி விட்டான்...நிரந்தரமாக.

எப்பொழுது தான் இரண்டாம் உலகப் போர் முடியுமோ என்றிருந்தது. ஒரு உயிர் பிரிவதை அருகிலிருந்து பார்ப்பது மிக கொடுமையானது. அதற்குள், "ஜேசன்..பக்கத்து அறையில நாலாவது பெட்ல இருக்கிறவன் தன் கடைசி நிமிடத்தில் இருக்கிறான். அவனுக்கு ஷேக்ஸ்பியரும், ப்ரெஞ்ச் வொயினும் பிடிக்குமாம்."

"ஷேக்ஸ்பியரோட நாடகத்தை எல்லாம் படிச்ச ரசிகையான ஒரு செல்வந்தர் வீட்டு பொண்ணு அவருக்கு ஒரு பாட்டில் ப்ரெஞ்ச் வொயின் அனுப்பி தன் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டா. நினைச்சாலே எனக்கு சிரிப்பு வருது. அத பத்தி கேள்விப்பட்டிருக்கியா?"

தூர அதிர்ஷ்டம்

வானத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். நாளைக்கு அவனது அண்ணன் மகன் ராமுவிற்கு பிறந்த நாள். கணேசனுக்கு ராமு என்றால் ரொம்ப பிடிக்கும். அவனுடைய பிறந்த நாளுக்கு சின்ன பரிசு வாங்கி கொடுக்க கூட காசில்லையே என்று நினைத்து கொன்டிருந்தான் கணேசன்.
"இந்தா கணேசா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கெல்லாம் தயாரா இரு. வேல ஒன்னு வந்திருக்கு" என்றார் முனியன்.
'என்ன வேல...திடீரென்னு!' என்பது போல் நம்பிக்கையின்றி முனியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் கணேசன்.
"மேக்கப்பட்டிக்கு மினிஸ்டர் வர இருந்தாரில்ல..அது ரத்தாகி இப்ப நம்ம ஊர்ல நடக்கப் போகுது. ஏதோ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக நம்ம ஊர்ல மேடை அமைக்க போறாங்களாம். எப்படியோ...நமக்கு நாள பொழுது ஓடினா சரி தான்" என்றார் ஒரு வறட்டு திருப்தியுடன்.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் மேடை தயாராகி விட்டது. பத்து மணி வண்டியில் ஏறினால், கணேசன் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கலாம். கூலி தருபவரிடம் சென்ற பொழுது, "நைட்டு பந்தல பிரிக்கிற வரைக்கும் இருந்தா, ரெண்டு வேள சாப்பிடு இன்னுமொரு நூறு ரூபா கிடைக்குமில்ல!?" என்ற படியே கணேசனுக்கு நூற்றைம்பது ரூபாய் தந்து, இரு நூற்றைம்பது ரூபாய் தந்ததாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்று ராமுவை பார்த்து விட்டு, மூன்றரை மணி பேருந்தில் ஏறி மீண்டும் பந்தல் பிரிக்கவும் வந்து கூலி வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவோடு பேருந்தில் ஏறினான்.

பேருந்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில், கணேசன் தூக்கத்தின் வாயிலாக கனவு உலகத்திற்கு சென்று விட்டான். சுமார் மூன்று மணி நேர உறக்கத்திற்கு பிறகு விழித்த பொழுது, பேருந்து போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டது தெரிந்தது. அமைச்சர் வந்து செல்லும் வரை இந்த சங்கடங்களும் தொடரும்.

ஒருவழியாக நான்கு மணி நேரத்தில் பத்து கி.மீ. தொலைவினை பேருந்து கடந்திருந்தது. இனிமேல் ஊருக்கு சென்று வந்தால் ஒருவேளை கூலி பறிப் போகுமென்று எண்ணி பேருந்திலிருந்து இறங்கி விட்டான். அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தும் பொழுது, "நடக்க வேண்டிய சமயத்துல ஒண்ணு நடக்கலன்னா, அதுக்கப்பறம் அது நடக்காமலே இருக்கலாம்" என்றொரு பெரியவர் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஏதோ தோன்றியவனாக கணேசன் ஊர்ந்துக் கொண்டிருந்த பேருந்தில் நிதானமாக சென்று ஏறிக் கொண்டான். கணேசன் வீடு போய் சேர இரவு எட்டு மணி ஆகி விட்டது. ஆனால் ராமுவும் அவனது அப்பாவும் கணேசனைக் காண சென்றிருந்தனர்.