சனி, 24 நவம்பர், 2007

ஊடுருவு சக்தி-2

"நீ என்ன பண்ணி வச்சிருக்க? கன்ட்ரோலே இல்ல. ஃபர்ஸ்ட் லெவல் செக்யூரிட்டி ஃபேஸ் தானா திறந்துடிச்சு" என்று கோபப்பட்டாள் காளிகா.

"நான் தான் அப்படி ப்ரோகிராம் பண்ணினேன்."

"ஏன்?"

"ரோபோவுக்கு யோசிக்கிற திறன் நம்மள விட கம்மி. ரோபோ ஒரு ப்ராப்ளத்துக்கு சொல்யூஷன் தான் தேடும். ஆனா மனிஷனிலிருந்து வந்த நாம, அந்த ப்ராப்ளத்தையே அழிச்சுடுவோம். நேரா ரோபோ செகன்ட் ஃபேஸை நோக்கி வரும். இப்ப சுலபமா பின்னாடியிருந்து அட்டாக் பண்ணிடலாம்" என்றான் ஹரிதர்.

"இது மான்ட்லோவுக்கு தெரிஞ்சா...என்ன நடக்கும்?"

'க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட்' டால் மாபெரும் இயற்கை சீற்றழிவு ஏற்படும் என மனிதர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்கள் நினைத்த நேரத்திற்கு முன்பாகவே பிரச்சனை தொடங்கியது. துருவங்களில் உள்ள பனி மலைகள் உருகி, தாழ்வான நிலப்பரப்புகள் மூழ்கின. மழை பேய்த்தனமாய் வலுத்து சூறாவளியாய் மிரட்டியது. இயற்கை தனது அனைத்து கோர கைகளுடன், ஒரே நேரத்தில் உலகின் எல்லா பகுதிகளையும் தாக்கின. பூமியை நிலவில் இருந்து பார்த்திருந்தால் நீர் உருண்டையாகவே காட்சியளித்திருக்கும். எவராலும் தீர்க்க முடியாத தீவிரவாதம், மதப் பிரச்சனை, இனப் பிரச்சனை, மொழிப் பிரச்சனை என அனைத்திற்கும் தீர்வு காண்பது போல் முற்றுப்புள்ளி வைத்தது பேரழிவு.

மழை ஓய்ந்தது என்று மகிழ்ந்தவர்கள், அது தான் கடைசி மழை என்று தெரிந்த பொழுது அதிர்ச்சியடைந்தார்கள். சேரும், சகதியுமாக இருந்த நிலம் மெதுவாக வற்றியது. அதோடு நில்லாமல் கடல் நீரும் வற்ற ஆரம்பித்தது. ஓசோன் லேயர் முழுவதும் அழிந்து விட்டதால், யூ.வி. கதிர்கள் நேரடியாக உலகை தாக்கியது. பச்சை மரங்கள் எல்லாம் எரியத் தொடங்கியது. உயிரனங்கள் வெப்பம் தாளாமல் கருகி சாம்பல் ஆனது. மூன்று பங்கு நீரால் ஆன உலகம், மணற்பாங்கான கிரகமாக மாறியது. தப்பி பிழைத்தவர்கள் எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தனர். வாழ்வின் லட்சியமே இன்னொரு மனிதனை காண்பது என்றாகி விட்டது. கிடைத்ததை உண்டு நாடோடியாக வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் சேர்ந்தனர். தங்களுக்கு உலகர்கள் என்று புதுப் பெயர் சூட்டிக் கொண்டுடார்கள். இனப் பெருக்கத்தின் அவசியத்தை உணர்ந்ததால் திருமணம் எனும் சமூக கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தனர். உலகர்களின் சந்ததியினர், புதிய உலகின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு பிறந்தனர். விஞ்ஞானத்தை அரிச்சுவடியில் இருந்து தொடங்காமல் மனிதன் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியதால், விஞ்ஞானத்தில் அசுர வளர்ச்சி அடைந்தனர்.

யூ.வி. கதிர்களின் வெப்பத்தைத் தாங்கும்படியாக அடுத்த தலைமுறை உண்மை உலகர்கள் தோன்றினார்கள். இந்த உண்மை உலகர்களின் தோற்றத்தில் இருந்து தான் ஓசோன் ஆண்டுகள் கணக்கிடப்பட்டன. ஓசோன் ஆண்டுகளின் தொடக்கம் பேரழிவிற்கு பின்னர், சுமார் முந்நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து ஆரம்பித்தது. தாகம், குளிர், பசுமை என்ற சில விஷயங்கள் அகராதியில் மட்டுமே இடம் பெற்ற புரியாத சொல்லாக மாறியது. பார்ப்பதற்கு மனிதர்கள் போல் இருந்தாலும் உலகர்களின் உடல் ஏகப்பட்ட மாறுதல்கள் பெற்றிருந்தது. உலகர்களின் ஜீரன சக்தி அபிரிதமானது. எந்தவொரு உணவும் வயிற்றுக்குள் சென்றவுடன் வெந்து தாதுப் பொருட்களாகவும், வெற்று பொடிகளாக பிரிந்து விடும்.தாதுக்கள் சக்தியாக எலும்பு, நரம்பு என யாவற்றிற்கும் கொண்டு செல்லப்படும். பொடிகள் கழிவுகளாக நிலத்தில் விடப்பட்டன. மனிதனுக்கு இரத்தம் போல, உலகருக்கு தாதுப் பொருட்களால் ஆன படிமங்கள். இரத்தத்தைப் போல் படிமங்கள் அவ்வளவு சீக்கிரமாக வெளியேறாது. அதனால் உலகரின் பலம் மனிதனை விட பல மடங்கு அதிகமாகயிருந்தது. உலகில் நீரே இல்லை. அதனால் உலகருக்கு வியர்வை, சிறுநீர் இல்லை. அதனால் அவர்கள் முன் பக்க உறுப்புகளின் வேலை பாதியாக குறைக்கப்பட்டு, ஒரே வேலைக்காக முழுதும் அர்ப்பனிக்கப் பட்டிருந்தன. அர்ப்பனிக்கப்பட்ட ஆணின் முன்னுறுப்புகளில் இருந்து உபலங்கள் வெளியேறும். தனது பயண தொடக்கத்தில் கெட்டியாக இருந்த உபலங்கள்(Crystals), உடல் சூட்டால் ஆவியாக ஊடுருவி கருப்பைக்குள் நுழையும். ஆவியின் வழியில் கருக்கள் ஏதாவது இருந்தால், அதையும் அழைத்துக் கொண்டு கருப்பைக்குள் சென்று சிறு உலகரின் உயிரைத் தோற்றுவிக்கும்.

உலகர்கள் விண்வெளி ஆராய்ச்சியில் மனித சாதனைகளை தூசி எனக் கருதும்படி பால் வீதியைக் கடந்தனர். அன்ட்ரோமேடா கேலக்சியின் நட்சத்திர குடும்பங்களை அலசினார்கள். 'ரெவிட்' என்றொரு நட்சத்திரத்திற்கு பெயர் வைத்தனர். பதினைந்து கிரகங்கள் ரெவிட்டை சுற்றி வந்தது. அதில் 'செலின் 21' என்று பெயர் வைத்த கிரகத்தில் தான் உலகர்கள் தண்ணீரை முதன் முதலாக பார்த்தனர். வின் க்ரூசின் புத்தகத்தை முன் வைத்து விஞ்ஞானிகள் தண்ணீரின் குண நலன்களை பற்றி புகழ்ந்து தள்ளினார்கள். பூமிக்கு வயதாகி விட்டதால். 'செலின் 21'ற்கு நிரந்தரமாக குடிபெயர்ந்து விடலாமென யோசித்தனர். அதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய, வின் க்ரூசை தலைமைக் குழு அழைத்தது. இந்த கருத்து மான்ட்லோவுக்கு பிடிக்கவில்லை. வின் க்ரூசின் ரோபோவை கொண்டு அனைவரையும் பூமியிலேயே சிறைப் பிடிக்க முயற்சி செய்தான்.

தலைமைக் குழுவில் இருந்தவர்களை நேரடியாக எதிர்க்க முடியாமல் வின் க்ரூசின் ரோபோவை கொண்டு எதிர்த்தான் மான்ட்லோ. கடைசியில் ரோபோவும் அழிந்து விட்டதால், நேரடியாக இறங்கி அனைவரையும் பூமியிலேயே சிறைப்படுத்த திட்டம் தீட்டினான்.

கருத்துகள் இல்லை: