பாரதியார் பாடல் ஒன்றினை முனுமுனுத்தபடி, புதிதாக வந்திருப்பவரின் அறை கதவைத் தட்டினர் பூபதி.
"நிர்மலா தான நீங்க?"
"ஆமாம்...நீங்க!"
லட்சுமியை பெண் பார்க்க சென்று விட்டு, நிச்சயதார்த்த தேதியும் குறித்து விட்டு வெளியில் வரும் பொழுது தான் நிர்மலாவை பார்த்தான் பூபதி. லட்சுமியை விட நிர்மலா அழகாக தெரிந்தாள். பலமுறை லட்சுமியுடன் வாக்குவாதம் ஏற்படும் பொழுது, 'உன்ன பார்க்கறதுக்கு முன்னாடி அந்த நிர்மலாவ பார்க்காம போயிட்டேன்' என்று கத்தியிருக்கிறான் பூபதி. லட்சுமியும் இறந்து, ஒரே மகளான ப்ரியாவும் நிரந்திர குடியுரிமை வாங்கி வெளிநாட்டிலியே தங்கி விட்டாள். நான்கைந்து முதியோர் இல்லங்களில் சிறந்தது எதுவென அலசி ஆராய்ந்து, பூபதியாகவே சேர்ந்துக் கொண்டார். வாழ்க்கையில் அனைத்து கட்டங்களையும் கடந்து, நிரந்திர ஓய்வுக்கான நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று நிர்மலாவை பார்த்ததும், மனம் அனைத்தையும் வேகமாக பின் தள்ளி அவளைப் பார்த்த முதல் தினத்திற்கு சென்று நின்றது. உடலும், மனசும் லேசானது போலிருந்தது. முதல் முறை நிர்மலாவை கண்டப் பொழுது ஏற்பட்ட சிலிர்ப்பு ஏற்பட்டது. கண்ணாடியில் தன் உருவத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டார். சொல்ல முடியாத ஏதோ ஒன்று அவருள் நிகழ்ந்ததை உணர்ந்தார் பூபதி.
இருவருக்கும் இடையில் உருவான அழகான நட்பை, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல நல்லதொரு நாளை எதிர்பர்த்திருந்தார்.
"நீங்களாவது பரவாயில்ல...பொண்ண பெத்தவரு. எனக்கு ரெண்டு பசங்க, ஆனா இன்னிக்கு என் நிலமைய பாருங்க. நான் சாவதற்கு முன்னயே அவங்க அழிஞ்சுடுவாங்க பாருங்க" என்றாள் நிர்மலா.
முதியோர் இல்லத்தில் சேர்ந்த பிறகு எத்தனையோ பெற்றோர்களின் புலம்பலை கேட்டிருக்கார் பூபதி. அனைவரின் பேச்சிலும் துக்கம் இருக்குமே தவிர கோபம் இருக்காது. எப்படியும் முடிவில், 'அவங்களாவது நல்லா இருந்தா..சரி தான் சார்' என்று சமாதானம் அடைந்து விடுவர். ஆனால் நிர்மலாவை போல், பெற்ற பிள்ளைகளின் மேல் வெறுப்பை காட்டியதில்லை.
'இவ இவ்ளோ தானா !!'
நாகரீக வளர்ச்சியில் மனிதன் வாழும் வீடுகள் எல்லாம் எலி பொந்துகளாக சுருங்கி விட்டன. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முயன்றே குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் தவிக்கின்றனர். பணத்துக்கான தேடலில் உறவுகள் கண்ணுக்கு தெரிவதில்லை. கண்களுக்கு தெரியாத பொழுது அருகில் இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன என்று தோன்றியது பூபதிக்கு. அந்த கால சந்நியாச தர்மம் போல முதியோர் இல்லமும் ஒரு தர்மமாகவே தோன்றியது.
இன்றைய இளைஞர்கள், இருபதுகளிலேயே மனதளவில் பலவீனம் ஆகின்றனர். அவர்களை குறை கூறுவதில் பூபதிக்கு விருப்பம் இல்லை. அன்பு காட்ட வேண்டிய வயதில், 'இப்ப படிச்சா தான் பின்னால் நல்லாயிருக்கலாம். போய் படி' என்று எந்நேரமும் அடக்கியே வளர்த்து விட்டனர். பிள்ளைகளை படிக்க வைத்தால், பின்னால் தன்னை அரவணைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் பெற்றவர்கள் படிக்க வைக்கிறார்களோ என்ற சந்தேகம் பூபதிக்கு உண்டு. சிறு வயதில் பெற்றோர்களால் அரவணைக்கப்படாத குழந்தைகள் தான் பெரியவர்கள் ஆனதும் வளர்த்ததற்கு கூலி கொடுத்து ஒதுக்கி விடுகின்றனர் என்று வருந்தினார் பூபதி. தனது மகன்களையே புரிந்து கொள்ளாத நிர்மலா, மற்றவர்களையும் புரிந்துக் கொள்ள மாட்டாள் என பூபதி நம்பினார்.
'நல்லவேள...லட்சுமிய முதல்ல பார்த்தேன்.'
Blogged with Flock
1 கருத்து:
nalla irukku.aana sethu pona laksmikku ithu theriya povutha
கருத்துரையிடுக