திங்கள், 14 ஜனவரி, 2008

கி.பி. -1

<கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை பிறந்தார். நண்பர்களால் செல்லமாக கி.பி. என்றழைக்கப்பட்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்து சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து எவருக்கும் அக்கறை இல்லை எனினும், அக்கறையோடு சேகரித்ததில் கிடைத்த சுவையான தகவல்களின் தோகுப்பு.>

இவ்வுலகிலேயே மிகவும் கடினமான செயல் எதுவென்று கேட்டால், அவரவர்களது வயதிற்கேற்ப தனது அனுபவத்தை சொல்வார்கள். உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் பள்ளிக்குப் போவது, கல்லூரி பருவத்தில் அழகிய பெண்கள் பாராமுகமாக இருப்பது, இளைஞர் பருவத்தில் வேலைக் கிடைக்காமல் இருப்பது, கல்யாணமானவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பது, முதுமையில் ஒதுக்கப் படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கிருஷ்ணப்பிள்ளைக்கு குழந்தைத்தனமான செயல்களாக தோன்றின. அவரை பொறுத்தவரை இப்பிரஞ்சத்திலியே கடினமான செயல் அழுகின்ற குழந்தையை சமாளிப்பது தான். அழுகின்ற குழந்தையை தேற்றி சமாதானப்படுத்துவது என்றால் அந்த குழந்தையும், நம்மையும் படைத்த பிரம்மாவிற்கே கைக் கூடாத காரியம். அப்படியிருக்கும் பொழுது, சாமான்ய மனிதர்களான நாம் எம்மாத்திரம் என்பதே கிருஷ்ணப்பிள்ளையின் ஆணித்தரமான வாதம். சேவலின் கூவலைக் கூட காதில் வாங்காமல் தூக்கத்தைத் தொடரலாம். ஆனால் இரவில் குழந்தை வீறிட்டு அழும் இன்னிசை அபாய ஒலி மனிதனை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பிவிட்டு விடுகிறது. முதுமையில் தூக்கம் வருவதே அரிது, அப்படியும் தன்னை மீறி கண்ணிழுக்கும் பொழுது குழந்தை கெடுத்து விடுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் தான் என்றால் கிருஷ்ணப்பிள்ளை பொறுத்திருப்பார். ஆனால் தொடர் ரோதனையாக அல்லவா உள்ளது. ஓய்வு கிடைத்த பிறகும் நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் மிகவும் சங்கடப்பட்டார். பேத்தி தான் என்றாலும் தனது சுதந்திரத்தில் தலையிடுவதாக கிருஷ்ணப்பிள்ளைக்கு பட்டது. மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராய், முதியோர் இல்லத்திற்கு செல்லப் போவதாக தனது மகனிடம் தெரிவித்தார். ஏன் ஏனென்று இரவு பகலாக மாற்றி மாற்றி கேள்விக் கனைகளால் கிருஷ்ணப்பிள்ளையை அவரது குடும்பத்தினர் துளைத்தெடுத்து விட்டனர். சரி போகட்டும் என்று வீட்டிலேயே இருக்க சம்மதித்தால், மகள் அவரது மகனுடன் ஒரு வாரம் தங்குவதாக வந்து சேர்ந்தாள். பாஞ்சஜன்யம் என்ற கிருஷ்ணனின் சங்கை விட பலம்பொருந்திய தொண்டையை பெற்றிருந்தான் கிருஷ்ணப்பிள்ளையின் பேரன். ஒன்றிற்கு ரெண்டா என்ற திகிலுடன் தான் படுத்தார். ஆனால் அன்றைய இரவு அவர் நினைத்தது போல் மோசமில்லை. ஒரு மாபெரும் உண்மையை கண்டுபிடிக்க உதவிய அற்புத இரவாகவே அமைந்தது. ஒற்றுமைக்கு பெயர் போனவர்கள் காக்கைகள் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் என்று தான் அது நாள் வரை கிருஷ்ணப்பிள்ளை நினைத்திருந்தார். ஆனால் இரவில் ஒரு குழந்தை அழ ஆரம்பித்தவுடன், இன்னொன்றும் சேர்ந்துக் கொள்கிறது. தனது பேரனிடமும், பேத்தியிடமும் காணப்பட்ட தெய்வீக ஒற்றுமையை எண்ணி மெய் சிலிர்த்தார் கிருஷ்ணப்பிள்ளை. கடல், கடல் அலைகள், திமிங்கலம் ஏன் இந்த பிரபஞ்சத்தை விடவும் தனது பொறுமை தான் பெரிது என்ற பெருமை மட்டுமே கிருஷ்ணப்பிள்ளைக்கு மிஞ்சியது.

கி.பி. -2

எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களை படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டு பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த 'அத்வைதம்' என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்று கொண்டு தலையை சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி எடுத்தது. தனது அலுவலக நண்பர் ஒருவரிடம் தனது மாற்றத்தை சொல்லி விட வேண்டுமென கிளம்பினார். அவரது நண்பர் எது சொன்னாலும் அது சரியாக தானிருக்கும் என கிருஷ்ணப்பிள்ளை எப்பொழுதும் நம்பினார். வழியில் நடுத்தர வயதுடைய ஒருத்தர் தனது பணம் திருடுப் போனதை குறித்து வருத்ததோடு புலம்பினார். அவர் புலம்பும் பொழுது, "கடவுளுக்கு கண்ணும் இல்ல...ஒரு மண்ணும் இல்ல. கடவுள்னு ஒருத்தவன் இருந்திருந்தா எனக்கு இப்படி நடந்திருக்குமா? என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பாக்கிறதுக்கு ஒரு கடவுளா? அதெல்லாம் வெறும் கல்" என்றெல்லாம் கோபத்தில் மண்ணை வாரி இறைத்து திட்டிக் கொண்டிருந்தான். அவன் தன்னை தான் திட்டுவதாக ஆத்திரப்பட்டார் கிருஷ்ணப்பிள்ளை. 'பணத்த பத்திரமா வச்சுக்க துப்பில்லாம என்னை திட்ட வந்துட்டான். கலி காலம். நம்பிக்கை இல்லாம போச்சு' என்று முனறிக் கொண்டே கடந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்காக அவரது நண்பர் பூங்காவில் காத்திருந்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு தற்பெருமை பிடிக்காது. அதனால் சிறிது நேரம் பொதுவாக பேசி விட்டு, கடவுளை பற்றிய பேச்சை தொடங்கினார். அவரது நண்பர், "கடவுளும், குழந்தையும் ஒன்னு. ரெண்டு பேருக்கும் தான் மனசுல ஒன்னுமே இருக்காது. இந்த சாமியாருங்க, நான் தான் கடவுளுன்னு சொல்றவங்க எல்லாம் தன்னையும் ஏமாத்திக்கிட்டு மத்தவங்களையும் ஏமாத்திக்கிட்டு திரிறாங்க" என்று தெளிவாக கிருஷ்ணப்பிள்ளையின் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. அவரது நண்பர் சொல்றது உண்மையாக தான் இருக்கும் என சமாதானப்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை இருக்கும் பொழுது ஏன் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றனர் எனப் பெரிய சந்தேகம் கிருஷ்ணப்பிள்ளைக்கு எழுந்தது. 'தினமும் ராத்திரியில எல்லார் தூக்கத்தையும் கெடுக்கும் என் பேத்தி அப்ப கடவுளா! மத்தவங்கள கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறது தான் கடவுளுக்கும், குழந்தைக்கும் வேலை போலிருக்கு. அப்ப ரெண்டு பேரும் சொன்னதும் உண்ம தான். அப்ப நான் கடவுள் இல்லை. ஏன்னா...நான் யாரையும் கஷ்டப்படுத்துல' என தனது நண்பன் சொன்னதில் இருக்கும் உண்மையை ஊகித்தார் கிருஷ்ணப்பிள்ளை.

கி.பி. -3

மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்த புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டு பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி நாய் ஒன்று ஈனஸ்வரத்தில் முனகி கொண்டிருந்தது. நாயின் மீது கிருஷ்ணப்பிள்ளைக்கு பரிதாபம் பொங்கியது. அந்நாயினுடைய ஒருவேளை பசியையாவது போக்கி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், பக்கத்து கடையிலிருந்து ரொட்டித் துண்டுகள் வாங்கி நாயிற்கு போட்டார். நாய் சாப்பிடும் அழகினை பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டுமென நினைத்துக் கொண்டார். கிருஷ்ணப்பிள்ளை தலை கால் புரியாத மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார். தனது மனிதாபிமான செய்கையை சாலையில் யாராவது கவனித்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் பார்க்காதது பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நாய் மட்டும் நன்றியோடு வாலாட்டியது. மனநிறைவோடு வீட்டை நோக்கி நடந்தார் கிருஷ்ணப்பிள்ளை. அவரை அந்த நாய் பின் தொடர்ந்தது. நாயும் பின் தொடர்வதை பார்த்து, 'சூ..' என்று விரட்டினார். கல் எடுத்து அடித்தும் பார்த்தார். நாய் எதற்கும் மசியாமல் வீடு வரை வந்து விட்டது. 'இந்த சனியன எங்க பிடிச்சிட்டு வந்தீங்க?' என்று சகதர்மணியிடம் சக்கையாக வாங்கி கட்டிக் கொண்டார். 'சொறி பிடிச்ச நாயால குழந்தைக்கு இன்ஃபெக்'ஷன் கின்ஃபெக்'ஷன் வந்துடப் போகுது. ஏதாவது பண்ணி அத முதல்ல துரத்தி விடுங்க' என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு அவரது மனைவி கட்டளையிட்டாள். ஏதேதோ செய்துப் பார்த்து நாயிடம் தோற்றார் கிருஷ்ணப்பிள்ளை. பிறகு, ஏதோ யோசனை வந்தவராக கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணினார். அவர்கள் வந்து நாயை கதற கதற வேனில் அடைத்து அழைத்து சென்றார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள், 'அந்த நாயை எப்படியும் கொன்னுடுவாங்க. பாவம்..அது சாகறதுக்கு நீங்க காரணம் ஆயிட்டீங்களே மாமா!' என்று வருத்தப்பட்டாள். கிருஷ்ணப்பிள்ளைக்கு தூக்கி வாரி போட்டது. சேவை புரிந்து புண்ணியம் தேட போய் பாவத்தில் வந்து முடிந்து விட்டதே என்று குழம்பினார். ஏணி வைத்தாலும் மதர் தெரசா அளவுக்கு உயர முடியாது என்று கிருஷ்ணப்பிள்ளைக்கு புரிந்தது.

கி.பி. -4

வயதானதால் கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதி அதிகமாகி விட்டதென வருவோர் போவோர்களிடம் அங்கலாய்த்து கொண்டாள் அவரது மனைவி. கிருஷ்ணப்பிள்ளைக்கு ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. 'என்ன பெருசா மறதிய கண்டுட்ட? இன்னோர் தடவ அப்படி சொன்னா பாரேன்!' என்று கிருஷ்ணப்பிள்ளை கோபித்துக் கொண்டார். 'ஆயிரந்தடவ சொல்வேன்' என்று பதில் வந்தது. நல்லவேளையாக வாக்குவாதம் முற்றி போராக மாறாமல் போட்டியில் முடிந்தது. 'நல்லா கேட்டுக்கோங்க...பச்ச மொளகா வேண்டாம். காஞ்ச மொளகா 50 கிராம் வேணும். தலைக்கு தேங்க எண்ணெய் வேணும். சமைக்கறதுக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் வேண்டாம். கொஞ்சமா வீட்டுல துவரம்பயிர் இருக்கிறதால, கடலப்பயிர் வேண்டாம். துவரம்பயிர் மட்டும் 500 கிராம் வாங்கிட்டு வாங்க. துணி தோய்க்கிற சோப்பு பெருசு ஒன்னு, குளிக்கிற சோப்பு நாலு. பெருங்காயம் சின்ன வெங்காயம் வேணாம். பெரிய வெங்காயம் கால் கிலோ. ஒரு லிட்டர் பால். குழந்தைக்கு பேபி ஷாம்பூ, சோப்பு. அப்படியே உங்களுக்கு எதாவது தேவன்னா வாங்கிட்டு வந்துடுங்க. இன்னொரு தடவ சொல்லட்டுமா?' என்று கேட்டாள் கிருஷ்ணப்பிள்ளையின் மனைவி. வீராப்பாக எதுவும் சொல்லாமல் வீம்பாக வெளியேறினார். எப்படியும் தோற்று விடுவார் என்பது கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியது எண்ணம். ஏனென்றால் முன்ன பின்ன கடைக்கு சென்று பழக்கம் இல்லாதவர். கடைக்கு செல்லும் வழியில், பலத்த யோசனையில் ஆழ்ந்தார் கிருஷ்ணப்பிள்ளை. கல்யாணமான புதிதில், அவரது மனைவி 'களத்தூர் கண்ணம்மா' என்ற புது படம் வந்திருப்பதாக சொல்லி அழைத்தாள். சமய சந்தர்ப்பங்கள் கூடி வராததால் அவளது விருப்பத்தை கிருஷ்ணப்பிள்ளையால் அன்று நிறைவேற்ற முடியாமல் போனது. கிருஷ்ணப்பிள்ளை அந்தப் படத்தின் குறுந்தகட்டினை வாங்கி தன் மனைவியின் கையில் வைத்து ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென விரும்பினார். கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியோட தங்கை மகள், அதே ஊரின் மற்றொரு எல்லையில் வசிக்கிறாள். அவரது மனைவிக்கு தங்கை மகளை மிகவும் பிடிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மைத்துனி மகளுக்கு மறுதினம் பிறந்த நாள் என்று ஞாபகம் வந்தது. 'கோயிலுக்கு போகலாம்' என்று கூறி, மகள் வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு போய் அசத்தலாம் என்று திட்டமிட்டுக் கொண்டார். வெறும் கையோடு போனால் நல்லாயிருக்குமா? அதனால் மைத்துனி மகளுக்கு ஒரு புடவை எடுக்க வேண்டும் என நிச்சயித்துக் கொண்டார். இப்படி யோசித்துக் கொண்டே மளிகைக் கடைக்கு வந்து சேர்ந்தார். பணம் எடுத்து வரவில்லை என்று அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. வீட்டிற்குப் போய் பணம் எடுத்தால், மனைவி வென்றதாகி விடும். அவளோ படிக்காதவள். ஞாபகம் இல்லாததையும், மறதியையும் ஒன்றென நினைத்து குழப்பிக் கொள்வாள். மளிகை கடை தெரிந்த கடை தான். வேண்டியதை சொல்லி, கடைப் பையனையே எடுத்துக் கொண்டு போய் வீட்டில் தர சொல்லலாம். மனைவியும் பணம் தந்து விடுவாள். சிறிது நேரம் பூங்காவில் ஓய்வெடுத்து விட்டு, பிறகு வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து குறுந்தகடு மற்றும் புடவையினை வாங்கிக் கொள்ளலாம் என்று நிலைமைக்கு தகுந்தவாறு யோசனையை மாற்றினார். சொன்ன பொருட்கள் எல்லாம் சொன்னப்படி வந்ததில் கிருஷ்ணப்பிள்ளையின் மனைவிக்கு மிகுந்த ஆச்சரியம். கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதியோ என்று சந்தேகப்பட்டதை எண்ணி வருந்தினாள். பூங்காவில் இருந்து வேகமாக வந்த கிருஷ்ணப்பிள்ளை, சட்டையை அவிழ்த்து விட்டு படுத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார். பாவம், கிருஷ்ணப்பிள்ளைக்கு குறுந்தகடு மற்றும் புடவை பற்றி மறந்து விட்டது. இல்லை..இல்லை.. ஞாபகம் இல்லாமல் போய் விட்டது.

கி.பி. -5

கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும் தொலைக்காட்சியில் ஆர்வமாக மதிய உணவினையும் மறந்து தொடர் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களை தவிர, நான்காவதாக ஒருவரும் யாருக்கும் தெரியாமல் தொலைக்காட்சியை பார்த்தார். அது தொட்டிலில் இருந்த கிருஷ்ணப்பிள்ளையின் பேத்தி. கால்களால் நெம்பி நெம்பி தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. கருவில் இருக்கும் பொழுதே அத்தொடரின் கதாநாயகியோட வேதனையும், போராட்டமும் குழந்தைக்குத் தெரியும். பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த பொழுது கூட, அறையில் இருந்த தொலைக்காட்சியில் கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள் விடாமல் தொடரினைப் பார்த்தாள். தொடரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குழந்தையை சென்று அடைந்தன. ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணிற்கு தான் புரியும் என்பதற்கேற்ப மருத்துவர் பிரசவ தேதி செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிட்டு இருந்தும், தாயின் மனதை புரிந்து ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே கருவிலிருந்து வெளிநடப்பு செய்தது குழந்தை. அத்தகைய குழந்தை தொட்டிலில் இருந்து தலையை நீட்டி தொடரினை பார்த்தது என்பது கற்பனை கலக்காத அப்பட்டமான உண்மை.

'ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு தனி திறமை இருக்கும். உனக்கும் இருக்கும். அது என்னென்னு உனக்குள்ள தேடு' என்று கதாநாயகி கதாநாயகனுக்கு அறிவுறைத்தாள். உடனே விளம்பரங்கள் வந்தன. பல நிமிடங்களுக்கு பின் மீண்டும் தொடர் தோன்றி, கதாநாயகனின் முகத்தை பல்வேறு கோணங்களில் காட்டி விட்டு முடித்து விட்டனர். பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு பெருங்கோபம் வந்து விட்டது. 'இன்னிக்கு என்ன போட்டுட்டானுங்க பெருசா.. இதுல ஆயிரம் விளம்பரம் வேற நடுவுல' என்று புலம்பிக் கொண்டு வேகமாக எழுந்தார். ஆனால், இந்த கோபத்தை எல்லாம் மறந்து நாளைக்கும் பார்ப்பார். மதிய உணவினை முடித்து விட்டு படுத்தால் தூக்கம் வரவில்லை. கதாநாயகி சொன்னது காதில் கேட்டது. பள்ளி, கல்லூரி, கல்யாணம், வேலை, ஓய்வு- இதில் எங்கே தனி திறமை இருக்கிறது என்று யோசிக்களானார். சிறு வயதில் நீச்சலில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். கிணறு, கால்வாய், குளம்,ஆறு, கடல் என்று ஒன்றையும் விடுவதில்லை. அதற்காக பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருக்கார். நீச்சல் தான் தனது தனி திறமை என்ற நினைப்பிலேயே தூங்கி விட்டார்.

மாலை ஆறு மணிக்கு பக்கத்து வீட்டம்மாள் அழுதுக் கொண்டே வந்தாள். 'அம்மா...என் பையன் கிணத்துல விழுந்துட்டானே! நான் என்ன பண்ணுவேன்? எனக்கு பயமா இருக்கு' என்று கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியை கட்டிக் கொண்டு அழுதாள். தூங்கி கொண்டிருந்தவரின் காதில் இவையெல்லாம் விழுந்தது. கிருஷ்ணப்பிள்ளை எழுந்து மின்னல் வேகத்தில் ஓடி, சுவர் ஏறி குதித்து, பக்கத்து வீட்டு கிணற்றை எட்டி பார்த்தார். பாதி கிணறு தான் தெரிந்தது. மீதி இருட்டாக இருந்தது. மூக்கு கண்ணாடி எடுத்து வர மறந்து விட்டார். பையனோட உயிர் தான் முக்கியம் என்று எதுவும் யோசிக்காமல் குதித்து விட்டார். உடம்பெல்லாம் ஒரே வலி. மெதுவாக கண்ணை திறந்தால், மருத்துவமனையில் இருப்பது புரிந்தது. 'அந்த பையன் எப்படியிருக்கான்?' என்று மனைவியிடம் கேட்டார் கிருஷ்ணப்பிள்ளை. 'அவனுக்கு என்ன! நல்லா தான் இருக்கான்' என்றாள் கோபமாக. அருகிலிருந்த மகன் குனிந்து, 'ஏம்ப்பா இப்படி இருக்கீங்க? அவன் ஏதோ ஒரு ஊர்ல, ஹாஸ்டலுல இருக்கிற கிணத்துல விழுந்ததற்காக, நீங்க காப்பத்துறேன்னு இங்க விழுந்து இப்படி ஹாஸ்பிட்டலுல இருக்கீங்களே! அதுவும் அந்த கிணத்துல தண்ணியும் இல்ல. சும்மா வீட்ல இருக்கலாம்னு இல்லாம, இப்படி நீங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டு, கூட இருக்கிற எங்களையும் கஷ்டப்படுத்துறீங்களே!?' என்று குரலில் கோபத்தை காட்டாமல், சாந்தமாக கேட்டான். இதுவே கிருஷ்ணப்பிள்ளை பிறந்த கிராமமாக இருந்திருந்தால், பக்கத்து வீட்டு பையன் எங்கு படிக்கிறான் என்றும், கிணற்று நீர் பற்றியும் தெரிந்திருக்கும். இதெல்லாம் நகரத்திலேயே பிறந்து வளர்ந்த கிருஷ்ணப்பிள்ளையின் மகனுக்கு எப்படித் தெரியும்?

அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை. கிருஷ்ணப்பிள்ளை எது செய்தாலும் ஏறுக்கு மாறாகவே எல்லாம் நிகழ்கின்றன.

புதன், 2 ஜனவரி, 2008

அவன் அமெரிக்கா போறான்

நரேந்திரன் வீட்டிற்கு வந்ததும் அவன் கண்களில் அந்த பத்திரிக்கை விழுந்தது. அவனது பால்ய நண்பன் தயாளனின் திருமண அழைப்பிதழ் அது. நரேந்திரனுக்கே தாமதமாக தான் கல்யாணம் நடந்தது. சந்நியாசம் தான் தனக்கு என்று முடிவு செய்து கவலைப்பட்டு கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக கல்யாணம் ஆனது. கல்யாணம் ஆகி எட்டு வருடங்கள் முடிந்த நிலையில், சந்நியாசி ஆகாமல் போய் விட்டோமே என்று கவலைப்பட்டான். இரண்டு விஷயங்களில் அனைவரையும் விட மிக திறமைசாலியாக இருந்தான். ஒன்று மற்றவர்களுக்கு நடந்த நல்லதை நினைத்து புலம்புவது. மற்றொன்று தனக்கு அந்த நல்லது நடக்கவில்லையே என்று கவலைப்படுவது. எப்படியும் தனது சந்நியாசி ஆகும் கனவை தயாளனாவது நிறைவேற்றுவான் என்ற நரேந்திரன் நம்பினான்.
'இப்ப இவன் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறான்? படிப்பும் ஸ்கூல் தாண்டல. இன்னும் அதே பழைய விவசாயத்தையே தான் பண்ணிக்கிட்டிருக்கான். அறிவு கெட்டவன்....மரியாதையும் தெரியல. நேர்ல வந்து கூப்பிட்டிருந்தாலாவது போறத பத்தி நினைச்சிருப்பேன்' என்று பத்திரிக்கையை முழுவதுமாக பார்க்காமலேயே வீசி விட்டான் நரேந்திரன்.

அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கெல்லாம் நரேந்திரன் வீட்டு வாசலில் தயாளன் வந்து நின்றான். கதவை திறந்த நரேந்திரனின் மனைவி, நரேந்திரனிடம் செய்தியை சொல்லி எழுப்பி விட்டாள். தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த நரேந்தி்ரனுக்கு, வாசலில் தலை சொறிந்தவாறு திரும்பி நின்றுக் கொண்டிருந்த தயாளனை பார்த்ததும் கோபம் வந்து விட்டது.
'கல்யாணத்துக்கு பணம் கடனா வாங்க வந்திருக்கான் போலிருக்கு...இவ வேற ஊர்ல இல்லன்னு சொல்லி அனுப்பாமா....' என்று நினைத்துக் கொண்டே,"வா...தயாளு. ஏன் நிக்கிற? உள்ள வந்து உட்காரு" என்று முகம் முழுவதும் பல்லாக வரவேற்றான். நரேந்திரனை பார்த்து புன்னகைத்தவாறே உட்கார்ந்த தயாளனின் கண்களில் அவனது திருமண அழைப்பிதழ் விழுந்தது.
"அடாட... பத்திரிக்கை வந்துடுச்சா? நீ ஆபீஸ் போறதுக்கு முன்னாடி நேர்ல பார்த்து கூப்பிடலாம்னு தான் காலையிலியே வந்தேன். டைரியில இருந்த மத்தவங்க அட்ரசோடு உன் அட்ரசையும் சேர்த்து அம்மா அனுப்பிட்டாங்க போலிருக்கு" என்றான் தயாளன்.
"பரவாயில்ல...இதுல என்னயிருக்கு" என்று சொல்லி விட்டு,'சரியான தொல்லை...பணமும் உடனடியா ஏற்பாடு பண்ண முடியாது. சாயந்திரம் தான் கிடைக்கும். அதுவரைக்கும் இங்கயே சாப்பிட்டு வேற உயிர எடுப்பான்' என்று நினைத்தவாறே சிரித்தான்.

எப்படி தயாளனை அனுப்பலாம் என நரேந்திரன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவன் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நின்றது.
"எப்பவும் இப்படி தான் யாராவது உதவி கேட்டு வந்து தொந்தரவு செஞ்சுட்டே இருப்பாங்க. என் சூழ்நிலைய சொன்னா கூட புரிஞ்சுக்க மாட்டாங்க. சரி, நான் அனுப்பி வச்சுட்டு வர்றேன்" என்று எழுந்தான் நரேந்திரன். யாராவது அட்ரஸ் கேட்க வந்திருப்பாங்க, ஆங்கிலத்திலேயே பேசி தயாளனை பயமுறுத்தனும் என்று நரேந்திரன் எண்ணிய பொழுது, காரில் இருந்து வெளிநாட்டுக்கார பெண் ஒருத்தி இறங்கினாள். நரேந்திரனுக்கு படிக்காதவர்களை பார்த்தால் தான் ஆங்கிலம் வரும். வெளிநாட்டு பெண் நரேந்திரனை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
'நீங்க யாரு?' என்பதற்கான ஆங்கில வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.
"இவள தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். பத்திரிக்கையில் பெயர் படிச்சிருப்பியே..அர்லீன். அமெரிக்காவுல கம்ப்யூட்டர்ல பெரிய வேல பார்க்கிறா. நீ இருக்கியா, இல்லயான்னு தெரிஞ்சுக்க கார தெரு முனையிலேயே விட்டுட்டு நான் நடந்து வந்துட்டேன்" என்றான் தயாளன்.
கார் ட்ரைவர் இரண்டு கூடை நிறைய பழங்களும், காய்கறிகளும் எடுத்துக் கொண்டு போய் வீட்டிற்குள் வைத்தான்.

"எப்படி?"
"டூரிஸ்ட்டா வந்த அர்லீனுக்கு என்னை பிடிச்சிடிச்சு" என்று சொல்லி விட்டு அர்லீனைப் பார்த்து சிரித்தான் தயாளன்.
'எட்டு வருஷத்துக்கு முன்னாடி நான் எந்த டூரிஸ்ட் கண்ணிலும் படாம போயிட்டேனே!'
"ஆனா அது உண்மை இல்ல" என்று சிரிப்பை நிறுத்தி விட்டு, "உண்மைய சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அதனால எல்லார்கிட்டயும் அப்படி சொல்லியிருக்கோம்" என்று மீண்டும் சிரித்தான் தயாளன். நரேந்திரனுக்கு கோபம் வந்தது. ஆனால் எப்பவும் போல் வெளிக்காட்டாமல், "எங்கிட்டயாச்சும் சொல்லுவியா?" என்றான்.
"உங்கிட்ட சொல்லாமலா? ஆனா நீயும் நம்புவியான்னு தான் சந்தேகமா இருக்கு."
"ப்ச்...நான் உன்ன நம்பாம இருப்பனா?" என்று சொல்லி விட்டு, 'சாவடிக்காம சொல்ல மாட்டான் போலிருக்கு' என்று மனதிற்குள் திட்டினான் நரேந்திரன்.

"லாரில ட்ராக்டர் மோதி மூனு மாசத்துக்கு முன்னாடி ஹாஸ்பிட்டலுல இருந்தேன் ஞாபகமிருக்கா? பிழைக்க மாட்டேன்னு எல்லாருக்கும் சொல்லியே அனுப்பிச்சிட்டாங்க. அப்ப நான் மூனு நாள் கோமாவுல இருந்தேன். அது தெளிஞ்சவுடன் ஆப்ரேஷன் பண்ணாங்க. அப்ப எனக்கு ஏதோ சத்தம் கேட்டுச்சு. என் உடம்புல இருந்து நான் வெளியே வந்துட்டேன். எங்கயோ மிதக்கிற மாதிரி இருந்துச்சு. கருப்பான ஒரு பைப்புக்குள்ள கொஞ்ச நேரம் போயிட்டேயிருந்தேன், அப்புறம் சுரியன் மாதிரி ஏதோ ரொம்ப வெளிச்சமானா இடம் வந்துச்சு. ஆனா அது கண்ணெல்லாம் கூசல. எங்கப்பா அங்க நிக்கிறாரு. 'உனக்கு இன்னும் நேரம் வரல. நீ போ'ன்னு என்னை திருப்பி அனுப்பி வச்சுட்டார். திரும்பி கருப்பு பைப்புக்குள்ள நடந்து வரும் பொழுது அர்லீன பார்த்தேன். இப்ப இருக்கிறத விட ரொம்ப அழகா இருந்தா. அவ ஏதோ கேட்டா, நானும் என்னமோ சொன்னேன். திரும்பி நான் ஹாஸ்பிட்டலுக்கு வந்து என் உடம்புக்குள்ள போயிட்டேன்.
நினைவு வந்தவுடனே நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருந்தது. நானும் அதை கனவுனே முடிவு பண்ணிட்டேன். செத்து போன அப்பாவ பார்த்தன்னு சொன்ன யாராவது நம்புவாங்களா?திடீரென்னு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இவ எங்க வீட்டு வாசல்ல நிக்கிறா. கனவுல பார்த்த பொண்ணாச்சேன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியம்.
இவளுக்கு மூளையில ரத்தம் போகாம அடச்சிக்கிச்சாம். ஆப்ரேஷன் பண்றப்ப இவளுக்கும் அதே மாதிரியே சத்தம் கேட்டிருக்கு. இவளும் செத்துப் போன அவங்க பாட்டிய பாத்திருக்கா. வர்றப்ப என்ன பத்தியும், என்னோட ஊர பத்தியும் எல்லாம் கேட்டாளாம். ஆனா எனக்கு பேசினத பத்தி எல்லாம் ஞாபகமில்ல. இந்த மாதிரி செத்து பிழைச்சவங்க அனுபவத்தையெல்லாம் வெளிநாட்டுல மும்மரமா ஆராய்ச்சி செய்றாங்களாம். அதுக்கு பெயர் கூட என்னம்மோ சொன்னியே!" என்று அர்லீனைப் பார்த்தான் தயாளன்.

"அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ் (OOBE - Out Of Body Experience)" என்றாள் அர்லீன்.
நரேந்திரனுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "ஆங்... நான் கூட இத பத்தி படிச்சிருக்கேன். சரி, இவங்க பேசுறது உனக்கு புரியுதா?" என்று கேட்டான்.
"கொஞ்சம் புரியும். கொஞ்சம் நானே புரிஞ்சுப்பேன். கொஞ்சம் சைகையில புரிய வைப்பா. ரொம்ப மெதுவா குழந்தக்கிட்ட பேசுற மாதிரி தான் பேசுவா. நான் இங்கிலீஷ் கத்துக்கிறேன். அவளுக்கு நான் தமிழ் சொல்லி தர்றேன்" என்று சிரித்தான் தயாளன்.
"நீ எப்படி கிராமத்துல விவசாயமே பண்ணிக்கிட்டு இருக்க போறியா?"
"இல்ல..நானும் அம்மாவும் இவக் கூட அவங்க ஊருக்கு போயிடப் போறோம். நம்ம வழக்கப் படி இங்க ஒரு கல்யாணம் பண்ணிட்டு, அங்க போய் அவளோட பெத்தவங்க முன்னாடி அவங்க வழக்கப் படி இன்னொரு கல்யாணம் பண்ணப் போறோம். இவங்களுக்கும் அங்க நிறைய நிலம் இருக்காம். அப்படியே அத நான் பார்த்துப்பேன்."
'ச்சே...கொடுத்து வச்சவன். ஆக்சிடென்ட்ல போவ கிடந்தவனுக்கு இப்படியொரு வாழ்வு.'

தயாளன் விடை பெற்றுக் கொண்டு கிளம்பும் பொழுது, அர்லீன் அவனிடம் ஏதோ ரகசியமாக கேட்டாள். தயாளனும் மெல்லிய குரலில் அவளுக்கு பதிலளித்தான். அர்லீன் திரும்பி நரேந்திரனைப் பார்த்து, "நீங்க அமெரிக்கா வந்தா, எங்க வீட்டுக்கு...."என்று திக்கி தயாளனைப் பார்த்தாள்.
"கண்டிப்பா வரனும்."