<கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை பிறந்தார். நண்பர்களால் செல்லமாக கி.பி. என்றழைக்கப்பட்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்து சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து எவருக்கும் அக்கறை இல்லை எனினும், அக்கறையோடு சேகரித்ததில் கிடைத்த சுவையான தகவல்களின் தோகுப்பு.>
இவ்வுலகிலேயே மிகவும் கடினமான செயல் எதுவென்று கேட்டால், அவரவர்களது வயதிற்கேற்ப தனது அனுபவத்தை சொல்வார்கள். உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் பள்ளிக்குப் போவது, கல்லூரி பருவத்தில் அழகிய பெண்கள் பாராமுகமாக இருப்பது, இளைஞர் பருவத்தில் வேலைக் கிடைக்காமல் இருப்பது, கல்யாணமானவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பது, முதுமையில் ஒதுக்கப் படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கிருஷ்ணப்பிள்ளைக்கு குழந்தைத்தனமான செயல்களாக தோன்றின. அவரை பொறுத்தவரை இப்பிரஞ்சத்திலியே கடினமான செயல் அழுகின்ற குழந்தையை சமாளிப்பது தான். அழுகின்ற குழந்தையை தேற்றி சமாதானப்படுத்துவது என்றால் அந்த குழந்தையும், நம்மையும் படைத்த பிரம்மாவிற்கே கைக் கூடாத காரியம். அப்படியிருக்கும் பொழுது, சாமான்ய மனிதர்களான நாம் எம்மாத்திரம் என்பதே கிருஷ்ணப்பிள்ளையின் ஆணித்தரமான வாதம். சேவலின் கூவலைக் கூட காதில் வாங்காமல் தூக்கத்தைத் தொடரலாம். ஆனால் இரவில் குழந்தை வீறிட்டு அழும் இன்னிசை அபாய ஒலி மனிதனை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பிவிட்டு விடுகிறது. முதுமையில் தூக்கம் வருவதே அரிது, அப்படியும் தன்னை மீறி கண்ணிழுக்கும் பொழுது குழந்தை கெடுத்து விடுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் தான் என்றால் கிருஷ்ணப்பிள்ளை பொறுத்திருப்பார். ஆனால் தொடர் ரோதனையாக அல்லவா உள்ளது. ஓய்வு கிடைத்த பிறகும் நிம்மதியாக தூங்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் மிகவும் சங்கடப்பட்டார். பேத்தி தான் என்றாலும் தனது சுதந்திரத்தில் தலையிடுவதாக கிருஷ்ணப்பிள்ளைக்கு பட்டது. மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவராய், முதியோர் இல்லத்திற்கு செல்லப் போவதாக தனது மகனிடம் தெரிவித்தார். ஏன் ஏனென்று இரவு பகலாக மாற்றி மாற்றி கேள்விக் கனைகளால் கிருஷ்ணப்பிள்ளையை அவரது குடும்பத்தினர் துளைத்தெடுத்து விட்டனர். சரி போகட்டும் என்று வீட்டிலேயே இருக்க சம்மதித்தால், மகள் அவரது மகனுடன் ஒரு வாரம் தங்குவதாக வந்து சேர்ந்தாள். பாஞ்சஜன்யம் என்ற கிருஷ்ணனின் சங்கை விட பலம்பொருந்திய தொண்டையை பெற்றிருந்தான் கிருஷ்ணப்பிள்ளையின் பேரன். ஒன்றிற்கு ரெண்டா என்ற திகிலுடன் தான் படுத்தார். ஆனால் அன்றைய இரவு அவர் நினைத்தது போல் மோசமில்லை. ஒரு மாபெரும் உண்மையை கண்டுபிடிக்க உதவிய அற்புத இரவாகவே அமைந்தது. ஒற்றுமைக்கு பெயர் போனவர்கள் காக்கைகள் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் என்று தான் அது நாள் வரை கிருஷ்ணப்பிள்ளை நினைத்திருந்தார். ஆனால் இரவில் ஒரு குழந்தை அழ ஆரம்பித்தவுடன், இன்னொன்றும் சேர்ந்துக் கொள்கிறது. தனது பேரனிடமும், பேத்தியிடமும் காணப்பட்ட தெய்வீக ஒற்றுமையை எண்ணி மெய் சிலிர்த்தார் கிருஷ்ணப்பிள்ளை. கடல், கடல் அலைகள், திமிங்கலம் ஏன் இந்த பிரபஞ்சத்தை விடவும் தனது பொறுமை தான் பெரிது என்ற பெருமை மட்டுமே கிருஷ்ணப்பிள்ளைக்கு மிஞ்சியது.
நவீன அறிவியலின் வழிமுறைகள்
10 மணிநேரம் முன்பு
2 கருத்துகள்:
சூப்பர் மச்சி,
பாக்கியம் ராமசாமியோட அப்புசாமியோட அடுத்த அவதாரம் தான் கிருஷ்ணப்பிள்ளையா? இது மாதிரி 5 என்ன, 500 கதை எழுதலாம். அருமை மச்சி. ஏன் திடீர்னு இப்படி சூப்பரா எழுத ஆரம்பிச்சிட்ட, வாழ்த்துக்கள்.
'வான்கோழி பாவனைகள்' தான் மனிதனின் அடையாளமோ, என்று எண்ணத் தோன்றுகிறது.
அருமை... அருமை...
குழந்தைகள் பற்றின உங்கள் பார்வை சரிதான்..
கருத்துரையிடுக