வயதானதால் கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதி அதிகமாகி விட்டதென வருவோர் போவோர்களிடம் அங்கலாய்த்து கொண்டாள் அவரது மனைவி. கிருஷ்ணப்பிள்ளைக்கு ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. 'என்ன பெருசா மறதிய கண்டுட்ட? இன்னோர் தடவ அப்படி சொன்னா பாரேன்!' என்று கிருஷ்ணப்பிள்ளை கோபித்துக் கொண்டார். 'ஆயிரந்தடவ சொல்வேன்' என்று பதில் வந்தது. நல்லவேளையாக வாக்குவாதம் முற்றி போராக மாறாமல் போட்டியில் முடிந்தது. 'நல்லா கேட்டுக்கோங்க...பச்ச மொளகா வேண்டாம். காஞ்ச மொளகா 50 கிராம் வேணும். தலைக்கு தேங்க எண்ணெய் வேணும். சமைக்கறதுக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் வேண்டாம். கொஞ்சமா வீட்டுல துவரம்பயிர் இருக்கிறதால, கடலப்பயிர் வேண்டாம். துவரம்பயிர் மட்டும் 500 கிராம் வாங்கிட்டு வாங்க. துணி தோய்க்கிற சோப்பு பெருசு ஒன்னு, குளிக்கிற சோப்பு நாலு. பெருங்காயம் சின்ன வெங்காயம் வேணாம். பெரிய வெங்காயம் கால் கிலோ. ஒரு லிட்டர் பால். குழந்தைக்கு பேபி ஷாம்பூ, சோப்பு. அப்படியே உங்களுக்கு எதாவது தேவன்னா வாங்கிட்டு வந்துடுங்க. இன்னொரு தடவ சொல்லட்டுமா?' என்று கேட்டாள் கிருஷ்ணப்பிள்ளையின் மனைவி. வீராப்பாக எதுவும் சொல்லாமல் வீம்பாக வெளியேறினார். எப்படியும் தோற்று விடுவார் என்பது கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியது எண்ணம். ஏனென்றால் முன்ன பின்ன கடைக்கு சென்று பழக்கம் இல்லாதவர். கடைக்கு செல்லும் வழியில், பலத்த யோசனையில் ஆழ்ந்தார் கிருஷ்ணப்பிள்ளை. கல்யாணமான புதிதில், அவரது மனைவி 'களத்தூர் கண்ணம்மா' என்ற புது படம் வந்திருப்பதாக சொல்லி அழைத்தாள். சமய சந்தர்ப்பங்கள் கூடி வராததால் அவளது விருப்பத்தை கிருஷ்ணப்பிள்ளையால் அன்று நிறைவேற்ற முடியாமல் போனது. கிருஷ்ணப்பிள்ளை அந்தப் படத்தின் குறுந்தகட்டினை வாங்கி தன் மனைவியின் கையில் வைத்து ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென விரும்பினார். கிருஷ்ணப்பிள்ளையின் மனைவியோட தங்கை மகள், அதே ஊரின் மற்றொரு எல்லையில் வசிக்கிறாள். அவரது மனைவிக்கு தங்கை மகளை மிகவும் பிடிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மைத்துனி மகளுக்கு மறுதினம் பிறந்த நாள் என்று ஞாபகம் வந்தது. 'கோயிலுக்கு போகலாம்' என்று கூறி, மகள் வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு போய் அசத்தலாம் என்று திட்டமிட்டுக் கொண்டார். வெறும் கையோடு போனால் நல்லாயிருக்குமா? அதனால் மைத்துனி மகளுக்கு ஒரு புடவை எடுக்க வேண்டும் என நிச்சயித்துக் கொண்டார். இப்படி யோசித்துக் கொண்டே மளிகைக் கடைக்கு வந்து சேர்ந்தார். பணம் எடுத்து வரவில்லை என்று அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. வீட்டிற்குப் போய் பணம் எடுத்தால், மனைவி வென்றதாகி விடும். அவளோ படிக்காதவள். ஞாபகம் இல்லாததையும், மறதியையும் ஒன்றென நினைத்து குழப்பிக் கொள்வாள். மளிகை கடை தெரிந்த கடை தான். வேண்டியதை சொல்லி, கடைப் பையனையே எடுத்துக் கொண்டு போய் வீட்டில் தர சொல்லலாம். மனைவியும் பணம் தந்து விடுவாள். சிறிது நேரம் பூங்காவில் ஓய்வெடுத்து விட்டு, பிறகு வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து குறுந்தகடு மற்றும் புடவையினை வாங்கிக் கொள்ளலாம் என்று நிலைமைக்கு தகுந்தவாறு யோசனையை மாற்றினார். சொன்ன பொருட்கள் எல்லாம் சொன்னப்படி வந்ததில் கிருஷ்ணப்பிள்ளையின் மனைவிக்கு மிகுந்த ஆச்சரியம். கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதியோ என்று சந்தேகப்பட்டதை எண்ணி வருந்தினாள். பூங்காவில் இருந்து வேகமாக வந்த கிருஷ்ணப்பிள்ளை, சட்டையை அவிழ்த்து விட்டு படுத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்து விட்டார். பாவம், கிருஷ்ணப்பிள்ளைக்கு குறுந்தகடு மற்றும் புடவை பற்றி மறந்து விட்டது. இல்லை..இல்லை.. ஞாபகம் இல்லாமல் போய் விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக