திங்கள், 25 பிப்ரவரி, 2008

தனிமை

ஊரே பூங்குழலி வீட்டில் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது. ஆனால் சத்யசீலன் மட்டும் தனியாய் விளக்கும் ஏற்ற மறந்து இருளில் அமர்ந்து இருந்தான். ஏமாற்றமும் அதனால் ஏற்பட்ட எரிச்சலும் சத்யசீலனை பாடாய்படுத்தியது. தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி கலைவது என்று புரியாமல் தவித்தான்.

கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது போல, சத்யசீலன் பூங்குழலிக்கு செய்த நல்லதை அவள் கெட்டதாக மாற்றி விட்டிருந்தாள். கெட்டதில் போய் முடிந்தது. பூங்குழலியை உயிருடன் கொளுத்த விரும்பிய சதிகார கூட்டத்திடம் இருந்து, தனி ஒருவனாக போராடி அவளை மீட்டான். ஆனால் பூங்குழலியோ நன்றி மறந்து, தனது முகத்தில் கரி பூசி விட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான் சத்யசீலன்.

திடீரென்று தன் பின்னால் யாரோ நிற்பது போல் சத்யசீலனிற்கு தோன்றியது. திரும்பி பார்த்த சத்யசீலனிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. குழந்தை முகம் மாறாத பதிமூன்று வயது பூங்குழலி, மன்னிப்புக் கோறும் பாவனையில் சங்கடத்துடன் சத்யசீலனை பார்த்தாள்.

"ஏன் இங்க வந்த? இங்கிருந்து போ..உன்ன பார்க்கவே பிடிக்கல.." என்று கத்தி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.

பூங்குழலி சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "அண்ணா.." என்றாள்.

"இன்னும் போகலையா நீ?"

"அண்ணா...என்னை மன்னிச்சுடுங்க. காலையில நீங்க வந்துட்டு போன பிறகு என்னை ஒரு பாழடைஞ்ச அறையில தள்ளி பூட்டிட்டாங்க. அங்க வெளிச்சமே இல்ல. என் கால் மேல எல்லாம் எலி ஏறி ஓடுச்சு. என்னுடைய துணி எல்லாம் போட்டு கொளுத்திட்டாங்க. புருஷன் போனா எல்லாம் போயிடும்னு பாட்டி கூட ஒரு தடவ சொல்லியிருக்காங்க. ரெண்டே ரெண்டு வெள்ளை புடவை மட்டும் கொடுத்து..இவ்வளவு தான்னு சொல்லிட்டாங்க. நெருப்புன்னா எனக்கு பயம். அதிலிருந்து நீங்க காப்பாத்திட்டீங்க. இருட்டுன்னாலும் பயம். அதுவும் தனியா எப்பவும் அந்த இருட்டு அறையில இருக்கனும்னு நினைக்கவே ரொம்ப பயமா இருந்துச்சு. அதனால தான் உத்திரத்தில் புடவையை சுற்றி உயிரை விட்டு விட்டேன்."

கருத்துகள் இல்லை: