வியாழன், 6 நவம்பர், 2008

தூர அதிர்ஷ்டம்

வானத்தை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். நாளைக்கு அவனது அண்ணன் மகன் ராமுவிற்கு பிறந்த நாள். கணேசனுக்கு ராமு என்றால் ரொம்ப பிடிக்கும். அவனுடைய பிறந்த நாளுக்கு சின்ன பரிசு வாங்கி கொடுக்க கூட காசில்லையே என்று நினைத்து கொன்டிருந்தான் கணேசன்.
"இந்தா கணேசா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கெல்லாம் தயாரா இரு. வேல ஒன்னு வந்திருக்கு" என்றார் முனியன்.
'என்ன வேல...திடீரென்னு!' என்பது போல் நம்பிக்கையின்றி முனியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் கணேசன்.
"மேக்கப்பட்டிக்கு மினிஸ்டர் வர இருந்தாரில்ல..அது ரத்தாகி இப்ப நம்ம ஊர்ல நடக்கப் போகுது. ஏதோ பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக நம்ம ஊர்ல மேடை அமைக்க போறாங்களாம். எப்படியோ...நமக்கு நாள பொழுது ஓடினா சரி தான்" என்றார் ஒரு வறட்டு திருப்தியுடன்.

காலை ஒன்பது மணிக்கெல்லாம் மேடை தயாராகி விட்டது. பத்து மணி வண்டியில் ஏறினால், கணேசன் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கலாம். கூலி தருபவரிடம் சென்ற பொழுது, "நைட்டு பந்தல பிரிக்கிற வரைக்கும் இருந்தா, ரெண்டு வேள சாப்பிடு இன்னுமொரு நூறு ரூபா கிடைக்குமில்ல!?" என்ற படியே கணேசனுக்கு நூற்றைம்பது ரூபாய் தந்து, இரு நூற்றைம்பது ரூபாய் தந்ததாக கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

இரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு சென்று ராமுவை பார்த்து விட்டு, மூன்றரை மணி பேருந்தில் ஏறி மீண்டும் பந்தல் பிரிக்கவும் வந்து கூலி வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவோடு பேருந்தில் ஏறினான்.

பேருந்தில் ஏறி அமர்ந்த சிறிது நேரத்தில், கணேசன் தூக்கத்தின் வாயிலாக கனவு உலகத்திற்கு சென்று விட்டான். சுமார் மூன்று மணி நேர உறக்கத்திற்கு பிறகு விழித்த பொழுது, பேருந்து போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டது தெரிந்தது. அமைச்சர் வந்து செல்லும் வரை இந்த சங்கடங்களும் தொடரும்.

ஒருவழியாக நான்கு மணி நேரத்தில் பத்து கி.மீ. தொலைவினை பேருந்து கடந்திருந்தது. இனிமேல் ஊருக்கு சென்று வந்தால் ஒருவேளை கூலி பறிப் போகுமென்று எண்ணி பேருந்திலிருந்து இறங்கி விட்டான். அருகிலிருந்த கடையில் தேநீர் அருந்தும் பொழுது, "நடக்க வேண்டிய சமயத்துல ஒண்ணு நடக்கலன்னா, அதுக்கப்பறம் அது நடக்காமலே இருக்கலாம்" என்றொரு பெரியவர் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஏதோ தோன்றியவனாக கணேசன் ஊர்ந்துக் கொண்டிருந்த பேருந்தில் நிதானமாக சென்று ஏறிக் கொண்டான். கணேசன் வீடு போய் சேர இரவு எட்டு மணி ஆகி விட்டது. ஆனால் ராமுவும் அவனது அப்பாவும் கணேசனைக் காண சென்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை: