வியாழன், 6 நவம்பர், 2008

ரெண்டு மணி நேரம் தான்

"ஏன்டா பக்கத்து தெருவுல தான் நான் இருக்கேன். எங்கள வந்து பார்க்கக் கூடாதா?"
"டைமே இல்ல மாமா."
"துரை..கலெக்டருக்கு படிக்கிறீங்களோ?"
"காலையில ஆறு மணிக்கு டியூஷன் போறேன். ஏழரை மணிக்கு வந்து அவசர அவசரமா கிளம்பி எட்டே காலுக்கு பஸ்ச பிடிக்கனும். திரும்பி நாலு மணிக்கு வீட்டுக்கு வந்து நாலரை மணி சயின்ஸ் டியூஷனுக்கு போயிட்டு அப்புறம் ஹிந்தி கிளாஸ் எல்லாம் முடிச்சுட்டு எட்டு மணிக்கு தான் திரும்பி வீட்டுக்கு வர்றேன். அப்புறம் ஹோம் ஒர்க் எழுதிட்டு, சாப்ட்டு தூங்கிடுவேன்."
"அது சரி..கலெக்டர் விட நீ பிசி தான். சரி சண்டேல வரலாம் தான?"
"அன்னிக்கு ஃபுல்லா கிரிக்கெட் பிராக்டீஸ் இருக்கு. காலை பதினொரு மணிக்கு போனா சாயந்திரம் ஆறு மணிக்கு தான் வருவேன்."
"இந்த காலத்து பசங்கெல்லாம் ரொம்ப பாவம்டா. சரி..சரி..போய் படி."
ஏதோ யோசித்தவராய் தன் தங்கையை அழைத்து, "ஏம்மா..இப்படியே படி படின்னு சொன்னா என்னம்மா ஆவறது. கொஞ்சம் ப்ரீயா விடுறதில்லையா? பாவம் பையன். என் ப்ரென்ட் ஒருத்தவன் 'யோகா' க்ளாஸ் நடத்தறான். ஞாயித்துக் கிழமை மட்டும் தான். நானே சொல்லி விடுறேன். பையன அனுப்பி வையுங்க. மைன்டுக்கு ரொம்ப நல்லது. படிக்கறதெல்லாம் அப்படியே ஞாபகமிருக்கும். உடம்புக்கும் நல்லது. என்ன..சரியா!" என்றார்.

கருத்துகள் இல்லை: