சனி, 24 நவம்பர், 2007

ஊடுருவு சக்தி-1

தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஹரிதர் மெதுவாக நவீன ஆராய்ச்சிக் கூடத்தை நோக்கி நடந்தான். இரகசிய எண்கள் கொடுத்து, ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிற் கதவை திறந்து உள்ளே சென்றான். சோப நித்திரையில் உறங்கிக் கொண்டிருந்த காளிகாவின் அருகில் போய் அமர்ந்தான்.

"என்னாச்சு?" என்று கண் திறக்காமலே கேட்டாள்.

"எல்லாம் சரியா தான் இருக்குது. நீ தான் அநாவசியமா பயப்படுற. அந்த வின் க்ரூசால்.. உன் எல்லைக்குள்ள ஊடுருவவே முடியாது."

"என்ன என் இடமுன்னு பிரிச்சு பேசுற. துணைக்கு நீ இருக்க மாட்டியா? அவனுக்கு வெறி  பிடிச்சிருக்கு. தனியா நான் என்ன பண்ணுவேன். எனக்கு ஆறுதலா இருப்பேன்னு நினைச்சேன்" என்றாள் காளிகா.

"என்னை நம்பறயில்ல.... அப்ப வீணா கவலைப்படாம இரு" என்று படுத்துக் கொண்டான்.

"எப்படி கவலைப்படாம இருக்கிறது? முன்னாடியே நிறைய பேர அடைச்சு வச்சிருக்கான். அதான் பயமா இருக்கு."

'ட்ரிட், ட்ரிட்' என சப்தத்தோடு செய்தி ஒன்று வான் வழியாக ஆராய்ச்சி கூடத்தில் நுழைந்தது. காளிகா படித்து விட்டு, ஹரிதரையும் படிக்க அழைத்தாள்.

"என்னன்னு..நீயே சொல்லு."

"வின் க்ரூசின் நடவடிக்கைகள் உலக நன்மைகளுக்கு எதிராக  தினமும் வலுப்பதால் , அவனைக் கொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அவனால்  ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால், உடனடியாக தலைமை குழுவிற்கு தெரியப்படுத்தவும். உங்களால் அவன் கொல்லப்பட்டாலும், தலைமைக் குழு இவ்விஷயத்தில் அக்கறைக் காட்டாது என்பதை உறுதிப்படுத்துகிறோம்."

"இப்ப தான் எனக்கு நிம்மதி" என்று மகிழ்ந்தான் ஹரிதர். ஆனால் காளிகாவின் முகம் வாடியது.

"ஏன் இப்படி பண்றாங்க? வின் க்ரூஸ்  எவ்வளவு பெரிய ஜீனியஸ்! எவ்வளவு நல்லது செஞ்சான், தலைமைக் குழு எல்லாத்தையும் மறந்துட்டாங்களா? அவன கைது பண்ணா போதாதா!" என்று வருத்தப்பட்டாள்.

"நீ வின் க்ரூசை பார்த்திருக்கியா?" என்று கேட்டான் ஹரிதர்.

"இல்ல. ஆனா அவனோட 'தி ஹ்யூமன்ஸ் இன் தி வெர்ல்டு(The Humans in the World)' புக்க படிச்சிருக்கேன். நீங்க படிச்சிருக்கீங்களா? எவ்வளவு அருமையான புக் தெரியுமா? பாவம்..அநியாயமா இப்படி கொல்ல சொல்லிட்டாங்களே!" என்று கேட்டாள் காளிகா.

"நீ ஏன் வீணா கவலைப்படுற? அவன் செத்து அஞ்சு வருஷம் ஆச்சு."

"என்ன உளர்ற?"

ஹரிதர் எதுவும் பேசாமல் தன்னுடைய 'பாம் டாப்(Palm Top)' எடுத்து சில படங்களை காண்பித்தான். அதில் ஹரிதரும், வின் க்ரூசும் ஒன்றாக இருந்தனர்.

"நாங்க இரண்டு பேரும் சின்ன வயசிலிருந்தே ப்ரென்ட்ஸ். எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னா தான் சுத்துவோம். எட்டு வருஷத்துக்கு முன்னாடி, உலகை ஆள துடிக்குதுன்னு ரோபோவை எல்லாம் அழிக்க சொல்லி தலைமைக் குழுவுல இருந்து உத்தரவு வந்தது. ஆனா வின் க்ரூஸ் ஆசையா, அவனை மாதிரியே தயாரிச்ச ரோபோவை அழிக்காம மறைச்சான். இந்த உண்மை இன்னும் ரெண்டு  பேருக்கு தான் தெரியும்.  ஒன்னு நானு, இன்னொன்னு மான்ட்லே..வின் க்ரூசோட அசிஸ்டன்ட். திடீரென்னு, ஒரு நாள் வந்து நான் ரோபோவை அழிச்சுட்டேன்னு சொன்னான். எனக்கு புரிஞ்சிடிச்சு... அழிந்தது ரோபோ இல்ல வின் க்ரூஸ் தான்னு. இப்ப நீங்க சொல்ற வின் க்ரூஸ் அந்த ரோபோ தான். அது மான்ட்லே கட்டுப்பாடுல இருக்குது."

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு, "வரட்டும். ரோபோவுக்கு நாம யாருன்னு காட்டலாம்" என்றாள் காளிகா.

"உங்க ப்ரென்ட் அவரு புக்குல எழுதி இருப்பதெல்லாம் உண்மையா? கடல், குளம், பச்சை பசேல் பிரதேசம், பனி மலை அப்புறம் குறிப்பா வழவழப்பான தோல் கொண்ட பொண்ணுங்க, மழை இதெல்லாம்  கற்பனை தானே? இலட்சக்கணக்கான ஜீவராசிங்க, கோடிக்கணக்கான மக்கள்...அவங்களுக்குள்ள ஏகப்பட்ட பிரிவு..சண்டை..கல்யானம்..இன்னும் நிறைய எழுதியிருக்காரு . படிக்கிறதுக்கு நல்லா இருந்துச்சு. ஆனா நம்ப தான் முடியல" என்றாள் காளிகா. 

இதையெல்லாம் கேட்ட ஹரிதர் சிரித்து விட்டு, "ஓ.பி.* 1234ல் வாழுற உலகர்களான(Worlans)  நமக்கு ஓ.மு.*வில் வாழ்ந்த மனிதர்களை பத்தி சொன்னா நம்ப முடியாது தான். மனிதர்கள் தான் நம்ம முன்னோர்கள்னு நீ நம்பற இல்ல!" என்று கேட்டான் ஹரிதர்.

"நம்புறேன் ஆனா...அவங்களுக்கு மட்டும் ஏன் தோல் மென்மையா இருந்துச்சு?" என்று கேட்டாள்.

"ஏன்னா மனிதர்கள் வாழ்ந்தப்ப யூ.வி. கதிர்கள் இல்ல. நம்மள மாதிரி அவங்களால அந்த கதிர்களை தாங்க முடியாது. அதனால தான் அழிஞ்சுட்டாங்க. நாம அவங்கள விட அறிவு, உடல் வலிமையில பல மடங்கு முன்னேறிட்டோம். இது இயற்கை நமக்கு கொடுத்த பரிணாம பரிசு" எனறு ஹரிதர் சொல்லும் பொழுதே ரேடார் சிக்னல் ஒலித்தது.

"ஐயையோ...ரோபோ வந்துடிச்சு போலிருக்கு."

*ஓ.பி. ஓசோன் அழிவிற்குப் பின் (A.O. After Ozone destruction)
*ஓ.மு. ஓசோன் அழிவிற்கு முன் (B.O. Before Ozone destruction).

கருத்துகள் இல்லை: