வெள்ளி, 30 நவம்பர், 2007

மிர்சி

டாண்ட்டன் மிக சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தான். மனைவியும், குழந்தையும் விபத்தில் இறந்ததிலிருந்து உயிர் வாழ்வதிலியே விருப்பமின்றி அலைந்தான். இருந்த வேலையையும் தூக்கி எறிந்து விட்டு வந்து விட்டான். இனி அடுத்து என்னவென்று யோசித்த பொழுது தான் 'க்ரீன் ப்ளனட்(Green Planet)' கம்பெனி பற்றி ஞாபகம் வந்தது. எதற்கும் முயன்று பார்ப்போம்  என்று நம்பிக்கை இல்லாமல் தான் போனான். இவனை உட்கார வைத்து விட்டு அனைவரும் அவரவர் வேலையைப் பார்த்தனர்.

"உங்க பெயர் டாண்ட்டன். வயது 38. பதினாறு வருஷம் ஏர் ஃபோர்சுல வேலைப் பார்த்திருக்கீங்க. அங்க வேலை செஞ்ச டாக்டரையே காதலிச்சு கல்யானம் பண்ணிக்கிட்டீங்க. சமீபமா அவங்களும், உங்க குழந்தையும் ஆக்சிடென்ட்டுல இறந்துட்டாங்க. மனசு ஓடிஞ்சு போய் வேலைய விட்டுட்டீங்க. சாரி, இந்த இன்ஃபர்மேஷனெல்லாம் கலெக்ட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் அயிடிச்சு. உள்ள போய் சார நீங்க பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட்."

ஒரு வழியாக பல சுற்றுகளுக்கு பின், டாண்ட்டனுக்கு அந்த வேலை கிடைத்து விட்டது.  இருபது மாத பயிற்சிகளுக்குப் பிறகு, விண்கூடத்தை தனியாக இயக்குமளவு தேர்ந்திருந்தான் டாண்ட்டன். ஒருமுறை சென்று பூமி திரும்ப, எட்டு வருடங்கள் ஆகும். அந்த ஒரு காரணத்திற்காகவே அந்த வேலையில் விரும்பி சேர்ந்தான்.

உலகில் மக்கள் தொகை அதிகளவு பெருகியதால், கூடவே குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்து பெருகியது. அதை எப்படி எதிர் கொள்வதென புரியாமல் உலக நாடுகள் தவித்த பொழுது, க்ரீன் டர்னர் எனும் தொழிலதிபர் தனது க்ரீன் ப்ளனட் கம்பெனி மூலம் தீர்வு ஒன்றினை முன் வைத்தார். அவரது அறிக்கையின் படி, அனைத்து நாட்டு கழிவுகளையும் ஒரு தீவில் ஒன்றாக சேகரித்து அதை விண்வெளிக்கு கொண்டு சென்று ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில்(Orbit) விட்டு விடுவது. கழிவுகள் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். சூரிய குடும்பத்தின் எல்லையில் இருக்கும் ப்ளூட்டோவின் சுற்றுப் பாதை சரியாக இருக்குமெனவும் குறிப்பிட்டிருந்தார். வில்டன் என்ற விஞ்ஞானியை தவிர அனைவரும் டர்னருக்கு பச்சைக் கொடி காட்டினர்.

"சரி, க்ரீன் ப்ளனட்ட மூடிட்டா இந்த பிரச்சனையை எப்படி சரி பண்றது?" என்று நிருபர் கேட்டதற்கு, "எல்லாவற்றையும் நிறுத்துட்டு மீண்டும் பழைய படி ஏர் கலப்பையை தூக்க வேன்டியது தான்" என்றார் வில்டன்.   உலகம் சிரித்து விட்டு க்ரீன் டர்னரை ஊக்குவித்தது. இதுவரை பத்து வருடங்களில் ஏழு விண்கூடம் கழிவுகளோடு சென்றுள்ளது. அதில் இரண்டு திரும்பியும் விட்டது. அனைத்து விண் கூடம் கிளம்பும் முன்னும், வில்டன் அதில் செல்லவிருக்கும் நபரை தனியாக சந்தித்து பேசுவார். ஆனால் அவர் முயற்சிகள் அனைத்தும் தோல்வி தான் அடைந்தது. டாண்ட்டனிடமும் பேசி தோல்வி தான் சந்தித்தார்.

தனிமை விரும்பிய டாண்ட்டனுக்கு, எட்டு வருடங்கள் உலகை விட்டு பிரிவது ஆறுதலாக இருந்தது. கோடிக்கனக்கான எடையுள்ள இரசாயன மற்றும் மின் கழிவுகளோடு தனியாக புறப்பட்டான்.

மூன்றாம் வருட பயணத்தின் பொழுது, விண் கூடத்தில் ஏதோ மோதியது போலிருந்தது. மிக கவனமாக என்னவென்று ஆராய்ந்த பொழுது, இராட்ஷச சிறகுகள் கொண்ட பறவை போன்ற உருவம் தெரிந்தது. இது முதலில் மன பிரமையோ என்று நினைத்தான். மீண்டும் நான்கு வாரங்களுக்கு பிறகு அதே போல் ஒரு உருவம் மோதியது. சில தினங்களுக்குப் பிறகு, ஒரு சிறிய விமானம் போன்ற வாகனம் அவனது விண் கூடத்தை கடந்து வேகமாக சென்றது. சிறிது நேரம் யோசித்து விட்டு, விண் கூடத்தை தானியங்கி முறையில்(automatic mode)  வைத்து விட்டு விண் படகில்(space boat) அந்த வாகனத்தைத் தொடர்ந்தான். அந்த வாகனம் சிறு கிரகம்(asteroid) ஒன்றில் தரை இறங்கியது. அதில் சென்ற உருவம், அந்த கிரகத்தில் இறந்து கிடந்த இன்னொரு உருவத்தை நோக்கி சென்றது. பின்னாலேயே சென்ற டாண்ட்டன் அந்த இரு உருவங்களையும் பார்த்து அதிசயித்தான். மனிதனுக்கும், மிருகத்துக்கும் இடைப்பட்ட உருவத்தை பெற்றிருந்தனர். கீழே படுத்திருந்த உருவம் தனது மகள் மிர்சியை போல தோற்றமளித்தது. ஒரு இறந்த இராட்ஷச பறவை வானில் இருந்து வீழ்ந்தது. அதன் வாயில் உடைந்த இயந்திரத்தின் பொருள் போல் ஏதோ இருந்தது. பூமியில் இருந்த வந்த கழிவுகளில் ஒன்றாய் இருக்கலாம். இன்னும் பல வாகனங்கள் அக்கிரகத்திற்கு வருவது போலிருந்தது. பயத்தில் வின் கூடத்திற்கு வேகமாக சென்றான்.

'இது பிரமையா! இல்ல உண்மையா? தனியா மூனு வருஷமா இருக்கிறதால மூளை குழம்பி விட்டதா? ஒருவேள வில்டன் சொன்னதெல்லாம் சரி தானா!? இல்ல அவரு சொன்னதையே நினைச்சுக்கிட்டு இருந்ததால் எனக்கு இப்படி தோனுதோ?' என பலவாறு பார்த்ததை நம்பாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

"இந்த பிரபஞ்சத்துல எல்லா பொருளும் ஒரு ஒழுங்கோட இயங்கிகிட்டிருக்கு. அதுல போய் நாம தலையிட்டா ஏதாவது பிரச்சனை வரும். அந்த பிரச்சனையால பூமிக்கு எந்த நஷ்டமும் இல்ல. பூமிய தவிர வேற எங்கயும் உயிர் இல்லன்னு சொல்றாங்க...ஆனா நிருபிக்கல. நிருபிக்காத பட்சத்துல இது தப்பான செயலா எனக்குப் படுது" என்று காட்டுவாசி போல இயற்கை உடை அணிந்திருந்த வில்டன் சொன்னது எல்லாம் டாண்ட்டனுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது.

எட்டு வருடங்களுக்கு பின் வர வேண்டிய செய்தி, டாண்ட்டனிடமிருந்து ஆறாம் வருட முடிவிலேயே வந்தது. விண் கூடம் செயல் இழந்து விட்டதாகவும், கட்டுப்பாடுன்றி பூமியை நோக்கி வேகமாக வருவதாகவும் செய்தி அனுப்பி இருந்தான் டாண்ட்டன். அதன் பாதையை மாற்றி வேறு எங்காவது செலுத்துமாறு டாண்ட்டனுக்கு வந்த அறிவிப்பிற்கு, தன்னால் முடியவில்லை என்று பதிலளித்தான். உடனடியாக மீட்புக் குழு ஒன்றினை பூமியில் இருந்து அனுப்பி வைத்தனர். கட்டுப்பாடு இழந்த விண் கூடத்தினுள் நுழைய மீட்புக் குழுவால் முடியவில்லை. எல்லாவற்றையும் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்த க்ரீன் டர்னர், மீட்புக் குழு கை விட்டவுடன் இராணுவத்தை அனுகி வழியிலேயே அதை தாக்க ஏற்பாடு செய்தார். இராணுவத்தின் அலட்சியத்தால் விண்கூடம் மிக வேகமாக பூமியை நோக்கி சென்று கொண்டிருந்தது. விண் கூடம் பூமியின் எந்த இடத்திலும் விழலாம் என்று பரபரப்பு நிலவியது.

"கடல்ல விண் கூடத்த மூழ்கடிக்க முடியுமா?" என்று பூமியில் இருந்து கேட்டனர்.

"எனக்கு என்னமோ தீவ நோக்கி தான் விண் கூடம் வர மாதிரி இருக்கு. உடனடியாக தீவ காலி பண்ணுங்க. நான் முடிந்த வரை அதை கடலில் மூழ்கடிக்க முயலுகிறேன்" என்று அறிவித்தான் டாண்ட்டன்.

"சரி முடியலைன்னா....நீங்களாவது தப்பியுங்க."

க்ரீன் டர்னர் மிக சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தார். பல பில்லியன் செலவு செய்து உருவாக்கிய தங்க முட்டை இடும் தீவு அழிவதை மிகுந்த வருத்தத்துடன் பார்த்தார் க்ரீன் டர்னர். மீட்புக் குழு மற்றும் இராணுவத்தை சாமர்த்தியமாக ஏமாற்றிய டாண்ட்டன், இனி பிரபஞ்சத்துல யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என மகிழ்ச்சியாக கழிவுகளோடு சேர்ந்து தீவில் எரிந்தான்.

Blogged with Flock

கருத்துகள் இல்லை: