புதன், 21 நவம்பர், 2007

கெளசி

கரண் வீட்டுக்குள் நுழையும் பொழுது, கெளசல்யாவும் கிஷோரும் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். கரண் வந்ததையும் கூட இருவரும் கவனிக்கவில்லை. அவர்கள் இருவரின் முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்த கரண் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். சாய்வு நாற்காலியில் அமர்ந்து செய்தி தாளைப் புரட்ட ஆரம்பித்தான். இது அவனக்கு மிக பிடித்தமான அன்றாட செயல் அல்லது பொழுதுப் போக்கு என்று கூட சொல்லலாம்.

"எங்கடா வச்ச? சரி, காலையில் கிடைச்சுடும். சாப்பிடலாம் வா" என்றவள் கரணைப் பார்த்து விட்டு, "நீங்க எப்ப வந்தீங்க?" என்று கேட்டாள் கெளசல்யா.

"என்ன தேடுறீங்க?"

"என் ரஃப் நோட்ட காணோம்" என்று விசும்பினான் கிஷோர்.

"ரஃப் நோட்டுக்கா...இவ்வளவு டென்ஷன்!"

"அதுல அவன் வரைஞ்ச படம் எல்லாம் இருக்காம்."

காலையில் கிஷோர் எழுந்ததும் அவன் தேடியதை கையில் வைத்தாள் கெளசல்யா. கரணும், கிஷோரும் எதையாவது தினமும் தேடிக் கொண்டேயிருப்பனர். கெளசல்யாவிற்கு இவர்கள் தொலைத்ததை தேடுவதற்கே நேரம் சரியாக இருந்தது.

இரவு பதினொரு மணிக்கு, கரண் எழுந்த பொழுது கெளசல்யாவை காணவில்லை. சமையலறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. தன் மனைவியின் கைப்பையை அவளுக்கு தெரியாமல் ஆராய்வதில், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான் கரண். ஏனென்றால் கெளசல்யாவிற்கு தன் கைப்பையை யார் தொட்டாலும் பிடிக்காது. கெளசல்யா வருவதற்கு முன் கைப்பையை ஆராய்ந்து விட்டு, சமையலறைக்கு சென்றான். கெளசல்யாவின் தேம்பலை கேட்டு, சமையலறை வாசலிலேயே மறைந்து நின்றான்.உதட்டுக்கு பூசும் சிறு வண்ண சாயக் குப்பி(lipstick) ஒன்று உடைந்திருந்தது. கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்து விட்டு , தரையை சுத்தம் செய்தாள். கெளசல்யாவின் வினோதமான செயலைக் கண்டு வியந்தான் கரண். அழுதுக் கொண்டிருக்கும் அவளை எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாமென படுத்துக் கொண்டான்.

காலையில் அலுவலகம் செல்லும் வழியில், கரணிடம் வண்டியை நிறுத்த சொல்லி அவசரமாக போய் ஒரு புது சாயக் குப்பியை வாங்கி வந்தாள்.

'ஏன் உடைக்கனும்?...ஏன் இப்ப இவ்வளவு அவசரமா வாங்கனும்?'

மாலை வந்தவுடன், கெளசல்யாவின் கைப்பையில் சாயக் குப்பி இருக்கிறதா என்று சோதித்தான். ஆனால், சாயக் குப்பிக்கு பதிலாக பேப்பர் வெயிட் ஒன்றிருந்தது. நேற்றிரவு அழுததைப் பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று மிகவும் யோசித்தான் கரண்.

'என்ன பிரச்சன்னையாக இருக்கும்? எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்னு நினைக்கிறாளோ!'

பலமுறை யோசித்து விட்டு, மனோதத்துவ நிபுனரை ஒருவரை சந்திக்க சென்றான். எல்லாவற்றையும் கேட்டு விட்டு,"உங்க மனைவிய பார்க்காம எந்த முடிவுக்கும் வர முடியாதே!" என்றார் மருத்துவர்.

"அதில்ல சார்.. சின்ன சின்ன விஷயத்தையெல்லாம் நான் பெரிசு படுத்தறனோன்னு சந்தேகமா இருக்கு" என்றான் கரன்.

சிறிது நேரம் மெளனத்திற்குப் பின், "அடிக்கடி உங்க மனைவி கோபப்படுவாங்களா? சாதாரன விஷயத்துக்கெல்லாம் டென்ஷன் ஆகி கத்துவாங்களா?" என்று கேட்டார்.

"அதெல்லாம் இல்ல சார்."

"உங்களுக்குள்ள சண்டை நிறைய வருமோ?"

"ரொம்ப சாஃப்ட் டைப் சார். அதிர்ந்து கூட பேச மாட்டா."

"அவங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே பொண்ணா ?" என்று கேட்டார் மருத்துவர்.

"ஆமாம். ரொம்ப பாசமா இருப்பாங்க. இரண்டு பேரும் வேலைக்கு போறதால ஹாஸ்டலுல விட்டிருந்தாங்க. அதனால இன்னும் பாசமா இருப்பாங்க. அவளுக்கு அவங்க ஒரு குறையும் வச்சதில்ல."

"ஓ! அது சரி, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா?"

"ரொம்ப சந்தோஷமா தான் சார் இருக்கோம்" என்றான் கரண்.

"சண்டை வராததாலோ, சிரிச்சு பேசறதாலோ நீங்க சந்தோஷமா இருக்கிறதா சொல்ல முடியாது. உங்கள மாதிரி ஆளுங்ககிட்ட இருக்கிற பிரச்சனையே, கூடவே இருப்பீங்களே தவிர அவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரியாது. எப்பவும் மெட்டீரியலிஸ்டிக்காவே பேசிக்கிறது.

பொதுவா ஹாஸ்டலுல இருந்தவங்களுக்கு க்ளெப்டோமேனியா(kleptomania) வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. எல்லோரும் இருந்தாலும், தனக்கு யாருமே இல்லன்னு நினைச்சிப்பாங்க. இந்த மாதிரி ஏக்கம் வரும் பொழுதெல்லாம், மன அழுத்தம் அதிகமாகும். அந்த சமயத்துல, ஏதாவது ஒரு அற்பமான பொருள திருடிக்குவாங்க. பேனா, பென்சில், லிப்ஸ்டிக் அப்புறம் பேப்பர் வெயிட் இப்படி ஏதாவது எடுத்த பிறகு தான் அவங்க மனம் சமாதானம் ஆகும். இது திருட்டு இல்ல. சரியா சொல்லனும்னா, அவங்கள சுத்தியிருக்கிறவங்களோட அக்கறையின்மை. அவங்கள ஆறுதலா, அவங்க மனம் திருப்தியடையுற மாதிரி ட்ரீட் பண்ணாலே போதும். தானா இந்த பழக்கம் மறைஞ்சுடும்.

உங்க மனைவி தான் இப்படி திருடுறோம்னு நினைச்சு வருத்தப்படுறாங்கன்னு நினைக்கிறேன். அதனால தான் அழுவுறாங்க. நீங்க சொன்ன லிப் ஸ்டிக் கூட அப்படி தான் திருடி, அந்த வருத்தத்துல உடைச்சு, எடுத்த இடத்திலேயே வைக்க புதுசு வாங்கியிருக்காங்க" என்று சொல்லி விட்டு, "இதெல்லாம் ஒரு அசம்ப்ஷன் தான். வேறு ஏதாவது பிரச்சன்னையா இருந்தா நேர்ல கூட்டிட்டு வாங்க. பார்க்கலாம்" என்றார் மருத்துவர்.

இந்த பிரச்சனையினை எப்படி அனுகலாம் என்று யோசித்தான் கரண். அலுவலுக நேரம் முடிய பத்து நிமிடங்கள் இருந்த பொழுது, கெளசல்யாவின் பெயரிற்கு பூங்கொத்து ஒன்று அனுப்பி வைத்தான். கூடவே, 'உன்னையும், உன் அன்பையும் எதிர்நோக்குபவன்' என்று குறிப்பும் இருந்தது.

கெளசல்யாவின் மேஜை மேலிருந்த தரை வழி தொலைப்பேசி ஒலித்தது.

"மேடம், பொக்கே கிடைச்சுதுங்களா? உங்களுக்காக உங்க ஆபீஸ் வாசல்ல காத்திருக்கேன்" என்று குரல் மாற்றி பேசி விட்டு அழைப்பை துண்டித்தான் கரண்.

'வர்றேன்டா' என்று மனதில் நினைத்துக் கொண்டே கிளம்பினாள் கெளசல்யா. அலுவலக வாசலில் கரண் வண்டியோடு நின்று கொண்டிருந்தான்.
"போலாமா கெளசி."

"இல்ல..நீங்க போங்க. எனக்கு ஒருத்தவன் பொக்கே கொடுத்தான். அவன் முகத்த பார்த்துட்டு வர்றேன்."

"அதான் தினமும் பார்க்கிறீயே!"

"நீங்களா போன் பண்ணீங்க?"

"அது சரி. உன்ன ஏமாத்துறதுக்கு ஒரு கர்சீப் போதும் போல இருக்கு!" என்று கேட்டான் கரண். கெளசல்யா சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறினாள்.

சாய்வு நாற்காலியில் அமருவதற்கு பதிலாக சமையலறை கட்டில் சாய்ந்து, கெளசல்யாவுடன் பேசிக் கொண்டே செய்தி தாள் படித்தான். தாயின் முகத்தை தேடும் சிறு குழந்தை போல, கெளசல்யாவையே சுற்றி வந்தான் கரண். இரவில் தூங்கும் பொழுது கூட, கெளசல்யாவின் கையை இறுக பிடித்துக் கொண்டு தான் தூங்கினான் கரண். எப்பொழுதும் கெளசல்யாவை தனியாகவே விடுவதில்லை கரண்.

"என்னை ஆபீஸ்ல எல்லாம் கிண்டல் பண்றாங்க. என்ன செஞ்ச? உன் புருஷன் இப்படி உன்னையே சுத்தி வர்றாருன்னு கேட்கிறாங்க."

"அதுங்க கிடக்குதுங்க."

"என்னது அதுங்களா!" என்று சிரித்தாள்.

"கெளசி..உனக்கு ஏதாவது நிறைவேறாத ஆசை இருக்கா?"

"இல்ல."

"ப்ச்...சும்மா சொல்லு."

கெளசல்யா யோசித்து விட்டு, "நான் பைக் ஓட்ட கத்துக்கிட்டு, உங்கள பின்னாடி வச்சு ஓட்டனும்" என்று கண் சிமிட்டி புன்னகைத்தாள்.