வெள்ளி, 30 நவம்பர், 2007

வலது கை

"நீ வேலைக்குப் போய் தான் ஆக வேண்டுமா?" என்று கையை தொட்டு பார்த்து கேட்டான்.
"வேறு என்ன செய்வது?"
"ஏன் நேற்றே நீ ஓய்வு சொல்லவில்லை?"
"சொன்னேன். ஆனால் மறுத்து விட்டார்கள்."
"சரி. நான் சொல்கிறேன் நீ போக வேண்டாம்."
"இன்று அரசவையில் முக்கிய அரசியல் சந்திப்பு நிகழ்கிறது. நான் போகாமல் எப்படி வேலை நடக்கும்? நான் அரசரின் வலது கை ஆயிற்றே!"
மிகவும் யோசித்து விட்டு, "உனக்கு காய்ச்சல் அதிகமாக உள்ளது. நீ சோர்ந்து போய் விழுந்து விடுவாய். உன் வேடத்தில் நான் வேண்டுமானால் போகிறேன்" என்றான்.
"என் வேடத்திலா.....!!"
"ஏன் சிரிக்கிறாய்?"
"மாட்டினால் முதுகு தோலை உரித்து விடுவார்கள்."
"அதையும் பார்த்து விட்டால் போச்சு" என்றான் கம்பீரமாக.

பல நாட்களாக போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில், பக்கத்து நாட்டு அரசன் சமாதானத்திற்கு தூது அனுப்பியிருந்தான். தூதுவரை இரத்தின கம்பளம் விரித்து, இராஜ மரியாதையுடன் உபசரித்தார்கள். அரசவையில் தூதுவருக்கு ப்ரத்யேகமாக சிறப்பு ஆசனம் அமைத்தனர்.
"எங்கள் அவை புலவர் தங்களை சிறப்பித்து இயற்றிய அருட்சுவை பாக்கள்" என்று ஓலையை பவ்யமாக குனிந்தவாறே அரியனை ஏறி மன்னரிடம் நீட்டினான் தூதுவன். மன்னர் முகமலர்ச்சியோடு ஓலையை வாங்கி கண்ணை மூடி நெற்றியில் ஒற்றும் பொழுது, தூதுவன் இடையில் வைத்திருந்த குறுவாளை எடுத்தான். மன்னர் கண் திறக்கும் பொழுது, அரியனையிலிருந்து கீழே விழுந்திருந்த தூதுவனின் நெற்றி பிளவுப்பட்டு இரத்தம் வழிந்தது. அவன் கையில் குறுவாளும், தரையில் சாமரமும் இருந்தது. சாமரத்தின் கனமான பிடி தூதுவனின் நெற்றியைத் தாக்கியிருந்தது.
கீழே விழுந்த தூதுவன், மீண்டும் வெறி கொண்டது போல எழுந்து குறுவாளை வீச எத்தனிக்கும் பொழுது அவனது கையில் சிறு கத்தி ஒன்று ஆழமாக பாய்ந்தது. அதற்குள் வீரர்கள் தூதுவனை சூழ்ந்துக் கொண்டனர்.
"ஆட்டின் வேடத்தில் நரி, மானின் வேடத்தில் புலி" என்று சிரித்து விட்டு, "யார் நீ?" என்று வலப் பக்கம் திரும்பி சாமரம் வீசும் பெண்ணைப் பார்த்துக் கேட்டார் மன்னர். அவள் தான் சாமரத்தாலும், கத்தியாலும் தூதுவனைத் தாக்கியவள்.
தரையை நோக்கியவாறே, "மன்னிக்க வேண்டும் மன்னா.... நான் நமது நாட்டு படையில் சேவகம் புரியும் ஒரு காலாட் படை வீரன். என் மனைவிக்கு உடல் சுகமில்லாததால் நான் அவள் வேடமணிந்து வந்தேன்" என்று சாமரம் வீசும் பெண் வேடத்தில் இருந்தவன் சொன்னான்.
"மனைவி மேல் அவ்வளவு பிரியமா?" என்று மன்னர் கை தட்டி சிரித்து விட்டு, "என் உயிரை நீ காப்பாற்றியதால், உனக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்" என்றார்.
"மன்னியுங்கள் மன்னா...நான் என் கடமையை தான் செய்தேன்" என்றான் குனிந்த தலை நிமிராமல்.
"அப்படியா! சரி, கடமையை சரியாக செய்ததற்கு பரிசு தர விரும்பிகிறேன். உனக்கு வேண்டியதைக் கேள்."
"எனக்கு எதுவும் வேண்டாம் மன்னா. பரம்பரைத் தொழில் என்று என் மனைவிக்கு பழக்கமில்லாத சாமரம் வீசும் வேலையை அரண்மனை மேற்பார்வையாளர் அளித்து விட்டார். பலவீனமான கையுடைய அவள், இந்த வேலையால் மிக சிரமப்படுகிறாள். அதனால் அவளை வேறு வேலையில் மாற்றினால்...." என்று இழுத்தி நிறுத்தி விட்டான்.
மன்னர் சிரித்து விட்டு, "சரி உடல் சரியானவுடன் உன் மனைவியை, இராணியை வந்து பார்க்கச் சொல். இன்று முதல் நீ குதிரைப் படை வீரன். எந்த நேரத்திலும் என்னைப் பார்த்து தயங்காமல் எது வேண்டுமானாலும் கேட்கலாம்" என்று தனது வலது கையால் அவன் தோளை ஊக்குவிப்பது போல் தட்டினார்.
"எதற்கும் நீ முதலில் சென்று இந்த வேடத்தை கலைத்து விட்டு வா. என் மனைவியின் ஒற்றர்கள் தவறான செய்தி அளித்து விட போகின்றனர்."


Blogged with Flock

கருத்துகள் இல்லை: