செவ்வாய், 20 நவம்பர், 2007

புதிர் கோணங்கள்

ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள்.

யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள்.பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள்.இறைவன் அழகிலும் குறை வைக்கவில்லை. கால் நூற்றாண்டை நெருங்கும் வயது இருக்கும்.

எதிர் வீட்டு மாடியில் விளக்கு இரண்டு முறை ஒளிர்ந்து, மீண்டும் காரிருள் பரப்பியது. இதைக் கண்ட லிண்டாவின் முகம் பிரகாசித்தது. லிண்டா கையுறையை தேடி அணிந்து, பனி படர்ந்த இருளில் இறங்கி நடந்தாள். எதிர் வீட்டில் இருந்து பதுங்கி வந்த உருவம் லிண்டாவை இறுக கட்டி பிடித்துக் கொண்டது.
"ஸ்வீட்டி...இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க."
"இன்னிக்கு மட்டும் தானா?" என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் லிண்டா.
"என்னிக்கும் என் தேவதை அழகு தான். ஆனா இன்னிக்கு பேரழுகு."
"சரி, சரி போதும். எல்லாம் வந்துட்டிருப்பாங்க. நாம தான் கடைசியா போகப் போறோம்."
"முகமூடி எடுத்துட்டு வந்தியா?"
"மறப்பனா!!" என்று கேட்டாள் லிண்டா.
இருவரும் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தனர். ஒருவர் கையை ஒருவர் இணைத்துக் கொண்டு, குளிருக்கு அடக்கமாக ஒட்டியபடி நடந்தனர். நட்சத்திர மதிப்பு வாய்ந்த ஹோட்டல் பின்புறம் சென்றனர். முத்தமிட்டுக் கொண்டே, முகமூடியை எடுத்து அணிந்தனர். ஹோட்டலின் பின்புற கதவை திறந்துக் கொண்டு, மெதுவாக சமையலறையைக் கடந்து நடு ஹாலிற்கு வந்தனர். ரம்மியமான மெல்லிசையின் பின்னணியில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தியின் ஒளியில் புதிய உலகம் ஒன்று உருவாகி இருந்தது. முகமூடி அணிந்த பலர் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தனர். இரவு மணி பன்னிரெண்டு முடிந்து அரை மணி நேரம் தான் கழிந்திருந்தது.ஆடி ஆடி களைத்தவர்கள் அங்கங்கே வைக்கப்பட்டிருந்த மது பான அரங்குகளில் பணம் செலுத்தி பானம் வாங்கி பருகினர்.
நாற்பதை தொட்ட ஜெனிஃபருக்கு மூச்சு வாங்கியது. தள்ளாடியபடியே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
"இதுங்க அடிக்கிற கூத்த கண்ணால பார்க்க முடியில. எங்கம்மாவுக்கு மட்டும் உடம்பு சரியா இருந்தா இந்த வேலையை என்னிக்கோ விட்டிருப்பேன். சமூகத்துக்கு விரோதமா இங்க நடக்கிறத அரசும் கண்டுக்கறதில்ல. எங்கிட்ட மட்டும் அதிகாரம் இருந்துச்சுன்னா, எல்லார் முகமூடியும் அவிழ்த்துட்டு பகல்ல ரோட்டுல ஓட விடுவேன்" என்று பொறிந்து தள்ளினான் க்ரூக்ஸ்.
"மெதுவா பேசு. பார்க்கிற வேலையும் போயிடும். யார் எப்படி போன நமக்கென்ன? பணம் ஒழுங்கா வருதான்னு பாரு. அம்மாவுக்கு மருந்து வாங்கனுமில்ல!" என்று க்ரூக்சுடன் அரங்கில் நின்றிருந்த ஹென்றி கேட்டான்.
"ச்சே...இந்த அரசாங்க அதிகாரி எல்லாம் என்ன பண்றாங்க?"
"மெதுவா பேசு. அவங்களும் இங்க தான் இருப்பாங்க. ஏன் முகமூடி போட்டிருக்காங்கன்னு தெரியல? தடுக்க வேண்டிய அவங்களும் இங்க தான் இருப்பாங்க."
"உடம்புல போட்டிருக்கிற துணி அவிழ்ந்தா கூட கவலைப் படமாட்டாங்க. ஆனா முகமூடி மட்டும் அவிழாமா கவனமாக பார்த்துப்பாங்க" என்று சிரித்தான் க்ரூக்ஸ்.
"எக்ஸ்க்யூஸ் மீ. ரெண்டு க்ரேப்ஸ்" என்றாள் லிண்டா.
லிண்டாவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான் க்ரூக்ஸ். ஹென்றி லிண்டாவின் வேன்டுகோளை ஏற்றான்.
"இன்னிக்கு நான் ஏன் லேட்னு நீ கேட்கவே இல்லையே?" என்று லிண்டாவின் முதுகை தொட்டாள் ஜெனிஃபர்.
"உங்க புருஷன் எப்பவும் போல குடிச்சுட்டு வந்து பிரச்சனை பண்ணியிருப்பார்" என்றாள் லிண்டா.
"அவன் கிடக்கிறான். என் பொண்ணுக்கு உடம்பு சரியில்ல."
க்ரூக்ஸ் முகமூடி அணிந்த இருவரையும் கண்களால் அலசிக் கொண்டிருந்தான். லிண்டா இரண்டு டம்ளர்களை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
"ஹலோ..மீதி பணத்த வாங்கின்னு போங்க" என்று கை தட்டினான் க்ரூக்ஸ்.
"போயிட்டு போறாங்கன்னு இல்லாம, கூப்பிட்டு கொடுடா" என்று முனறினான் ஹென்றி. க்ரூக்ஸ் திரும்பி ஹென்றியை முறைத்தான்.
"பரவாயில்ல...நீங்களே வச்சுக்கிங்க" என்று புன்னகைத்தாள் லிண்டா. முகமூடி அணிந்திருந்தாலும் லிண்டாவின் புன்னகை அவள் கண்களில் பேரொளியாக தெரிந்தது. அந்த பேரொளி ஏற்படுத்திய பிரமிப்பில் இருந்து மீளும் முன், "முதலாளி எங்களுக்கு சம்பளம் தர்றார்" என்றான் ஹென்றி.
"என்ன அதிசயமா இருக்கு?இப்பெல்லாம் சர்வர் யாரும் டிப்ஸ் வாங்குறதில்லையா?" என்று எகத்தாளமாக கேட்டாள் ஜெனிஃபர்.
"வாங்குறோம். ஆனா உங்கள மாதிரி இருக்கிறவங்க கிட்ட வாங்குறதில்லை" என்றான் க்ரூக்ஸ்.
"எங்கள மாதிரின்னா?" என்று கோபத்தோடு குரலை உயர்த்தினாள் ஜெனிஃபர்.
"ஜெனிஃபரின் குரல் உயர்ந்ததை எண்ணி சிரித்தான் க்ரூக்ஸ். வறுமையின் சாயலும், நேர்மையின் கம்பீரமும் க்ரூக்சின் முகத்திற்கு தனி அழகை தந்தது. க்ரூக்சின் முகம் அவனது குறும்பு சிரிப்போடு லிண்டாவின் மனதில் பதிந்தது.
"அத நான் என் வாயால வேற சொல்லனுமா?"
"எங்கள பார்த்தா உனக்கு அவ்வளவு கேவலமா இருக்கா? நாங்க நினைச்சா உனக்கு இந்த வேலை கூட இருக்காது."
"என்ன பண்ணுவீங்க?" என்று மேலும் சிரித்தான் க்ரூக்ஸ்.
"தைரியம் இருந்தா, உன் பெயர சொல்லு பார்ப்போம்."
"வின்சென்ட் க்ரூக்ஸ். உங்க பெயரையும் தைரியமா சொல்லுங்க பார்ப்போம்."
"ப்ளீஸ்...வாங்க நம்ம அறைக்கு போலாம்" என்று லிண்டா ஜெனிஃபரின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
அங்கிருந்த மற்றவர்கள் இரண்டிரண்டு பேராக சேர்ந்து அவர்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர்.

ஓரின சேர்க்கை. ஆணும், ஆணும் அல்லது பெண்ணும்,பெண்ணும் புணரும் புதிய கலாச்சாரம் துவங்கிய காலக்கட்டம் அது. இதை சமூகத்தில் அருவருப்பான சங்கதியாக பாவித்தனர். அரசு இப்பழ்க்கத்தை சட்ட விரோதம் என அறிவித்திருந்தது.ஆனால் சில ஹோட்டல்கள் வியாபார நோக்கில் ஓரின சேர்க்கையாளர்கள் ரகசியமாக சந்திக்க வசதி ஏற்படுத்தி தந்திருந்தது.

அடுத்த நாளே க்ரூக்ஸ் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டான். அதை தாயிடம் சொல்லும் தைரியம் இல்லாததால், இரயில் நிலைய பிளாட்பார பென்ச்சில் போஇ படுத்துக் கொண்டான் க்ரூக்ஸ். வேலை போன கவலையை விட, மீண்டும் அந்த பெண்ணின் அழகிய கண்களை எப்பொழுது பார்ப்போம் என்ற கவலை மிகுதியாக இருந்தது. வேலை இல்லாத காரணத்தால், எப்பொழுதையும் விட சீக்கிரமாகவே அன்று வீட்டிற்கு சென்றான் க்ரூக்ஸ். தாயை தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், பின்னால் தோட்டத்து மர ஊஞ்சலில் படுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தான். ஜன்னல் ஓரமாக கடந்து செல்லும் பொழுது, சிரிப்பொலி கேட்டு ஜன்னல் கதவை கை விட்டு திறந்து பார்த்தான். க்ரூக்சின் தாய், பக்கத்து வீட்டுக்காரியின் மடியில் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் தன்னை மறந்த நிலையில் இருந்ததோடு மட்டுமில்லாமல், ஆடைகள் இன்றியும் இருந்தனர். சட்டென்று கதவை மூடி விட்டு தலையை பிடித்துக் கொண்டான். மிகவும் நொந்து, பிரமை பிடித்தவன் போல் நடக்க ஆரம்பித்தான். எங்கு சென்றோம், என்ன செய்தோம் என்ற பிரக்ஞை இல்லாமல் பல மணி நேரங்கள் கழித்து வீட்டிற்கு நடைப்பிணமாக வந்து சேர்ந்தான்.

அடுத்த இடி தலையில் விழத் தயாராக இருந்தது. அவனது தாய் தற்கொலை செய்துக் கொண்டாள். எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும் நோய் குணமடையாததால் இறந்து விட்டாள் என அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். க்ரூக்சின் வேதனை அவன் கண்களில் இரண்டு மெல்லிய தண்ணீர் கோடுகளை வரைந்தது.

அழுது அழுது வீங்கிய கண்களுடன் பக்கத்து வீட்டுக்காரி க்ரூக்ஸ் அருகில் வந்தாள்.
"நீ வந்துட்டு போனது எங்களுக்கு தெரியும். அதான் உங்கம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டா? இனிமேல் உன் முகத்தில் எப்படி முழிக்கிறதுன்னு அவசரப்பட்டுட்டா. நான் எவ்வளவோ சொன்னேன். 'இருபது வருஷமா பழகிகிட்டு இருக்கோம்.ஒரு நாள் எப்படியும் தெரிய தான போகுது.. வருத்தபடாத..எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்னு' சமாதானம் சொல்லிட்டு போனேன்."
'என்ன..இருபது வருஷ பழக்கமா?' என்று மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானான்.
"இத்தனை நாள் என் உயிரா இருந்தவளே போயிட்டா. ஆனா நீ அவள பத்தி தப்பா நினைச்சிட கூடாதுன்னு தான் உங்கிட்ட பேசுறேன். நீ ரொம்ப சின்னப் பையன். உனக்கு சொன்னாலும் புரியாது."
க்ரூக்சிற்கு அவள் பேசியது மேலும் வெறுப்பை அதிகரிக்க தான் வைத்தது. மேலும், இருபத்தி ஏழு வயது ஆன தன்னை சிறுவன் என்று சொன்னது அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
"உங்கம்மாவும், நானும் குழந்தையில் இருந்தே ரொம்ப நெருங்கிய தொழிங்க. அவளுக்கு பதிமூனு வயசுலயும், எனக்கு பதினாறு வயசுலயும் கல்யாணம் ஆச்சு. பதினாலு வயசுல நீ பிறந்த. நீ பிறக்கிறப்ப உங்கம்மாவே ஒரு குழந்தை. 'ப்ளேக்' வந்து உங்கப்பா இறந்துட்டாரு. இருபது வயசுலேயே உங்கம்மா விதவை ஆயிட்ட. என் புருஷனுக்கு நான் நாலாவது மனைவி. அவருக்கு ஏழு குழந்தைங்க. கல்யாணத்தப்ப அவருக்கு அம்பத்தி ஆறு வயசு. எங்களுக்கு குழந்தை இல்ல. ஏன்னா..அவரால முடியலன்னு கூட சொல்லலாம்.
உங்கம்மாவும், நானும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருந்தோம். எதேச்சையா நடந்த ஒன்றிரண்டு ஸ்பரிசங்கள் எங்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்திச்சு. இப்படி ஆரம்பிச்சதுக்கு நாங்க காலப் போக்கில் அடிமை ஆயிட்டோம்.
உங்கம்மா கூட எத்தனையோ தடவ தப்பு பண்றோம்னு வருத்தப்படுவாங்க. அப்பெல்லாம் நான் தான் திரும்பி அவ மனச மாத்தி சுயநலமா என் உணர்ச்சிகளுக்கு வடிகால தேடிக்கிட்டேன். எல்லா தப்பும் என் மேல தான். நான் தான் பாவி. உங்கம்மா ரொம்ப நல்லவ. அவள மட்டும் தப்பா நினைச்சிடாத" என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
'வந்துட்டாங்க...பெருசா பேச. எனக்கெல்லாம் உணர்ச்சி இல்ல. நான் கட்டுப்பாடா இல்ல? தப்பு பண்ணிட்டு, தப்பில்ல...நல்லவன்னு சொல்லிட்டா, நல்லவள் ஆயிட முடியுமா?'

தனிமையும், வேலையின்மையும் க்ரூக்சை பாடாய்ப்படுத்தியது. அடுத்த வேலை உனவிற்கே வழியில்லாமல் க்ரூக்ஸ் தவித்தான். 'அப்பா இறந்தப்பா இருபது வயசு பொண்ணா அம்மாவும் இப்படி தான என்னை வச்சுக்கிட்டு தவிச்சிருப்பாங்க?' என்று மனதின் ஓரத்தில் ஒரு கேள்வி எழுந்தது.
'எல்லாம் சரி தான். ஆனாலும் அவங்க பண்ணது தப்பு' என்று மனதின் இன்னொரு ஓரம் சொன்னது.

அரசு வேலைக்கான விளம்பரம் செய்தி தாளில் வந்திருந்தது. அந்த வேலைக்கான விண்ணப்ப படிவம் ஒன்றை வாங்கி பூர்த்தி செய்து, சான்றுகளை சரி பார்த்து, அரசு அதிகாரியிடம் ஒப்புதல் பெற சென்றான். கொடுப்பவரின் முகத்தை பார்க்காமலே படிவத்தை வாங்கினாள் லிண்டா. படிவத்தில் இருந்த பெயர் ஏதோ நெருட க்ரூக்சின் முகத்தைப் பார்த்தாள்.
'அதே பிரகாசிக்கும் கண்கள்.'
'வேலைக்கு வந்திருக்கியா? எப்படி கிடைக்குதுன்னு பார்க்கிறேன்.'
"பெயர்?"
"வின்சென்ட் க்ரூக்ஸ்."
"முன்னாடி எங்க வேலை பார்த்தீங்க?"
"ஹோட்டலுல சர்வர இருந்தேன்."
"ஏன் அந்த வேலைய விட்டீங்க?"
"விடலை.. அனுப்பிட்டாங்க."
"என்னது? அனுப்பிட்டாங்களா..! ஏன்?" என்று குரலில் ஆச்சரியத்தை காட்டினாலும் உள்ளூற மகிழ்ந்தாள்.
"என் நேர்மையில் குறை கண்டுபிடிச்சாங்களாம்."
"ஹலோ... என்ன சார் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றீங்க. என்னை மன்னிச்சிடுங்க. இது ரொம்ப பொறுப்பான வேலை சார் இது" என்று படிவத்தை தள்ளி விட்டாள் லிண்டா. படிவம் மேஜையின் மீது இருந்து கீழே விழுந்தது. க்ரூக்ஸ் எந்த சலனமும் இல்லாமல் லிண்டாவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
"ப்ளீஸ்...இடத்த காலி பண்றீங்களா?" என்று மேஜையை தட்டினாள். க்ரூக்சின் பார்வை தீட்சன்யத்தைப் பொறுக்க முடியாமல் தடுமாற ஆரம்பித்தாள்.
"வேணும்னா ஒன்னு பண்ணுங்க. அந்த ஹோட்டல் மேனஜர் கிட்ட நன்னடத்தை சான்றிதழ் வாங்கிட்டு வாங்க. ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்" என்று லிண்டா சொன்னதை காதில் வாங்காமல், பையிலிருந்து சில்லறையை எடுத்து மேஜை மீது வைத்தான் க்ரூக்ஸ்.
"அன்னிக்கு வாங்காமலே போயிட்டீங்க!" என்று சிரித்து விட்டு க்ரூக்ஸ் போய் விட்டான்.
லிண்டாவிற்கு தூக்கி வாரிப் போட்டது. அவள் சுதாரிக்கும் முன், க்ரூக்ஸ் அங்கிருந்து வெளியேறிருந்தான். க்ரூக்ஸ் ஏதாவது தன்னைப் பற்றி வெளியில் சொல்லி, தன்னை அவமானப்படுத்தி விடுவான் என நடுங்கினாள் லிண்டா.

"அன்னிக்கு ஒருத்தவன் நம்மக்கிட்ட வம்பு பண்ணானில்ல..அவன் என்னை கண்டுபிடிச்சிட்டான். அவன பார்த்து, உன்மைய வெளியில சொல்லாமா இருக்கிறதுக்கு எவ்வளவு பணம் தரனும்னு கேட்க அவன் வீட்டுக்கு போனேன். ஆனா அவன் யாருகிட்டயும் சொல்லாம ஊர விட்டு ஓடிட்டான்" என்று மகிழ்ச்சியாக சொன்னாள் லிண்டா.
"சரி, அவன் ஒழிறான் விடு. புதுசா ஒரு முகமூடியை பெரிசா வாங்கனும்" என்று சொல்லியவாறே முகமூடி அணிந்து கொண்டே ஹோட்டல் பின்புற கதவில் நுழைந்தனர்.
வேறு ஏதவாது ஊரில் வேலை தேடி கொள்ளலாம் என்று க்ரூக்ஸ் யாரிடமும் சொல்லமால் கிளம்பி விட்டான். இரண்டு நாட்கள் அலைச்சலுக்குப் பின், ரிச்சர்ட் ஹாரி என்ற ஒரு மருத்துவரிடம் வேலையில் சேர்ந்தான். அங்கேயே தங்கி, மருத்துவமனையை பராமறிக்கும் பெரிய வேலை. ஆனால் மருத்துவமனை மூன்று அறைகளோடு சிறியது தான். அதில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள் இருந்தது. இன்னொரு அறையில் கட்டில் போடப்பட்டிருந்தது. மீதமிருந்த அறையில் எப்பொழுதும் மருத்துவர் மட்டும் தனியாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஒரு நோயாளி கூட, க்ரூக்ஸ் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து வரவில்லை. இதுவரை ஒருவர் கூட மருத்துவரிடம் வந்ததில்லை என பிறகு தான் தெரிந்து கொண்டான். அந்த ஊரில் யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பாதிரியாரிடம் தான் சென்றனர். தனக்கு சம்பளம் தருவாரா என க்ரூக்சுக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால் ரிச்சர்ட் சொன்ன சம்பளத்தை விட அதிகமகவே தந்தார். ஒன்றும் வேலை இல்லாததால் க்ரூக்சும் அங்கிருக்கும் ஏதாவது புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான். நாளடைவில் க்ரூக்சும், ரிச்சர்டும் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர்.

க்ரூக்ஸ் வேலைக்கு சேர்ந்த ஒன்றரை மாதத்திற்கு பின், முதல் தடவையக இரண்டு நபர் ரிச்சர்ட்டை காண வந்திருந்தனர். க்ரூக்சும், ரிச்சர்ட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அர்த்தமாக சிரித்துக் கொண்டனர்.
குரலை செருமிக் கொண்டு, "சொல்லுங்க என்ன பிரச்சனை?" என்று கம்பீரமாக கேட்டான் ரிச்சர்ட். இருவரும் எதுவம் பேசாமல் தலை குனிந்தவாறே இருந்தனர். மெதுவாக அதில் ஒருவன் தயங்கியபடியே, " நாங்க இரண்டு பேரும் தொழிற்சாலையில் வேலை செய்றோம். எங்களுக்கு யாரும் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் கொஞ்சம் தான் பணம் கிடைக்கும். இந்த ஊர்ல என் கஷ்டம் புரிந்த ஒரே ஆளு இவன் தான். ஏன்னா..இவனும் அதே கஷ்டம் தான் படுறான். அதே நிறைவேறா கனவுகள். ஓரே எதிர்பார்ப்புகள்.இப்படி தான் எங்க நெருக்கம் வளர்ந்துச்சு" என்று நிறுத்தினான்.
மற்றொருவன், "அப்படியே..நாங்க மனசாலும், உடம்பாலும் ஒன்னு சேர்ந்துட்டோம். எல்லாம் நல்லப் படியாக தான் நடந்துட்டிருந்துச்சு. ஆனா இந்த விஷயம் எப்படியோ நம்ம பாதிரியாருக்கு தெரிஞ்சிடிச்சு. இப்படி பண்ணா சீக்கிரம் செத்துருவீங்கன்னு மிரட்டினாரு. இனிமே நாங்க இரண்டு பேரும் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டாரு" என்றான்.
"வர..வர..தனி மனித விஷியங்களில் எல்லாம் பாதிரியார் தலையிட ஆரம்பிச்சுட்டாரு. சரி, இங்க எதுக்கு வந்தீங்க?" என்று கேட்டான் ரிச்சர்ட்.
"எங்களுக்கு ஏதாவது நோய் வருமான்னு தெரிஞ்சிக்கறதுக்காக?" என்றான் முதலாமவன்.
"அதில்ல...நாங்க சந்திக்கிறதுக்கு எங்களுக்கு ரகசியமா ஒரு இடம் வேணும். உங்களுக்கும் பாதிரியாருக்கும் ஆகாதுன்னு கேள்விப்பட்டோம்" என்றான் இரண்டாமவன்.
"பக்கத்து ரூம் காலியா தான் இருக்கு. எப்ப வேணும்னாலும் உபயோகப்படுத்திக்கிங்க" என்றான் ரிச்சர்ட்.
"பணம்..ஏதாவது?"
"நான் ஒன்னும் ஹோட்டல் வச்சில்ல" என்றான் ரிச்சர்ட்.
அவர்கள் சென்றவுடன்,"நம்ம நிலைமைய பர்த்தியா?" என்று சிரித்தான் ரிச்சர்ட்.
"நீங்க ஏன் இப்படி தப்புக்கு உடந்தையா இருக்கீங்க?" என்று கோவமாக கேட்டான் க்ரூக்ஸ்.
"என்ன தப்பு?"
"அதான்..இப்ப வந்தவங்கள ஓரே அறைக்கு போக அனுமதிச்சிட்டீங்களே! இயற்க்கைக்கு மாற இப்படி அசிங்கம் பண்றாங்களே..தப்பில்ல?"
"யாரு உனக்கு இது செயற்கையானதுன்னு சொன்னங்க?"
"இதெல்லாம் வெளிப்படையா யாரவது சொல்லுவாங்களா?"
"சரி, வெளிப்படையா பேசலைன்னா நீயே ஏதாவது முடிவுக்கு வந்துடுவியா? நாம, அந்த இரண்டு பேர் எல்லாம் இயற்கைக்குள்ள இருக்கிறவங்க. அந்த உணர்ச்சியும் இயற்கையானது. இது எப்படி தப்பு ஆகும்னு தெரியல. மருத்துவ ரீதியா எனக்கு தெரிஞ்சு எந்த பாதிப்பும் இல்ல. இன்னும் ஆழமா ஆராய்ச்சி நடக்குது. வேணும்னா பாரு சீக்கிரமே அரசும் இதை அங்கீகரிக்கும்" என்றான் ரிச்ச்ர்ட்.
"அப்ப..அந்த பழக்கம் சரிங்கிறீங்களா?"
"சரின்னு சொல்லலை...தப்பில்லன்னு சொல்றேன்."

கார் மேகங்கள் சூழ்ந்து வானம் ஓரே இருட்டாய் காட்சியளித்தது. இரவு ஒரு மணி ஆகியும் எதிர் வீட்டில் விளக்கு ஒளிராததைக் கண்டு குழம்பினாள் லிண்டா. எதிர் வீட்டு சுவர் ஏறி குதித்து, மாடிக்கு கம்பியை பிடித்து ஏறினாள். சத்தம் கேட்டு ஜெனிஃபர் வெளியில் வந்து, "நீயா?" என்று அதிர்ந்தாள்.
"உங்களுக்கு உடம்பு சரியில்லையா?"
"இல்ல. என் பொண்ணுக்கு தான்."
"தூங்கிட்டாளா?"
"தூங்கிட்டா."
"அப்ப வாங்க போலாம்" என்றாள் லிண்டா.
"எங்க ஹோட்டலுக்கா! ஏன் உன்னால ஒரு நாள கூட பொறுத்துக்க முடியாதா? இப்பெல்லாம் என் பொண்ணுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. ஆனா உனக்கு உன் சுகம் தான் முக்கியம். கல்யாணம் ஆகி குழந்தைன்னு ஒன்னு பிறந்தா தான் என் தவிப்பு உனக்கு புரியும்" என்றாள் ஜெனிஃபர்.
மாடியில் இருந்து தலை குப்புற விழுந்தது போல் உணர்ந்தாள் லிண்டா.
"என் பொண்ணுக்கு வேற பதினாலு வயசாகுது. இரண்டுங்கெட்டான் வயசு ஆரம்பிக்குது. நான் அவ பக்கத்தில் இருக்கனும்னு ஆசப்படுறேன். அவளும் நம்மள மாதிரி ஆயிடக் கூடாதில்ல?"
பதிலேதும் பேசாமல் மெளனமாக வந்த வழியே போய் விட்டாள் லிண்டா. ஜெனிஃபருடன் பழகியதற்காக முதல் முறையாக வருத்தப்பட்டாள்.

லிண்டாவிற்கு ஜெனிஃபரின் பெயர் கூட தெரியாது. லிண்டாவின் தாய் இறந்த பொழுது, துக்கம் விசாரிக்க பத்தோடு பதினொன்றாக வீட்டிற்கு நுழைந்தாள். பிறகு தினமும் வந்து ஆறுதல் சொன்னாள். லிண்டாவிற்கு தன் மீது அக்கறை செலுத்த மனிதர்கள் இல்லையே என்று வருத்தப்பட்ட சூழலில் எல்லாம் ஜெனிஃபர் வந்ததால், ஜெனிஃபர் மேல் அளவு கடந்த அன்பு லிண்டாவிற்கு எழுந்தது.
நன்றாக பழக ஆரம்பித்த ஒரு நாள், " என் புருஷன் என்னை தினமும் குடிச்சுட்டு வந்து மிருகத்த அடிக்கிற மாதிரி அடிக்கிறான். சிகரெட்டுல சுடுறான்" என்று துணிகளை அவிழ்த்து காண்பித்தாள் ஜெனிஃபர்.
முதலில் கண்ணை மூடிய லிண்டா ஜெனிஃபரின் உடம்பைப் பார்த்து அதிர்ந்து கண் கலங்கினாள். இது தான் சமயம் என்று லிண்டாவை வெறும் உடம்புடன் கட்டி பிடித்துக் கொண்டு, "உனக்கும் என் நிலைமை வரக் கூடாது. ஆம்பிள்ளைங்க எல்லாம் வக்கிரம் பிடிச்சவங்க" என்றாள் ஜெனிஃபர். ஜெனிஃபர் மேல் இருந்த அன்பு, அவள் படும் துன்பம், உரசல் தந்த ஆனந்தம் என லிண்டாவும் ஜெனிஃபரின் இச்சைக்கு தடை சொல்லவில்லை. ஆண்கள் மேல் வெறுப்பை லிண்டாவிற்கு வளர்த்துக் கொண்டே இருந்தாள் ஜெனிஃபர்.
'குழந்த ஒன்னு பிறந்தா தான் தவிப்பு புரியுமாமே! நான் ஆம்பிள்ளைங்கள கல்யாணமும் பண்ண கூடாதுன்னு சொன்னதெ அவங்க தான். அவங்க பொண்ணு எங்கள மாதிரி ஆயிடக் கூடாதாம். அப்ப நான் எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு பரவாயில்ல. பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம்! எனக்கு உடம்பு சரியில்லாத பொழுது, எல்லாம் அங்க வந்த சரியா போகும்னு இழுத்துட்டு போனாங்களே. ச்சே..இத்தன நாளா அவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டிருக்கு. எவ்வளவு பெரிய அசிங்கத்த பண்ணிட்டோம். பகல்ல ஒரு வாழ்க்க, இரவுல ஒரு வாழ்க்க. சரியான தூக்கம் இல்ல. எப்ப மாட்டிகிட்டு மானம் போகுமோன்னு ஒரு பயம் வேறு. இனிமே அவங்க பக்கமே திரும்பக் கூடாது' என்று பலவாறு யோசித்தப்படியே தூங்கி விட்டாள். பல நாட்களாக சூழ்ந்திருந்த கரு மேகம், லிண்டா தூங்கி எழும் பொழுது தென்படவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, க்ரூக்ஸ் தன் ஊரிற்கு மீண்டும் வந்தான். நேராக சென்று ஹென்றியை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்றான். இரவு பதினொரு மணியில் இருந்து இரண்டு மணி வரை ஹோட்டலின் பின்புற தெருவில் மறைந்து, லிண்டாவிற்காக காத்திருந்தான். ஆனால் லிண்டாவை தவிர யார் யாரோ வந்தார்கள். தன் அதிர்ஷ்டத்தை நொந்தவாறே வீட்டிற்கு திரும்பினான் க்ரூக்ஸ்.
காலையில் ஹென்றி வந்து எழுப்பி, செய்தி தாளை நீட்டி படிக்கச் சொன்னான். 'மருத்துவர் ரிச்சர்ட் ஹாரி மர்மமான முறையில் வெட்டப்பட்டு இறந்தார். பாதிரியார் சம்பந்தபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறார்' என்று செய்தி வந்திருந்தது.
மீண்டும் வேலைப் போனதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் பொழுதே, பக்கத்து வீட்டுக்காரி வந்து விசாரித்துக் கொண்டிருந்தாள். கிளம்பி செல்லலாம் என பக்கத்து வீட்டுகாரி திரும்பும் பொழுது, வாசலில் லிண்டா நின்றிருந்தாள்.
"நீ ஊர விட்டு போன அன்னிக்கு, இந்த பொண்ணு உன்னைத் தேடி வந்துச்சுப்பா" என்று சொல்லி விட்டு போய் விட்டாள்.
லிண்டா தலை குனிந்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"உங்கள எப்படியும் பார்த்துடனும்னு நேத்து ஹோட்டல் பின்னாடி காத்திருந்தேன். நீங்க வரலியா..உடம்பு சரியில்லன்னு நினைச்சு கவலைப்பட்டேன். ஆனா நல்லா தான் இருக்கீங்க போலிருக்கு. எப்படி நான் வந்தது தெரியும்?" என்று கேட்டான் க்ரூக்ஸ்.
"இந்த தெருவுல ஒருத்தர் கிட்ட நீங்க வந்தா சொல்ல சொன்னேன். அவர் தான் சொன்னாரு. அன்னிக்கு உங்க படிவத்த தள்ளி விட்டதுக்கு மன்னிச்சுடுங்க. அன்னைக்கே உங்ககிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்தேன். இப்பெல்லாம் நான் அங்கெல்லாம் போறதில்ல. பண்ண தப்ப நினைச்சு இப்ப வருந்துறேன்" என்றாள் லிண்டா.
"என்ன தப்பு பண்ணீங்க?"
"ஏன் திரும்பி அதையே ஞாபகப்படுத்துறீங்க? அவங்களோடு பழகுறதை விட்டுட்டேன். இனிமே அந்த தப்ப பண்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்."
"அதெல்லாம் தப்பு இல்லைங்க. நான் தான் கிணத்து தவளையா இருந்தேன் நினைச்சா நீங்களும் அப்படி தான் இருந்திருக்கீங்க."
லிண்டா க்ரூக்ஸ் சொன்னதை கேட்டு அதிசயித்து, "சரி, எனக்காக ஏன் காத்திருந்தீங்க?" என்று கேட்டாள்.
"அந்த பிரகாசமான கண்ண பார்க்கலாம்னு தான்" என்று புன்னகைத்தான் க்ரூக்ஸ்.
ஒரு நிமிடம் மெளனமாக இருந்து விட்டு, " நான் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். வேலைக்கு சேர்ந்துக்கிறீங்களா?" என்று கேட்டாள்.
"திரும்பி சர்வராவா?" எனக் கேட்டு, மேலே பார்த்து யோசித்தான் க்ரூக்ஸ்.
"பிடிச்சிருந்தா முதலாளியா சேர்ந்துக்கோங்க."

1 கருத்து:

Vijay சொன்னது…

I enjoyed the narration and the twist.Keep writing :)